இலங்­கையில் தஞ்­ச­ம­ளிக்­கப்­பட்­டுள்ள ரோஹிங்­யா அக­திகள் மீது பௌத்த கடும்­போக்­கா­ளர்­க­ளினால் நடத்­தப்­பட்ட தாக்­குதல் உள்­ளூ­ரிலும் சர்­வ­தேச அள­விலும் கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

சொந்த நாட்டில் உயி­ரா­பத்­துக்­க­ளுக்கு உள்­ளாகி பாது­காப்பு தேடி 6 வரு­டங்­க­ளுக்கு முன்னர் மியன்­மாரில் இருந்து வெளி­யே­றி­ய­வர்­க­ளுக்கே அக­தி­க­ளுக்­கான ஐ.நா. தூத­ர­கத்தின் அனு­ச­ர­ணையில் அர­சாங்­கத்­தினால், இலங்­கையில் அப­ய­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இலங்­கையின் சட்ட ரீதி­யா­கவும், சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டை­யி­லுமே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதில் எந்­த­வி­த­மான சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டு­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.  

இவர்கள் இலங்கை அர­சாங்­கத்­திடம்  தஞ்­சம்­கோரி, நாட்­டிற்குள் அத்­து­மீறிப் பிர­வே­சித்­த­வர்­க­ளல்ல. வழி தெரி­யாமல் வட கடற்­ப­ரப்­பி­னுள்ளே இவர்­க­ளு­டைய படகு ஒதுங்­கி­ய­போது, இலங்­கையின் கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி பிர­வே­சித்­தார்கள் என்ற கார­ணத்­திற்­காக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இவர்­களை கடற்­ப­டை­யினர் கைது செய்து நாட்­டிற்குள் கொண்டு வந்­தி­ருந்­தனர். 

இந்­திய அகதி முகாம் ஒன்றில் தங்­கி­யி­ருந்த இவர்கள், மேற்­கத்தேய நாடு ஒன்றில் அபயம் தேடு­வ­தற்­காக, அங்­கி­ருந்து புறப்­பட்­டி­ருந்­தார்கள். கடல் வழி­யாகப் புறப்­பட்ட அவர்­க­ளு­டைய படகு இலங்கைக் கடற்­ப­ரப்­பினுள் புகுந்த வேளை­யி­லேயே அவர்­களை, கடற்­ப­டை­யினர் கைது செய்து காங்­கே­சன்­துறை பொலி­ஸா­ரிடம் கைய­ளித்­தி­ருந்­தார்கள்.

பொலிஸார் மல்­லாகம் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து, குடி­வ­ரவு, குடி­க­யல்வு சட்ட விதி­களை மீறி­னார்கள் என்ற கார­ணத்­திற்­காக அவர்­களை, மிரி­ஹா­னையில் உள்ள அந்தத் திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மான இடைத்­தங்கல் முகா­முக்கு அனுப்பி வைக்­கு­மாறு மல்­லாகம் நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார். 

இந்த ரோஹிங்­யா அக­திகள் பற்றி அக­தி­க­ளுக்­கான ஐ.நா. தூத­ரகம் - யூ.என்­.எச்.­சி.ஆர். அதி­கா­ரி­க­ளுக்கும் தகவல் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து அந்த அதி­கா­ரி­களும் இவர்­க­ளு­டைய நலன்­களில் அக்­கறை செலுத்­தி­யி­ருந்­தனர்.

யூ.என்­.எச்.­சி.­ஆரின் பாது­காப்பில் இருந்த வேளை நடந்த தாக்­குதல்

மிரி­ஹான முகாமில் தங்­கி­யி­ருந்த வேளை, ரோஹிங்­யா பெண் ஒருவர் மே மாதம் 19 ஆம் திகதி அந்த முகாமின் பாது­காப்­புக்குப் பொறுப்­பாக இருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒரு­வ­ரினால் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து, அங்கு அவர்­க­ளுக்கு  உரிய பாது­காப்பு இல்லை என்ற கார­ணத்­திற்­காக 31 ரோஹிங்­யா அகதி­க­ளையும் முழு­மை­யாகப் பொறுப்­பேற்ற அக­தி­க­ளுக்­கான ஐ.நா. தூத­ரக அதி­கா­ரிகள், கல்­கிஸ்ஸை பகு­தியில் அவர்­க­ளுக்­கென வீடு ஒன்றை வாட­கைக்குப் பெற்று, அங்கு பாது­காப்­பாகத் தங்க வைத்­தி­ருந்­தார்கள். 

மியன்மார் அக­தி­க­ளான ரோஹிங்­யாக்கள் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த அக­தி­க­ளுக்­கான ஐ.நா. தூத­ர­கத்தின் பாது­காப்­பான இல்லம் தொடர்பில் அரச புல­னாய்­வா­ளர்கள், பிர­தேச பொலிஸார் உள்­ளிட்ட பாது­காப்புத் துறை அதி­கா­ரி­க­ளுக்கு உரிய முறையில் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆயினும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கடும்­போக்கைக் கொண்­டுள்ள தீவிர பௌத்த மத­கு­ரு­மார்­களின் தலை­மையில் சிங்­கள பௌத்த தீவி­ர­வா­திகள் அடங்­கிய குழு­வொன்று செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்த ரோஹிங்­யா அகதிகள் தங்­கி­யி­ருந்த வீட்­டைச்­சுற்றி வளைத்­தனர். 

மியன்­மாரில் பௌத்த பிக்­கு­களைக் கொலை செய்த முஸ்லிம் பயங்­க­ர­வா­தி­களே இந்த வீட்டில் தங்­கி­யி­ருப்­ப­தா­கக்­கூறி, அவர்­களை நாட்­டை­விட்டு வெளி­யேற்ற வேண்டும் எனக் கோரி, அவர்கள் மீது தாக்­குதல் நடத்த முற்­பட்­டி­ருந்­தனர். 

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சிங்­கள ராவய என்ற தீவி­ர­வாத அமைப்பின் தலை­வ­ரு­மா­கிய அக்­மீ­மன தயா­ரட்ன தேரரின் தலை­மையில் சென்ற இக்­கு­ழு­வினர், பௌத்த பிக்­கு­களின் உத்­த­ர­வுக்­க­மைய அந்த மாடிக்­கட்­ட­ட­மா­கிய வீட்டின் முன்­வா­யிலை உடைத்து ஜன்­னல்­களை அடித்து நொறுக்கி, உள்ளே புக முயற்­சித்­தி­ருந்­தனர். இந்தத் தாக்­குதல் சம்­ப­வத்­தின்­போது 3 பொலிஸார் காய­ம­டைந்­தி­ருந்­தனர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

அக­தி­களைக் கைது செய்ய வேண்­டி­யி­ருந்­தது....

இதனால் அந்த வீட்டில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த 16 குழந்­தைகள், 7 பெண்கள் உள்­ளிட்ட ரோஹிங்­யா அகதிகள் என்ன செய்­வ­தென்று தெரி­யாமல் பெரும் அச்­சத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர். 

இத­னை­ய­டுத்து, சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார் கல­கக்­கா­ரர்­களைப் பெரும் சிர­மத்­திற்கு மத்­தி­யி­லேயே கட்­டுப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது.  

இந்த மியன்மார் அக­தி­களை நாட்டில் இருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்ற வேண்டும் என்று கல­கக்­கா­ரர்கள் பொலிஸார் முன்­னி­லையில் பெரும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். இதனால், கல­கக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தற்­காக, ரோஹிங்­யாக்­களை பொலிஸார் கைது செய்து தம்­முடன் கொண்டு சென்­றார்கள். இந்தத் தக­வலை பொலிஸ் ஊட­கத்­துறை பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவான் குண­சே­கர ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்தார்.  

சில மணித்­தி­யா­லங்­க­ளி­லேயே பொலிஸார் அந்த அக­தி­களை கல்­கிஸ்ஸை யூ.என்.­எச்.­சி.­ஆரின் பாது­காப்பு இல்­லத்தில் மீண்டும் கொண்டு வந்து விட்­டி­ருந்­தனர். இதனைக் கேள்­வி­யுற்ற பௌத்த மத­கு­ருக்கள் தலை­மை­யி­லான கல­கக்­கும்பல் மீண்டும் வந்து ரோஹிங்­யாக்­களை தாக்க முயற்­சித்­தனர். அத்­துடன் இவர்­க­ளுக்கு யூ.என்.­எச்.­சி.ஆர். அதி­கா­ரி­களே தஞ்­ச­ம­ளித்­தி­ருந்­தார்கள் என்­பதை அறிந்து, கொழும்பில் உள்ள ஐ.நா. தலை­மைய­க­த்தின் எதி­ரிலும் இந்த அக­தி­களை உட­ன­டி­யாக நாட்டில் இருந்து வெளி­யேற்ற வேண்டும் எனக்­கோரி ஆர்ப்­பாட்டம் ஒன்­றையும் நடத்­தி­யி­ருந்­தனர்.

அர­சாங்­கத்­தி­னதும், ஐக்கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான தூத­ர­கத்­தி­னதும் பொறுப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த அக­திகள் மீது அத்­து­மீ­றிய வகையில் பௌத்த மத கடும்­போக்­கா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தலை முறி­ய­டித்து, வெளி­நாடு ஒன்றைச் சேர்ந்த அந்த அக­தி­களின் பாது­காப்பை பொலி­ஸா­ரினால் உறுதி செய்ய முடி­யாமல் போய்­விட்­டது.

கல­கத்தில் ஈடு­பட்­ட­வர்­களை அடக்கி அவர்­களைக் கலைந்து போகச்­செய்ய முடி­யாத நிலை­யி­லேயே பொலிஸார் இருக்­கின்­றார்கள் என்­பது இதன்மூலம் புல­னா­கி­யி­ருக்­கின்­றது. கட்­டுப்­பா­டு­களை மீறு­கின்­ற­வர்கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுத்து, சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலைநாட்ட முடி­யாத வகை­யி­லேயே இந்த நாட்டின் பொலிஸ் திணைக்­களம் செயற்­பட்டு வரு­கின்­றது என்­ப­தையும் இந்தச் சம்­பவம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

ஆபத்­தான நிலைமை

ரோஹிங்­யா அக­தி­களை மியன்மார் நாட்டின் முஸ்லிம் பயங்­க­ர­வா­திகள் என சித்­த­ரித்து, அவர்கள் தங்­கி­யி­ருந்த வீட்டின் மீது தாக்­குதல் நடத்­து­வ­தற்கு பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் திட்­ட­மிட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது குறித்த தகவல் புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு எட்­டி­யி­ருந்­தது. இருப்­பினும், அந்த முயற்சி கைகூ­டாத வகையில் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக, அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எதுவும் பொலிஸா­ரினால் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த நாட்டின் அர­சி­யலில் மட்­டு­மல்­லாமல், சட்டம் ஒழுங்கு விட­யங்­க­ளிலும் பௌத்த மத கடும்­போக்­கா­ளர்­களின் கைகளே ஓங்­கி­யி­ருக்­கின்­றன என்ற கசப்­பான உண்மை ரோஹிங்­யா அக­திகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலின் மூலம் ஓங்கி ஒலித்­தி­ருக்­கின்­றது.

ஜன­நா­ய­கத்­தையும் நாட்டில் நீதி­யான ஆட்­சி­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்க ஆட்­சி­ அ­தி­கா­ரத்தின் கீழ், இத்­த­கைய நிலைமை  நில­வு­கின்­றது என்­பதை நியா­ய­மான சிந்­த­னை­யு­டைய எவரும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்கள். அத்­துடன் இந்த நிலைமை மிகவும் ஆபத்­தா­னது என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. 

இந்த நாட்டில் தமி­ழர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக இன ரீதி­யா­கவும், மத ரீதி­யா­கவும் அடக்­கு­மு­றைகள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன. மனித நாக­ரி­கமும், விஞ்­ஞான தொழில்­நுட்­பமும் வளர்ச்சி பெற்­றுள்ள ஒரு காலப்­ப­கு­தியில் ஜன­நா­யகம் என்ற அர­சியல் நாக­ரிகப் போர்­வையின் கீழ் தொடர்­கின்ற இந்த இன ஒடுக்கு முறை­யா­னது, ஏற்­க­னவே இலங்கை அர­சாங்­கத்தை உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மட்­டங்­களில் பெரும் சிக்­கல்­க­ளுக்குள் தள்­ளி­யி­ருக்­கின்­றது. 

அந்த அடக்­கு­முறை போக்கில் ருசி கண்ட பௌத்த கடும் போக்­கா­ளர்கள், அல்­ல­லுற்று உயி­ருக்­கு அஞ்சி ஓடும் வழியில் கரை­யொ­துங்­கிய பெண்­க­ளையும் சிறு­வர்­க­ளையும் பெரும் எண்­ணிக்­கையில் கொண்­டி­ருந்த ரோஹிங்­யா அக­திகள் மீதும் தமது கைவ­ரி­சையைக் காட்­டி­யி­ருக்­கின்­றனர். மியன்மார் முஸ்லிம் பயங்­க­ர­வா­திகள் என சித்­த­ரித்து அவர்­களை நாட்டில் இருந்து உட­ன­டி­யாக வெளி­யேற்றும் நோக்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்தத் தாக்­கு­த­லா­னது, மனி­தா­பி­மா­னத்தை மீறிய மிக மோச­மான செய­லா­கவே, பல­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

யூ.என்.­எச்.­சி.­ஆரின் முகம் சுளிப்பும் பூஸா முகா­முக்­கான இடமாற்­றமும்

இந்த நாட்டில் யுத்த மோதல்கள் கார­ண­மாக இடம்­பெ­யர நேர்ந்­தி­ருந்த உள்­ளூரில் இடம்­பெ­யர்ந்த அக­திகள் மற்றும் கடல் கடந்து, அயல்­நா­டா­கிய இந்­தி­யாவில் தமி­ழ­கத்­திற்கு இடம்­பெ­யர்ந்­தி­ருந்த அக­தி­களின் நலன்­களில், முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக (யூ.என்­.எச்­.சி.ஆர்.) அக­தி­க­ளுக்­கான ஐ.நா. தூத­ரகம் பணி­யாற்றி வரு­கின்ற நிலையில் இந்த ரோஹிங்­யா அக­தி­களைத் தாக்­கு­வ­தற்கும் அவர்­களைப் பல­வந்­த­மான இங்­கி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்கும் மேற்­கொள்­ளப்பட்ட பௌத்த தீவி­ர­வா­தி­களின் செயலால் ஐ.நா. விசே­ட­மாக அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ளது. 

குறிப்­பாக கல்­கிஸ்ஸையில் யூ.என்­.எச்.­சி.­ஆ­ரினால் ரோஹிங்­யா அக­தி­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பாது­காப்பு இல்­லத்­திற்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பகைமை போக்கைக் கடைப்­பி­டித்து வரு­கின்ற கடும்­போக்­கா­ளர்­க­ளான பௌத்த தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தலில் இருந்து பொலி­ஸா­ரினால் பாது­காப்பு வழங்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. இதனால் உட­ன­டி­யா­கவே இந்த அக­திகள் ஐ.நா. அதி­கா­ரி­களின் ஒப்­பு­த­லுடன் காலியில் உள்ள பூஸா முகா­முக்கு பொலிஸா­ரினால் அழைத்துச் செல்­லப்­பட்­டார்கள். 

இந்த அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­கா­கவே, இரா­ணு­வத்­தி­ன­ரதும், பயங்­க­ர­வாதப் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளி­னதும் பொலி­ஸா­ரி­னதும் உச்சக்கட்ட பாது­காப்பு மிகுந்த இட­மாகக் கரு­தப்­ப­டு­கின்ற பூஸா முகா­முக்கு, இவர்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டார்கள் என்று பொலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பயங்­க­ர­வாதத் தடுப்பு நட­வ­டிக்­கைக்­காக விசே­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்ள இந்த பூஸா முகா­மா­னது, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­கின்ற சந்­தேக நபர்­களை தடுத்து வைத்து விசா­ரணை செய்யும் முக்­கிய இட­மாக விளங்­கு­கின்­றது. பயங்­க­ர­வா­திகள் என அர­சாங்­கத்­தி­னாலும் சிங்­களத் தரப்­பி­ன­ராலும் சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் இணைந்­தி­ருந்­தார்கள், அந்த அமைப்­பி­ன­ருக்கு உத­வி­னார்கள், அந்த அமைப்­பி­ன­ருடன் இணைந்து படை­யினர் மீது தாக்­குதல் நடத்­தி­ய­துடன், பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள் என்ற சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளையே இங்கு தடுத்து வைக்­கப்­ப­டு­வது வழக்கம். 

இங்கு விசா­ர­ணைக்­காகத் தடுத்து வைக்­கப்­பட்ட பலர் மிக மோச­மான சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்­ளா­கி­ய­தாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முறைப்­பாடு செய்த நீண்ட வர­லாறும் உள்­ளது. அது மட்­டு­மல்­லாமல் அங்கு கொண்டு செல்­லப்­பட்ட பின்னர் ஆட்கள் காணாமல் போயி­ருப்­ப­தா­கவும் முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்ற சந்­தேகத்தில் கைது செய்­யப்­பட்­ட­வ­ர்களை விசா­ரணை செய்­வ­தற்­காக, பல்­வேறு வடி­வங்­க­ளி­லான விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு இசை­வாக சிறு சிறு விசா­ரணை அறை­களைக் கொண்ட, பூஸா முகா­மி­லேயே, பௌத்த கடும் போக்­கா­ளர்­க­ளு­டைய எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் மற்றும் தாக்­குதல் செயற்­பா­டு­களில் இருந்து பாது­காப்­ப­தற்­காக ரொஹிங்­யா அக­திகள், இப்­போது பொலி­ஸா­ரினால் தங்க வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

ரொஹிங்­யா அக­திகள் மீதான தாக்­கு­தலின் பின்­னணி

மல்­லாகம் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்­க­மைய குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் மிரி­ஹான இடைத்­தங்கல் முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த ரொஹிங்­யா அக­தி­களில் பெண் ஒருவர் சுக­வீ­ன­ம­டைந்­தி­ருந்தார். காய்ச்சல் பீடித்­தி­ருந்த அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­காக அங்­குள்ள அதி­கா­ரிகள் அவரை, கடந்த ஜுன் மாதம் 16 ஆம் திகதி களு­போ­விலை வைத்­தி­ய­சா­லைக்கு பொலிஸ் பாது­காப்­புடன் அனுப்பி வைத்­தார்கள். 

இந்தப் பெண்­ணுக்­கான சிகிச்­சைகள் முடி­வ­டைந்து அவர் குண­மா­கி­ய­தை­ய­டுத்து, அவரை மீண்டும் அழைத்துச் செல்­லு­மாறு வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் மிரி­ஹான இடைத்­தங்கல் முகாம் அதி­கா­ரி­க­ளுக்கு கடந்த ஜுன் மாதம் 19 ஆம் திகதி தொலை­பேசி மூல­மாக அறி­வித்­தது. அந்த நேரம் அன்­றைய கடமை முடிந்­தி­ருந்த, அங்கு கடமை புரி­கின்ற உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர், அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு களுபோ­வில வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­றுள்ளார். 

வைத்­தி­ய­சாலை அதி­கா­ரி­க­ளிடம் தான் மிரி­ஹான முகாமில் கட­மை­யாற்­று­கின்ற பொலிஸ் அதி­காரி என தெரி­வித்து, அந்தப் பெண்ணை பொறுப்­பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அந்தப் பெண்ணை பொர­லஸ்­க­முவ லெகு­மால என்ற இடத்­திற்கு தனது சொந்­தக்­காரில் கொண்டு சென்ற அவர் அன்­றைய இரவு முழுதும் அவரை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்தார். இந்த விடயம் வெளிச்­சத்­திற்கு வந்­த­துடன், அந்த பொலிஸ் அதி­கா­ரிக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் நடை­பெற்­றன. விசா­ர­ணை­களின் பின்னர் நுகே­கொடை கங்­கு­ட­வெல நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட அவரை பிணையில் செல்ல அனு­ம­தித்த நீதிவான் வழக்கை எதிர்வரும் 8 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்­தி­ருந்தார். 

அது மட்­டு­மல்­லாமல் மிரி­ஹான இடைத்­தங்கல் முகாமின் பாது­காப்­புக்­காகப் பணி­யாற்­று­கின்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரா­லேயே அங்கு தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த அகதிப் பெண் ஒருவர் பாலியல் வன்­பு­ணர்­வுக்குட்­ப­டுத்­தி­யி­ருந்­ததைச் சுட்­டிக்­காட்டி, இதனால் அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த ரோஹிங்­யா அக­தி­களைப் பாது­காப்­பான ஓரி­டத்­திற்குக் கொண்டு செல்­லு­மாறும் நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார். 

இத­னை­ய­டுத்து, யூ.என்.­எச்.­சி.ஆர். அதி­கா­ரி­க­ளினால் கல்­கி­ஸ்ஸையில் ஒழுங்கு செய்­யப்­பட்ட ஒரு பாது­காப்பு இல்­லத்தில் அந்த அக­திகள் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். 

ரோஹிங்­யா பெண் மீதான வல்­லு­றவு வழக்கில் தண்­டனை பெறு­வதில் இருந்து தப்­பு­வ­தற்­காக, ரோஹிங்­யா அக­தி­களை மியன்மார் முஸ்லிம் பயங்­க­ர­வா­திகள் என சித்­த­ரித்து முக­நூலில் செய்­யப்­பட்ட பிர­சா­ரத்தைத் தொடர்ந்தே கல்­கிஸ்ஸையில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த  அவர்­களை அங்­கி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­காக வன்­மு­றையில் ஈடு­பட்ட கும்பல் ஒன்று சேர்ந்­தனர். அதே பொய்ப்­பி­ர­சாரம் கார­ண­மாக ரோஹிங்­யா முஸ்லிம் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக அணி திரள்­வ­தற்­கான தலை­மையை சிங்­கள ராவய அமைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அக்­மீ­மன தயா­ரட்ன தேரர் வழங்­கி­யி­ருந்தார். அவ­ருடன் அந்த அமைப்பின் செய­ல­ாளரும் ஏனைய சில பௌத்த பிக்­கு­களும் ரோஹிங்­யா அக­திகள் தங்­கி­யி­ருந்த வீட்டின் மீதான தாக்­கு­தலில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

ரோஹிங்­யா அக­திகள் 31 பேரையும் முஸ்லிம் பயங்­க­ர­வா­தி­க­ளாகச் சித்­த­ரித்து, கடும்­போக்­கா­ளர்­க­ளான பௌத்த மத குருக்­களின் உத­வி­யோடு அவர்­களை நாட்­டை­விட்டு வெளி­யேற்­றி­விட்டால், ரோஹிங்­யா பெண்ணை வன்­பு­ணர்­வுக்குட்­ப­டுத்­திய குற்­றத்தில் இருந்து தப்­பி­வி­டலாம் என்ற நோக்­கத்­தி­லேயே கல்­கிஸ்ஸை தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­ற­தாக விசா­ர­ணை­களில் இருந்து தெளி­வா­கி­யி­ருக்­கின்­றது. 

பொலிஸார் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை

கல்­கிஸ்ஸை வீட்டை, அக்­மீ­மன தய­ாரட்ன தேரர் மற்றும் சிங்­கள ராவய அமைப்பின்  பொதுச் செய­லாளர் அரம்­பே­பொல ரத்­தன தேரர் உள்­ளிட்ட முக்­கிய பௌத்த மத குரு­மார்கள் அடங்­கிய குழு­வினர் தலை­மை­யேற்­றி­ருந்த அதே­வேளை, அந்த கும்பல் கல்­கிஸ்ஸை வீட்டின் மீது தாக்­குதல் நடத்­து­வ­தற்­காகச் சென்­ற­தையும், அந்த வீட்டை அவர்கள் முற்­று­கை­யிட்­டி­ருந்­த­தையும், தாக்­குதல் நடத்­தி­ய­தையும் காணொளிப் படங்கள் மூல­மாக முக­நூலில் தர­வேற்றி, முஸ்லிம் பயங்­க­ர­வா­திகள் கல்­கி­ஸ்ஸையில் கூடா­ர­மிட்­டி­ருப்­ப­தா­கவும், அவர்­களை வெளி­யேற்­று­வ­தற்­காக அனை­வரும் திரண்டு வர­வேண்டும் எனவும் அறை­கூவி கூட்டம் கூட்­டிய செயற்­பாடும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது.

இந்தத் தாக்­குதல் சம்­ப­வத்தில் ஈடு­பட்ட பௌத்த மத தேரர்கள் உள்­ளிட்­ட­வர்கள் அனை­வ­ரையும் சம்­ப­வத்­தின்­போது எடுக்­கப்­பட்ட காணொளி படக்­காட்­சி­களின் மூலம் பொலிஸார் அடை­யாளம் கண்­டி­ருந்த போதிலும் அவர்­களைக் கைது செய்­வ­தற்கு பொலிஸார் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எத­னையும் எடுக்­க­வில்லை. 

கல்­கிஸ்ஸை தாக்­கு­தலில் பங்­கேற்­றி­ருந்த பௌத்த மத தேரர்­களை காவி உடை தரித்த குண்­டர்கள் என்று ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர வர்­ணித்­துள்ளார். அதே­வேளை அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மா­கிய ராஜித சேனா­ரத்ன தாக்குதல் நடத்தியவர்களை மிரு­கங்­களைப் போல கீழ்த்­த­ர­மான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் என குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் இந்தத் தாக்­கு­தலை இந்த அமைச்­சர்கள் இரு­வரும் அர­சாங்கத் தரப்பில் கடு­மை­யாகக் கண்­டித்­தி­ருந்­தனர். அதே­வேளை, சட்டம் ஒழுங்­கிற்குப் பொறுப்­பான அமைச்சர் சாகல ரத்­நா­யக்க கல்­கிஸ்ஸை தாக்­குதல் சம்­ப­வத்தில் பொலிஸார் தமது கட­மை­களைச் சரி­வர செய்­யாமல் கடமை தவ­றி­யி­ருக்­கின்­றனர் என கண்­டித்­துள்ளார். 

இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே கல்­கிஸ்ஸை தாக்­கு­தலில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரட்ன தேரர் உட்­பட 8 பேரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இவர்­களை கல்­கிஸ்ஸை நீதி­மன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்­ளது. 

