எனக்கு எனது ஜனம்தான் முக்கியம் - தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூரில் தெரிவிப்பு 

10 Jul, 2026 | 06:24 PM
image

“நான் மக்களை விட்டு ஒருபோதும் ஓட மாட்டேன். எனக்கு பணமா? ஜனமா? என்று கேட்டால், எனக்கு எனது ஜனம்தான் முக்கியம்” என கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்திருக்கிறார்.

கரூரில் உள்ள தனியார் கலையரங்க வளாகத்தில் நடைபெற்ற 'மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்குபற்றி மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

''கரூர் துயர சம்பவம் நடந்த நாளன்று காவல் துறையினர் எங்களை அலர்ட் செய்திருக்கலாம் அல்லது கூட்டத்தை ரத்து செய்து இருக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களிடம் இருந்தது. அதை எல்லாம் செய்யாமல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துயர சம்பவம் நடந்த இடத்திற்கு காவல் துறையினரே எங்களை அழைத்துச் சென்றனர். அப்போது அது நாடகம் என்று எனக்குத் தெரியாது. அப்போது அவர்களை நான் நம்பி விட்டேன். பேசும்போது அவர்களுக்கு நன்றி எல்லாம் சொன்னேன்.

இதற்கெல்லாம் யார் காரணம்? யார் சொல்லி இதை செய்தார்கள்? சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி மாற்றி செயல்படுங்கள் என்று அறிவுறுத்தி அழுத்தம் கொடுத்தது யார்? துயர சம்பவத்தில் எனது அக்கா, தங்கைகளின் தங்கப் பிள்ளைகளை இழந்திருக்கிறோம். கள்ளம் கபடமற்ற  சிரித்த மழலைகளை இழந்திருக்கிறோம். அக்கா- தங்கை- அண்ணன்- தம்பி- உறவுகளை இழந்த என்னை ஏளனமாக பேசுகின்றனர். என் மீது பழியை தூக்கி போடுகின்றனர். வலி, வேதனையுடன் வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்து விட்டான் என்றும் பேசினார்கள்.

வாய் என்ற ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா! அன்றைய தினம் இருந்த மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தார்களா? பிரச்சாரம் செய்த இடத்தை நாங்கள் தான் கொடுத்தோம் என்று ஒரு போலீஸ் அதிகாரி பேட்டி கொடுத்தார். வலி காயங்களை கொடுத்துவிட்டு, பழியையும் என் மீது சுமத்தி, அதில் அரசியல் ஆதாயமும் தேடுகின்றனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் இதனை பேசி.. அவர் அங்கு ஒரு அரசியல் செய்கிறார். மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதி நான் இல்லை. மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் நான். எனக்காக எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக.. எல்லாவற்றையும் இழந்து விட்டு அரசியலுக்கு வந்தவன். மக்களுக்கு நன்றி கடன் செலுத்த வந்தவன்.‌

நமக்கு வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தகுந்த பதிலடியை மக்களாகிய நீங்கள் கொடுத்து விட்டீர்கள். ஆனால் அது மட்டும் போதாது. எந்த காலத்திற்கும் எழவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடி கொடுக்க வேண்டும். நான் மக்களை விட்டு ஒருபோதும் ஓட மாட்டேன். எனக்கு பணமா? ஜனமா? என கேட்டால்.. எனக்கு எனது ஜனம் தான் முக்கியம்.

மக்கள் அமைத்துக் கொடுத்த நமது அரசை விதவிதமாக குறை சொல்கின்றனர். ஒவ்வொரு துறையிலும் 'கட்சி நிதி: என்ற பெயரில்.. அடிக்கிற கொள்ளையை தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் மாறி மாறி செய்து கொண்டிருந்தனர்.

சட்டப்பேரவையில் ஒரு ஹைலைட்டான காமெடி நடந்துச்சு. 'கட்சி நிதி' என்றுதான் சொன்னேன். அதை சொன்னதும் உடனே ஓட்டம் எடுத்தனர். குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறு வென்று இருக்கும். இது எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை என்பது போல இருக்கிறது.‌

சென்னையில் ஒரு பாலம் கட்ட ஆகும் சாதாரண செலவை விட இரு மடங்கு செலவில் கூடுதலாக வைத்து டெண்டர் விட்டுள்ளனர். அதை எல்லாம் கண்டுபிடித்து ரத்து செய்துள்ளோம் . இன்னும் எத்தனை லட்சம் கோடி ஊழல் தோண்டத் தோண்ட வெளியே வரும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முக முடியும் கிழிகிறது. இந்த கதை எல்லாம் விஜய் வெளியே சொல்லி விடுவான் என்ற பயத்தில் எங்கு திரும்பினாலும் ஒரே கதறல் சத்தம் காதில் இருந்து ரத்தம் வராத குறை தான். ஊழலில் ஊறிப் போனவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

திமுக அரசின் வெள்ளை அறிக்கை குறித்து சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்... ஓட்டை பாத்திரத்தில் நீர் நிரப்பி உள்ளனர். பாத்திரம் காலியாகவே இருக்கிறது. தண்ணீர் என்ன ஆனது? என தெரியவில்லை. அது கடவுளுக்கே வெளிச்சம். பட்டியலிட்டது ஓர் உதாரணம்தான். வருகின்ற காலத்தில் நமது அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள்.

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பிற்காக 134 கோடி ரூபாய்க்கு திட்டம் தீட்டி இருப்பதன் மூலம் விவசாய பெருமக்களுடன் அரசு எப்போதும் உடன் நிற்கும்.

அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்படும். வாக்குறுதிகள் கொடுத்தது என்னாச்சு? என்று கேட்டார்கள். நான் திமுக போன்று ரீல்ஸ் தாய்மாமன் இல்லை. ரியல் தாய் மாமன்.

'வாயத் திறங்க சிஎம்: என்கிறார்கள். உங்களது முதல்வரை நெஞ்சில் குத்தி விட்டு வந்தது வேற லெவல். 'பேசுங்கள் என்கிறீர்கள்' பேசினால் எழுந்து ஓடி விடுகிறார்கள். இனிமேல் சபாநாயகரிடம் சொல்லி கதவுகளை மூடச் சொல்லி பேச வேண்டியது தான். ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டு விட்டார்கள். இதற்கு மேலே பேசினால் மொத்தமாக முடிந்துவிடும்.

நாம் அரசியல் பேசினால், 'விஜய் எல்லாம் அரசியல் பேசலாமா?' என்கிறார்கள். சரி! நமக்கு எதுக்கு வம்பு என்று பேசாமல் இருந்தால்.. 'விஜய்க்கு அரசியலை பேச தெரியவில்லை' என்கிறார்கள். இப்படி மாறி மாறி பேசுகின்றனர்.‌

நமது மாநில உரிமையை எங்கு நிலை நிறுத்த வேண்டுமோ..! அதற்கான வேலையை பார்ப்பது தான் முக்கியம். அதை விட்டுவிட்டு சவால் விட்டு பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. பேசிப் பேசி பிரச்சனையை வளர்த்து விட்டு யார் மீதாவது பழியை தூக்கி போட்டு விட்டு மக்களை அம்போ என்று தெருவில் விட்டுவிடுவது நமது அரசியல் அல்ல. அதை நாம் செய்யவும் போவதில்லை. நம்ம பாலிசி 'டாக் லெஸ் ஒர்க் மோர்' பாலிசி தான்.

திமுகவும், அதிமுகவும் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா? வரும் இடைத்தேர்தலில் நிரூபித்து காட்டுங்கள்.

கரூர் எனது மனதை விட்டு நீங்கவே நீங்காது. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை... நமக்கு எதிராக நடந்த சூழ்ச்சியை... சதியை.. இனிவரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இனிமேல் அரசியல் சதியை- சூழ்ச்சியை யாரும் யோசிக்க கூடாது என்பதற்காக தமிழக வெற்றி கழகம் சார்பில் இங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

திமுக ஆட்சி முடிந்த உடன் நம்மை பார்த்து 'சோபா... வாஷிங் மெஷின்..' என விமர்சித்தார்கள். அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மிஷின் திமுக தான். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை அடித்து நொறுக்கி உள்ளோம். தேர்தலிலேயே அப்படி வேலை பார்த்தவர்கள்.. நமக்கு எதற்கு குதிரை- கழுதை- ஒட்டக பேரம் எல்லாம். மக்கள் நம் பக்கம் இருக்கும்போது எதற்கு இந்த பேரம்? எல்லாம்.

யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், 'இது விஜய் ஆட்சி' என்று சொல்லுங்கள். ஆட்சி முடிந்தும் முதல்வர் விஜய் எங்கு செல்ல வேண்டும்? செல்லக்கூடாது? என்று திமுக சொல்கிறது. கண் விழித்துப் பாருங்கள். உங்களது ஆட்சி முடிந்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி தீர்ப்பு கொடுத்த பிறகாவது திமுக விழித்துக் கொள்ள வேண்டும். திமுகவை திருத்தவும் முடியாது. அவர்களாக திருந்துவார்கள் என்று பார்த்தால்.. அதுவும் இல்லை. எனவே வரும் இடைத்தேர்தலில் திமுகவை நன்றாக வைத்து வெளுத்துவிடுங்கள்'' என்றார்.

இதற்கு முன்னால் கரூரில் பத்து கி.மீ. தொலைவு வரை நடைபெற்ற 'வீதிக் காட்சி' நிகழ்வில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்குபற்றினார். மக்கள் சாலையின் இரு புறங்களிலுமிருந்து அவருக்கு உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08