(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
தொழில் ரீதியான சுமை,கடற்கொள்ளையர்களின் தொல்லை,மற்றும் விஎம்ஸ் கட்டணச் சுரண்டல்கள் என அனைத்தும் கிழக்கு மாகாண மீனவர்களை கடுமையாக பாதித்துள்ளது. இது அவர்களின் வாழ்வுரிமையுடன் நேரடியாக தொடர்புடைய பிரச்சினை என்பதால் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 , 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஏனைய கரையோர மாவட்டங்களை விட, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மிக அதிகமான மக்கள் தங்களின் பிரதான வாழ்வாதாரமாகக் கடற்றொழிலையே நம்பியுள்ளனர்.
இங்கு சுமார் 1000 படகுகள் சுழற்சி முறையில் தொடர்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதுடன், இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இன்று எமது மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை, கடலில் இடம்பெறும் மீன் திருட்டும் கடற்கொள்ளையும் ஆகும். ஒரு முழுமையான வலைத் தொகுதிக்கு 100,000 ரூபா வரை செலவாகும் நிலையில், அவற்றைப் பழுதுபார்ப்பதற்கே நாளொன்றுக்கு 4,000 ரூபா வரை மேலதிகச் செலவு ஏற்படுகிறது.
திருகோணமலை முதல் பொத்துவில் வரையான பகுதிகளில் பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், எமது மீனவர்களின் இந்தத் துயரத்திற்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.
மேலும், வி.எம்.எஸ் கருவி, மீனவர்களின் பாதுகாப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், நடைமுறையில் அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டாலும் பின்னர் 35000 ரூபா முதல் 70000 ரூபா வரை வெவ்வேறு கட்டண முறைகளில் மீனவர்களிடமிருந்து பணம் அறவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்காக மாதாந்த கட்டணமாக 6000 ரூபா வசூலிக்கப்படுவது சாதாரண மீனவர்களுக்கு பாரிய பொருளாதாரச் சுமையாகும்.
'மின்னல் தாக்காது' என அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்ட வி.எம்.எஸ் கருவியால், இன்று பல படகுகள் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி, ஆல்டர்னேட்டர்கள், மின்கலங்கள் மற்றும் ஒட்டுமொத்த மின்சார அமைப்புகளும் சேதமடைந்து பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடலில் சிக்னல் துண்டிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை முறையாக ஆராயாமல், மீனவர்களின் கடலுக்குச் செல்லும் அனுமதிப்பத்திரங்கள் அதிகாரிகளால் முடக்கப்படுகின்றன. பழுதுபார்ப்பு என்ற பெயரில் 'சிந்து மெரைன்' நிறுவனம் இரண்டரை இலட்சம் ரூபா முதல் 6 இலட்சம் ரூபா வரையான கட்டணங்களைக் கோருவதாகவும் நான் அறிகின்றேன்.
அதேபோன்று, கடந்த காலத்தில் கானான் படகுகளுக்கு வழங்கப்பட்ட 14 நாள் பாஸ் நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் கச்சான் காற்று காலத்தில் மீனவர்கள் தினசரி கடலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு முழுவதும் தூக்கமின்றி தொழிலில் ஈடுபட்டு அதிகாலையில் கரை திரும்பும் மீனவர்கள், இந்த பாஸ் நடைமுறைகளுக்காக இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகக் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் போதிய ஓய்வின்றி மீண்டும் கடலுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தொழில் ரீதியான சுமை, கடற்கொள்ளையர்களின் தொல்லை, மற்றும் வி.எம்.எஸ்.கட்டணச் சுரண்டல்கள் என அனைத்தும் மீனவர்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இது அவர்களின் வாழ்வுரிமையுடன் நேரடியாக தொடர்புடைய பிரச்சினை என்பதால், உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை தங்களது அமைச்சு மூலம் மேற்கொள்வதற்கு ஆவண செய்யுமாறு இவ் உயரிய சபையிலே தங்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன். அதனால் பின்வரும் கேள்விகளுக்கு முறையான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
வி.எம்.எஸ் கருவிகளுக்கான மாதாந்த கட்டணங்களையும், அதிகப்படியான பழுதுபார்ப்புக் கட்டணங்களையும் மறுபரிசீலனை செய்து குறைப்பதற்கும், மின்கலப் பாதுகாப்பிற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பீர்களா?
கச்சான் காற்று காலத்தைக் கருத்தில் கொண்டு, மீனவர்களின் ஓய்வு நேரப் பாதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு, பாஸ் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, கானான் படகுகளுக்கு பழையபடி 14 நாள் பாஸ் நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்துவீர்களா? என கேட்கிறேன் என்றார்.
என்றாலும் குறித்த கேள்விகளுக்கான பதிலை உடனடியாக வழங்க முடியாமல் இருப்பதால், அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது விளக்கமான பதிலொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM