(க.சிவலிங்கமூர்த்தி)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் மற்றும் உயிரழிவுகளுக்கு அரசாங்கமும், நீதி அமைச்சரின் தொலைநோக்கற்ற செயற்பாடுகளுமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள குறைபாடுகளை ஆராய்வதை விடுத்து, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் காணாமல் போனவர்களைத் தேடி, புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தும் பணிகளிலேயே நீதி அமைச்சர் ஈடுபட்டு வருகின்றார் என சர்வஜன அதிகாரம் கட்சியின் கம்பஹா மாவட்ட முதன்மை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஜயந்த அத்தபத்து குற்றம் சாட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் முதலாம் நாளில் 02 கைதிகள் மாத்திரமே உயிரிழந்திருந்த சூழலில், இரண்டாம் நாளில் அது ஒரு பெரும் பேரழிவாக மாறியுள்ளது.
02 உயிர்கள் பலியான முதலாம் நாளிலேயே, பொறுப்புக்கூற வேண்டிய நீதி அமைச்சர் நீர்கொழும்பு பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை வினவவில்லை.
அமைச்சரின் இந்த அலட்சியப் போக்கின் நேரடி விளைவாகவே இரண்டாம் நாளில் காலை உணவு வழங்கப்படும் வேளையில் மீண்டும் மோதல் வெடித்து அந்த பேரழிவு அரங்கேறியது.
ஆனால், அன்றைய தினம் பிற்பகல் 12 மணியின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நீதி அமைச்சர், 'தனக்கு இன்னும் சமூக ஊடகங்களைப் பார்க்க நேரமிருக்கவில்லை' என்று பொறுப்பற்ற முறையில் கூறினார்.
இதிலிருந்து இந்த பாரதூரமான பிரச்சினை குறித்து அவரிடம் எந்தவொரு அவதானிப்பும் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
கடந்த காலங்களில் சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்கோ அல்லது பொதுமக்களுக்கோ நீதி அமைச்சர் எந்தவொரு காத்திரமான பணியையும் செய்யவில்லை.
ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் அவர் யாழ்ப்பாணப் பகுதிக்குச் சென்று சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களைத் தேடி காலத்தைக் கழித்தார்.
இந்த அரசாங்கத்தினதும் அமைச்சரினதும் தற்போதைய பிரதான நோக்கம், தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி புலம்பெயர் அமைப்புகளின் நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக, நாட்டின் வீரம் செறிந்த இராணுவத்தினரை நாளாந்தம் தண்டிப்பதும் அவர்களை திருப்திப்படுத்துவதுமே ஆகும்.
நாட்டின் சாதாரண இராணுவ அதிகாரி முதல் முன்னாள் இராணுவத் தளபதிகள் வரை கைது செய்து புலம்பெயர் அமைப்புகளை மகிழ்விப்பதைத் தவிர, தனது துறை சார்ந்த பணிகளை அவர் செய்யவில்லை.
சிறைச்சாலையினுள் இத்தகைய விபரீதம் ஏற்படுவதற்குப் பின்னாலுள்ள இரண்டாவது முக்கிய காரணம், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றி கைது செய்யப்பட்டமையாகும். இதனால், உயர் அதிகாரி முதல் கீழ் மட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளும் அவசர காலங்களில் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்க அஞ்சி முன்வருவதில்லை.
அரச அதிகாரிகள் ஏதேனும் முடிவுகளை எடுத்தால், இன்னும் 01 அல்லது 02 வாரங்களில் அவர்கள் சிறைச்செல்ல நேரிடும் என்ற தவறான முன்னுதாரணத்தை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது.
எந்தவொரு வெளிப்படைத்தன்மையோ அல்லது முறையான விசாரணையோ இன்றி உயர் அரச அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் திடீரெனக் கைது செய்யப்பட்டு பிரதான செய்திகள் மூலம் பிரசித்தி படுத்தப்படுவததால், இன்று அரச அதிகாரிகள் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக நாட்டுக்காக எந்தவொரு துணிச்சலான காரியத்தையும் செய்ய முன்வருவதில்லை.
இந்த துரதிஷ்டவசமான நிலைமை குறித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புச் சபைக்கு அனுபவமிக்க நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா எனக் கேள்வி எழுப்பியிருந்த போதிலும், இதுவரை பாதுகாப்புச் சபை முறையாகக் கூட்டப்படவில்லை.
நாட்டின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது செய்யப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த புலனாய்வு அதிகாரிகளும் தமது கடமைகளைச் செய்யத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் முற்றாக முடக்கப்படும் பின்னணி உருவாகியுள்ளது.
ஒட்டுமொத்த அரச இயந்திரமும் தற்போது சீர்குலைக்கப்பட்டுள்ளதால், சிறைச்சாலையினுள் அமைதியைப் பேண முற்பட்ட அதிகாரிகள் கூட எதிர்காலத்தில் சமூக அலை ஒன்று உருவானால் இன்னும் 03 மாதங்களில் கைது செய்யப்படக் கூடிய அபாயம் உள்ளது.
தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளுக்காக மாத்திரமே செயற்படுகிறது என்பது தெளிவாகின்ற போதிலும், அரசாங்கத்துக்குப் பலத்தை வழங்கியது புலம்பெயர் அமைப்புகள் மாத்திரமல்ல.
சிங்கள பௌத்தர்கள் உள்ளிட்ட இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுமே என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் வழங்கிய அந்த வாக்குக்காக அரசாங்கம் என்ற ரீதியில் நீங்கள் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM