(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும், முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருமான சுவகீஷ்வர பண்டாரவுக்கு பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவதற்குப் போதுமான எந்தவொரு நியாயமான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை என கோட்டை நீதிவான் பசந்த அமரசேன உத்தரவு பிறப்பித்து பிணை கோரிககையை நிராகரித்து சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகீஷ்வர பண்டார புதன்கிழமை (8) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியிலுள்ள அதிகாரி ஒருவரால், சம்பந்தப்பட்ட தொகை 25000 ரூபாய்க்கும் அதிகம் என சான்றளிக்கப்பட்டால், அசாாதாரணமான காரணங்கள் முன்வைக்கப்படாத பட்சத்தில், பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரமே உள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தொகை 25000 ரூபாயை விட கணிசமானளவு அதிகம் எனவும், அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சந்தேகநபருக்கு எதிரான சாட்சியத் தொகுப்பும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதவான், இவ்வாறானதொரு சூழ்நிலையில் அசாாதாரணமான காரணங்கள் முன்வைக்கப்படாததால் சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க முடியாது என நீதிவான் மன்றுக்கு அறிவித்தார்.
பிணை உத்தரவு அறிவிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் மேலதிக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து, இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரண்டாவது முறையாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி தனது முதலாவது வாக்குமூலத்தில், தனது தனிப்பட்ட செயலாளருக்கு வழங்கப்படும் பணம் இந்த நபருக்கு வழங்கப்படவில்லை என்றும், அது வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும், நேற்று ( நேற்று முன்தினம்) அளிக்கப்பட்ட மேலதிக வாக்குமூலத்தில், அந்தப் பணம் வேறொரு நபருக்கு வழங்கப்பட்டதாகவும், அது கணக்கில் காட்டப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதன்போது, குறித்த பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதா என நீதிவான் வினவினார். அதற்குப் பதிலளித்த விசாரணை அதிகாரிகள், சந்தேகநபரான கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆரம்ப நிலைப்பாட்டை மாற்றி நேற்றுதான் (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது முறையாக வாக்குமூலம் அளித்ததால், இதுவரை அந்த நபரிடம் வாக்குமூலம் பெற முடியாமல் போனதாகவும், ஜனாதிபதியின் விசேட திட்டப் பிரிவின் மேலும் இரு பணிப்பாளர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறியாதவர்கள் என்பது அதில் தெரியவந்துள்ளது என்றும் அதிகாரிகள் மன்றில் குறிப்பிட்டனர்.
அந்த விசேட கருத்திட்டப் பிரிவில் பணிபுரியும் மேலும் பலரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற வேண்டியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜனாதிபதியின் விசேட திட்டப் பிரிவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஆவணம் உள்ளதாகவும், எவ்வாறாயினும் இந்தத் திட்டப் பிரிவு அரசியல் நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாகவும் வேறு வழிகளிலும் பல்வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பணத்தைப் பயன்படுத்தியுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதன்போது நீதவான் பசந்த அமரசேன, குறித்த பணம் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டால், அது எந்த வகையான நடவடிக்கைகளுக்காக என்பது கண்டறியப்பட்டுள்ளதா என வினவினார். இது குறித்து மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய, பண மோசடி ஏதேனும் இடம்பெற்றிருந்தால் அது எந்த விடயம் தொடர்பிலானது என்பது குறித்து அடுத்த வழக்குத் தவணையின் போது தெளிவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் விசாரணையாளர்களுக்கு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM