(செ.கவிஷனா)
இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரித்து, தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்கில் கட்டுநாயக்க, யாழ்ப்பாணம் மற்றும் மத்தள ஆகிய மூன்று பிரதான சர்வதேச விமான நிலையங்களையும் ஒரே நேரத்தில் நவீனமயமாக்குவதற்கான துரித உத்திகளைப் புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் வெள்ளிக்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் விமான போக்குவரத்துத் துறையை சர்வதேச தரத்துக்கு உயர்த்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் நோக்கில் கட்டுநாயக்க, யாழ்ப்பாணம் மற்றும் மத்தள ஆகிய மூன்று பிரதான சர்வதேச விமான நிலையங்களையும் ஒரே நேரத்தில் நவீனமயமாக்குவதற்கான துரித திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுக்கு 11.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளின் எண்ணிக்கை 2032 ஆம் ஆண்டளவில் 16.5 மில்லியனாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், அதன் உட்கட்டமைப்பை விரிவாக்குவது அவசியமாகியுள்ளது.
இதற்கமைய, பல வருடங்களாக முடங்கிக்கிடந்த ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பின் நிதி உதவியுடனான இரண்டாவது முனையத்தின் கட்டுமானப் பணிகள், புதிய அரசாங்கத்தின் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை அடுத்து வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த புதிய முனையம் மூலம் 96 புதிய செக்-இன் கவுண்டர்கள், 16 போர்டிங் கேட்டுகள் மற்றும் 26 குடிவரவு கவுண்டர்கள் போன்ற பல நவீன வசதிகள் சேர்க்கப்படவுள்ளதுடன், பயணிகள் தங்களது பொதிகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க புதிய ஸ்கேனர் மற்றும் கன்வெயர் பெல்ட் முறைமைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான பிராந்திய விமான சேவைகளை வழங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு முனையங்கள் மற்றும் பயணிகள் தங்கும் கூடங்களை விரிவுப்படுத்தி நவீனமயமாக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான இடவசதிகளும் இதன் மூலம் விரிவாக்கப்படவுள்ளன. மறுபுறம், ஆரம்பம் முதலே கடுமையான நட்டத்தில் இயங்கி வரும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை அரசு-தனியார் பங்களிப்புடன் இலாபகரமானதாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக கோரப்பட்ட முதலீட்டு ஆலோசனைகளுக்கு இணங்க, சுமார் 45 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது விருப்பக் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து, விமானப் போக்குவரத்து மட்டுமன்றி, விமானப் சரக்குக் கையாளுதல், தளபாட வசதிகள், விமானப் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் விமானங்கள் பராமரிப்பு போன்ற பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்த்து, மத்தள விமான நிலையத்தை ஒரு வர்த்தக மையமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்புத் திட்டங்களும் நிறைவடையும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அது பாரியதொரு பங்களிப்பை வழங்கும் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM