ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து அமெரிக்கா பதிலடி!

Published By: Digital Desk 3

12 Jul, 2026 | 03:45 PM
image

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரானியப் புரட்சிகரக் காவல் படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்கா ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேவேளை, இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழியை மறுஅறிவித்தல் வரை மூடுவதாக ஈரானும் அறிவித்துள்ளது.

சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்.வி. ஜிஎஃப்எஸ் கேலக்ஸி' என்ற கொள்கலன் கப்பல் மீதே ஈரானியப் படைகள் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலால் கப்பலின் எஞ்சின் அறையில் பலத்த சேதம் ஏற்பட்டு தீப்பற்றியதால், கப்பலால் பயணத்தைத் தொடர முடியாமல் போயுள்ளது.

கப்பலில் இருந்த சிவிலியன் ஊழியர் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஏனைய ஊழியர்கள் கப்பலைக் கைவிட்டு உயிர் காக்கும் படகுகள் மூலம் தப்பியோடியுள்ளனர்.

குறிப்பிட்ட அந்தக் கப்பல் தனது தகவல் தொடர்பு அமைப்புகளை அணைத்துவிட்டு, அனுமதிக்கப்படாத மாற்றுப் பாதையில் பயணித்ததால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா பரிந்துரைத்த ஓமான் கடல் பகுதிப் பாதையைப் பயன்படுத்திய வணிகக் கப்பல்கள் மீது கடந்த வாரத்தில் ஏற்கனவே மூன்று முறை ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது. தங்களது கடல் எல்லைக்கு உட்பட்ட தனிப்பாதையே பாதுகாப்பானது என்பது ஈரானின் வாதமாகும்.

ஈரானின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய கட்டளைகம் இந்த வாரத்தில் ஈரானுக்கு எதிராகத் தனது மூன்றாவது சுற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரான் ஒரு மிக மோசமான தீர்மானத்தை எடுத்துவிட்டது. இப்போது அதற்கான விலையை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எக்ஸ் தளத்தில்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

முன்னதாகப் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கத் தவறியதற்காக ஈரானின் இராணுவ பலத்தை முடக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களால் தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ், புஷெர் மற்றும் கியூஷெம் தீவு உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடல்வழி மூடலைத் தொடர்ந்து அமெரிக்கா ஏதேனும் இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால், அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிராந்தியத்திலுள்ள புதிய அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்கப்படும் என்றும் ஈரானியப் புரட்சிகரக் காவல் படை எச்சரித்துள்ளது.

ஈரானின் தொடர் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அதேவேளை, அமெரிக்கா தான் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், தற்போதைய பதற்றங்களுக்கு மத்தியிலும், ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் ஓர் இறுதி அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான திரைமறைவு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரச முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானைக் கூட்டத்திற்காக சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டது...

2026-08-19 16:58:11
news-image

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

2026-08-19 16:45:54
news-image

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் அரச பெண்...

2026-08-19 16:28:12
news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37