(செ.கவிஷனா)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலையிலிருந்த அனைத்து ஆயுதங்களும் 5ஆம் திகதி இரவே அகற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்த பின்னணியில், ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்றும், அதிகாரிகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் நிலைமை, அரசாங்கத்தின் முறையான தலையீடு இன்மையால் பெரும் மனிதப் பேரவலமாக மாறியுள்ளது. 5ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டபோதிலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால், 6ஆம் திகதி நிலைமை விபரீதமாகி சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, 5ஆம் திகதி இரவே சிறைச்சாலையில் இருந்த அனைத்து ஆயுதங்களும் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால், அமைச்சர்கள் ஊடகங்களை அச்சுறுத்தி வரும் தற்போதைய சூழலில், சிறைச்சாலையின் ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தின. ஆயுதங்கள் அகற்றப்பட்ட பின் ஜன்னல் வழியாகச் சுட்டது யார்? என்ற கேள்வி தற்போது எழுகிறது.
இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த சிறைச்சாலைகளிலும் கைதிகளின் எண்ணிக்கை 41,000ஐத் தாண்டியுள்ளது. அதற்கமைய, 625 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய நீர்கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம் நிகழ்ந்த வேளையில் 2,426 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு கைதிகள் இருக்கும் ஒரு சூழலில், சிறைச்சாலையைக் கண்காணிக்கவேண்டிய பாதுகாப்பு ஊழியர்களில் 140 அதிகாரிகள் பற்றாக்குறை நிலவியுள்ளது.
5ஆம் திகதி இரவே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டதே தவிர, இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்டு முறையான பாதுகாப்புப் பலப்படுத்தல் செய்யப்படவில்லை. இதனால் 6ஆம் திகதி நடந்த படுகொலைகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளது.
இந்த மோதல் சம்பவம் நாகரிகமற்றது என்றாலும், இதன் மூலம் சிறைச்சாலையின் நெருக்கடி குறையும் என அமைச்சர் லால் காந்த முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.
மனித உயிர்கள் பலியானதை இடநெருக்கடி குறைவதற்கான வழியாகக் கூறும் அமைச்சரின் கருத்து, அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாட்டையே காட்டுவதுடன், அரசாங்கத்தின் மிக மோசமான மற்றும் பொறுப்பற்ற செயலாகும்.
தற்போதைய அரசாங்கம் நாட்டில் உள்ள விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களிடையே திட்டமிட்டு பிரிவினையையும், மோதல்களையும் உருவாக்கி, உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்க முயல்கின்றனர். அமைச்சர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியும் வருகின்றனர். ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகளால் ஒட்டுமொத்த பொதுமக்களும், விவசாயிகளும், தொழிலாளர்களும் பாரியளவில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வெறும் பாராளுமன்றத்துக்குள் மட்டும் முடங்கிக் கிடக்காமல், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை பேரவைகளை நாடி அரசாங்கத்தின் முகத்திரையை வெளிக்கொண்டு வருவதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM