தமிழகத்துக்கு விஜயம் செய்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையினர், தமிழக முதலமைச்சர் ஜோசப் சி. விஜய், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்புக்களின் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியம் தொடர்பிலும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்கள் குறித்தும் தமிழ்த் தேசிய பேரவையினர் எடுத்துக்கூறியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் சி. விஜய்யை சந்தித்துப் பேசிய தமிழ்த் தேசிய பேரவையினர், அவரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். இந்த சந்திப்பின் போது இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழகத்தின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் அனைத்துக் கட்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மேலும், தமிழர்களுக்கான தீர்வின் ஆரம்பப்புள்ளியாக 13ஆம் திருத்தச் சட்டம் இல்லை என்பதையும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மீண்டும் அமுல்படுத்துவதற்கு எதிராகவும் தமிழகம் இருக்கின்றது என்ற ஒருமித்த நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் வெளிப்படுத்துவதற்காக இந்த சர்வகட்சி மாநாட்டு முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய பேரவையினர் முதலமைச்சர் விஜய்யிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேபோன்றே, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பின் போதும் சகல கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பேரவையினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் அணியின் தலைவர் தொல் திருமாவளவன், தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட பல தமிழகத் தலைவர்களையும் இவர்கள் சந்தித்து இத்தகைய கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றனர்.
தமிழ்த் தேசிய பேரவையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தமிழகத்துக்கு விஜயம் செய்து அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். தற்போது தமிழக முதலமைச்சராக ஜோசப் சி. விஜய் பதவியேற்றதையடுத்து மீண்டும் அங்கு விஜயம் செய்து முதலமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து இவர்கள் கலந்துரையாடியிருக்கின்றனர்.
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு என்பது தவிர்க்கப்பட முடியாததொன்றாகும். அன்னை இந்திரா காந்தியின் காலம் தொட்டு, இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா அக்கறை செலுத்தி வருகின்றது.
இதேபோன்றே தமிழகமும் இலங்கை தமிழர் விவகாரத்தில் அக்கறை கொண்டே செயற்பட்டு வருகின்றது. தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள், இலங்கை தமிழர் விவகாரத்தில் தீவிர அக்கறை கொண்டவர்களாகவே செயற்பட்டு வருகின்றனர். தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சர்கள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பல்வேறு தீர்மானங்களையும் சட்டசபையில் நிறைவேற்றியிருக்கின்றனர்.
இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசை செயற்பட வைப்பதில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னின்றிருக்கின்றனர். 1980களில் வடக்கு, கிழக்கில் தமிழ் போராளிக்குழுக்கள் உருவாகியபோது அந்த உருவாக்கத்துக்கு இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
விடுதலைப்புலிகள் உட்பட சகல தமிழ் போராளிக்குழுக்களும் இந்தியாவில் பயிற்சிகளைப் பெற்றிருந்தன. இனப்பிரச்சினை விவகாரத்தில் அரசியல் தீர்வொன்றின் அவசியத்தையும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.
இதன் ஒரு கட்டமாகவே திம்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசாங்கத் தரப்பும் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளும் இந்தியாவின் மத்தியஸ்தத்தில் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தன. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருந்த நிலையிலேயே, 1987 ஆம் ஆண்டு இந்தியாவினால் இலங்கை–இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டது.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இணங்கியிருந்தார். இவ்வாறு, இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவினதும் தமிழகத்தினதும் பங்களிப்பு மறக்கப்பட முடியாததொன்றாகும்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தரப்பினர் அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்கு கூட தயாராக இருக்கவில்லை.
இந்த நிலையில் இந்தியாவின் அழுத்தம் காரணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களுடன் அரசாங்கத்தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டது. அன்றைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அரசாங்கக் குழுவினருக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
பல்வேறு தீர்மானங்கள் இந்த பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்த அன்றைய அரசாங்கம் முயலவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையிலிருந்து அரசாங்கத்தரப்பினர் வெளியேறியிருந்தனர். இதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமானது அரசியல் தீர்வு விடயத்தில் அக்கறை செலுத்தாது இழுத்தடித்தே வந்தது.
பின்னர் நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முயற்சியும் இடைநடுவில் கைவிடப்பட்டது.
இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியத் தலைவர்களும் இந்திய அதிகாரிகளும் எடுத்துக்கூறியிருக்கின்றனர். இலங்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்த போதும் இந்த நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான விவாதங்களின் போதும் இந்த நிலைப்பாட்டை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. ஆனாலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அக்கறை செலுத்துவதாக இல்லை.
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக்கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவது குறித்தோ புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலோ அரசாங்கம் அக்கறையின்றியே செயற்படுகின்றது. இத்தகைய நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகளாவது தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டவரைபொன்றினை தயாரித்து, அதன் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால், அரசியல் தீர்வுத் திட்ட வரைபை தயாரிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஒற்றுமை இன்றிய நிலைமை நீடித்து வருகின்றது. இதற்கான முயற்சிகளை சில தரப்பினர் மேற்கொண்ட போதிலும் அந்த விடயத்தில் இன்னமும் இணக்கப்பாடு காணப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த விடயத்தில் ஒற்றுமைபடாத நிலையில் ஓரணியாக திரண்டு திட்டவரைபொன்றை தயாரிக்க முடியாத சூழ்நிலையில் தமிழ்த் தேசிய பேரவையினர் தமிழகத்துக்கு சென்று அங்குள்ள கட்சிகளை ஒன்றிணைத்து சர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு கோருவது எந்தவகையில் பயனளிக்கும் என்ற கேள்வி எழுகின்றது.
தமிழகக் கட்சிகளின் ஒத்துழைப்பு எமக்கு அவசியமானதுதான் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், முதலில் வடக்கு, கிழக்கு தமிழ் தேசியக்கட்சிகள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். அத்தகைய நிலை ஏற்பட்ட பின்னரே தமிழகத்தின் கட்சிகளை ஒன்றிணைக்க கோருவது பயன்தரும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM