வவுனியா - இராசேந்திரகுளம், பாரதிபுரம் பகுதியிலுள்ள பாரதி வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கூறி பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் இன்று காலை 8 மணி முதல் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

1983ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் தரம் 5 வரையில், 63 மாணவர்கள் கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதுடன் 7 நிரந்தர ஆசிரியர்களும், 2 தொண்டராசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்ற குறித்த அதிபர் பாடசாலைக்கு சகல வழிகளிலும் ஒத்தாசை புரிந்து பாடசாலையை கட்டியெழுப்பி தற்போது குறித்த பாடசாலையானது ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

இந் நிலையில் தற்போதுள்ள அதிபரை இடமாற்றம் செய்யும் போது மாணவர்களின் வரவு குறைவாகி பாடசாலையை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்ற நோக்கத்திற்காகவே தமது பாடசாலைக்கு தற்போதுள்ள அதிபரின் சேவையை நீடிப்பு செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக கூறியதிற்கிணங்கி பெற்றோர்களும் மாணவர்களும் ஆர்பாட்டத்தினை கை விட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது

“குறித்த அதபரின் விருப்பின் பேரிலேயே வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு உப அதிபராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது பண்டாரி குளம் விபுலானந்தாக்கல்லூரியிலிருந்து தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டு பாரதிபுரம் பகுதியிலுள்ள பாடசாலைக்கு அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

எனினும் தொடர்ந்து தண்டனை சேவை நீடிப்பினை வழங்க முடியாது அதன் காரணமாகவே அவரின் சம்மதத்துடன் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டள்ளது” என தெரிவித்தார்.