வவுனியா பன்றிக்கெய்தகுளம், மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை உதவி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.ஜயசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, உடனடியாக தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாளைய தினமே இப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருவதாகவும் அளித்த வாக்குறுதியையடுத்து மக்கள் வீதியை விட்டு அகன்றனர்.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் அப்பகுதியில் பொதுக்கிணறு, குழாய்க்கிணறு என்பனவற்றில் தண்ணீர் இல்லை எனவும், ஒரே ஒரு கிணற்றிலிருந்தே தமது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும், அடிப்படைத் தேவையான குடிநீர், போக்குவரத்துப் பாதை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் என்பனவற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.