கடும்போக்கு மாற வேண்டும்

பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக தமது சொந்த இடங்­களில் இருக்க முடி­யாமல் அல்­லது வாழ முடி­யாமல் அபயம் தேடி வரு­கின்ற அக­தி­களைப் பொறுப்­பேற்று, அவர்­க­ளுக்­கு­ரிய வச­தி­களை வழங்கி தற்­கா­லி­க­மாகத் தங்க வைத்­தி­ருக்க வேண்டும் என்று ஐ.நா­.வுடன் செய்து கொள்­ளப்­பட்ட ஓர் ஒப்­பந்தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே மியன்­மாரில் இருந்து இலங்கை வந்த ரோஹிங்­யா 30 அக­தி­க­ளுக்கு அப­ய­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஏப்ரல் மாதம் இலங்­கைக்குள் பிர­வே­சித்த இவர்­களில் ஒரு பெண்­ணுக்கு இங்கு வந்த பின்னர் ஒரு குழந்தை பிறந்­த­தை­ய­டுத்து, அவர்­களின் எண்­ணிக்கை 31 ஆக உயர்ந்­துள்­ளது. 

இதற்கு முதல் இரண்டு தட­வை­களில் ரோஹிங்­யா அக­திகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். யூ.என்.­எச்.­சி.ஆர். - அக­தி­க­ளுக்­கான ஐ.நா. தூத­ர­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் தற்­கா­லி­க­மாக அவர்­களை அரசாங்கம் இங்கு தங்க வைத்திருந்தது. பின்னர் அவர்கள் யூ.என்.எச்.சி.ஆரின் ஏற்பாட்டில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். 

கடந்த 2008 ஆம் ஆண்டு, 55 பேர் வந்திருந்தனர். இவர்கள் 2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோன்று, கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 101 ரோஹிங்­யா அகதிகள் இங்கு தஞ்சமடைந்திருந்தனர். பின்னர் இவர்கள், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு யூ.என்.எச்.சி.ஆர். அதிகாரிகளின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பின்னணியிலேயே இந்த வருடம் 30 ரோஹிங்­யா அகதிகள் இங்கு தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு அமெரிக்கா அல்லது கனடாவில் அபயமளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில் அகதிகள் தொடர்பில் அரசாங்கம் ஐ.நா.வுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாக இங்கு தங்க வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்குடைய பௌத்தர்களும் பௌத்த பிக்குகளும் கொண்டுள்ள தீவிரமான பகைமைப் போக்கைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு பிரசாரத்தின் பின்னணியில் கல்கிஸ்ஸை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இந்தத் தாக்குதலை மேற்கொண்ட பௌத்த பிக்குகள் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ரோஹிங்­யா அகதிகள் இங்கு வந்திருந்தபோது எங்கு போயிருந்தனர் என சீற்றத்தோடு அமைச்சர் ராஜித சேனாரத்ன வினவியிருக்கின்றார். 

சிறுபான்மை இனங்கள் மீதும், சிறுபான்மை மதங்கள் மீதும் பௌத்த தீவிரவாதிகள் கொண்டுள்ள கண்மூடித்தனமாக வெறுப்புணர்வின் உச்ச கட்டமாகவே ரோஹிங்­யா அதகிகள் மீது கல்கிஸ்ஸையில் நடத்தப்பட்ட குண்டர்குழு தாக்குதல் அமைந்துள்ளது. இது பௌத்த மதத்தை தமது புனித மதமாகக் கருதி பின்பற்றுபவர்களின் தூய மதப்பற்றைக் கொச்சைப்படுத்துவதுடன், பௌத்த மதத்திற்கே அவமானத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக வெளிப்படுத்தியிருக்கின்றது.

இந்த நாட்டின் ஏனைய இனங்கள் மீதும், மதங்கள் மீதும் தேசியவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்கின்ற கடும்போக்காளர்களான பௌத்த மதத் தேரர்களும், அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ள தீவிர பௌத்தமதவாதிகளும் கொண்டுள்ள இன, மத வெறுப்புணர்வுப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த நாடு ஐக்கியப்படுவதற்கும், அனைத்து இனங்களும் ஜனநாயக ரீதியில் இணைந்து அமைதியானதொரு வாழ்க்கை வாழ்வதற்கும் ஒரு போதும் வழி பிறக்கமாட்டாது.