களுத்துறை மாவட்டத்தில் கிராமப்புர பாடசாலை ஒன்றில் நேற்று சர்வதேச சிறுவர் தினம் கொண்டாட்டமும், சித்திர கண்காட்சி ஒன்றும் நடந்து கொண்டிருந்த வேளையில் தரம் 12இல் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் வைத்து மது அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை அதிபருக்கு குறித்த  பாடசாலை மைதானத்திலிருந்து வெற்று மதுபான போத்தல் ஒன்றும், குளிர்பான போத்தல் ஒன்றும் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு அதிபர் தகவல் வழங்கியுள்ளார்.

தகவல் கிடைத்து சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவு அதிகாரிகளுடன் பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் மதுபானம் அருந்திய 6 மாணவர்களை கண்டு பிடித்ததோடு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கடுமையாக எச்சரித்து மாணவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த 6 மாணவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மது அருந்திய மாணவர்கள் அறுவரையும் பிரதேச வைத்தியசாலைக்கு பெற்றோர்களால் அழைத்து செல்லப்பட்ட  போது வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்காமல் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தாகவும் பின்னர் வைத்தியசாலை பொலிஸாருடன் பெற்றோர்கள் கலந்துரையாடி சமத்துவமான தீர்மானத்திற்கு வந்த பின்னர் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.