உபாதையீடு நேர வெற்றி கோலின் மூலம் எகிப்தை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜன்டீனா

Published By: Vishnu

08 Jul, 2026 | 04:39 AM
image

(நெவில் அன்தனி)

அட்லான்டா விளையாட்டரங்கில் நடைபெற்ற எகிப்துக்கு எதிரான பீபா உலகக் கிண்ண 16 அணிகள் சுற்று ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்த ஆர்ஜன்டீனா உபாதயீடு நேர கோலின் (injury time goal) உதவியுடன் 3  - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அமெரிக்கா கால்பந்தாட்ட ஜாம்பவான்களான ஆர்ஜன்டீனாவுக்கும் ஆபிரிக்கா கால்பந்தாட்ட ஜாம்பவான்களான எகிப்துக்கும் இடையிலான இந்தப் போட்டி விறுவிறுப்யையும் பரபரப்பையும் தோற்றுவிப்பதாக அமைந்தது.

போட்டியின் 15ஆவது நிமிடத்திலும் 67ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்ட எகிப்து 78ஆவது நிமிடம் வரை 2 - 0 என முன்னிலையில் இருந்தது.

இதனிடையே பெனல்டி ஒன்றை லியோனல் மெஸ்ஸி தவறவிட்டது ஆர்ஜன்டீனாவுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விடுமோ என எண்ண வைத்தது.

எகிப்து அணியினர் இரண்டாவது கோலைப் போட்ட பின்னர் தடுத்தாடும் உத்தியைப் பிரயோகித்தனர். அதுவே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

காபோ வேர்டே அணியுடனான 32 அணிகள் சுற்று போட்டியில் போன்றே எகிப்துடனான போட்டியிலும் எதிர்நீச்சல் போட்ட ஆர்ஜன்டீனாவுக்கு இம்முறை உபாதையீடு நேர கோல் கைகொடுத்தது.

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் மரவன் ஆட்டியா பரிமாறிய பந்தை யாசர் இப்ராஹிம் கோலினுள் புகுத்தி எகிப்தை முன்னிலையில் இட்டு ஆர்ஜன்டீனாவை திகைப்பில் ஆழ்த்தினார்.

ஆறு நிமிடங்கள் கழித்து எகிப்து பெனல்டி எல்லைக்குள் ஆர்ஜன்டீன வீரர் நிக்கலஸ் டக்லியாவிக்கோவை முரணான வகையில் ஹய்செம் ஹசன் வீழ்த்தியதால் ஆர்ஜன்டீனாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

ஆனால்,  ஆர்ஜன்டீனா  அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸியால் அந்த பெனல்டியை கோலாக்க முடியாமல் போனது.

அவர் உதைத்த பந்தை நோக்கி இடது புறமாக சரியான திக்கில் தாவிய எகிப்து கோல்காப்பாளர் மொஸ்தபா ஷவ்பிர் பந்தை தனது உள்ளங்கைளால் தட்டி திசை திருப்பினார்.

இந்த உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸி தவறவிட்ட இரண்டாவது பெனல்டி இதுவாகும்.

அதன் பின்னர் ஆர்ஜன்டீனாவின் நான்கு கோல் போடும் முயற்சிகளை மொஸ்தபா ஷவ்பிர் தடுத்து நிறுத்தினார்.

இடைவேளைக்குப் பின்னர் 58ஆவது நிமிடத்தில் எகிப்து வீரர் ஸிக்கோ போட்ட கோல் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்புடன் மத்தியஸ்தரினால் நிராகரிக்கப்பட்டது.

அந்த கோலுக்கான முதலாவது பந்து நகர்வின்போது எகிப்து வீரர் ஒருவர் விதிகளை மீறியிருந்தது வீடியோ சலன காட்சி மூலம் கண்டறியப்பட்டே அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டு மாற்று வீரர்களை 66ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா களம் இறக்கியது.

அது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

அடுத்த நிமிடமே ஹய்செம் ஹசன் பரிமாறிய பந்தை மொஸ்தபா ஸிக்கோ கோலாக்க எகிப்தின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. (எகிப்து 2 - 0)

இதனைத் தொடர்ந்து 6 வீரர்களை பின்களத்தில் ஈடுபடுத்தி தனது கோல் எல்லையை பாதூக்கும் உத்தியில் எகிப்து இறங்கியது.

ஆனால், 79ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி பரிமாறிய பந்தை கிறிஸ்டியன் ரொமேரோ கோலாக்கி ஆர்ஜன்டீனாவுக்கு சிறு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார்.

மறு நிமிடமே ரொமேரோவின் மற்றொரு கோல் முயற்சியை எகிப்து கோல்காப்பாளர் மொஸ்தபா ஷவ்பிர் தடுத்து நிறுத்தினார்.

மேலும் 3 நிமிடங்கள் கழித்து கொன்சாலோ மொன்டியெல் பரிமாறிய பந்தை லியோனல் மெஸ்ஸி கோலாக்கி கோல் நிலையை 2 - 2 என சமப்படுத்தினார்.

இந்த கோலானது உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் போடப்பட்ட 3000ஆவது கோலாகப் பதிவானது.

உபாதையீடு நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில் (90+2   நி)   லியோனல் மெஸ்ஸி பரிமாறிய பந்தை கிறிஸ்டியன் ரொமேரோ கோலாக்கி ஆர்ஜன்டீனாவுக்கு ஆச்சரியத்தக்க வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

இந் நிலையில் தோல்வியைத் தாங்க முடியாதவர்களாக எகிப்து வீரர்கள் விதிகளை மீறும்வகையில் முரட்டுத்தனமாக விளையாட முற்பட்டனர்.

இதன் காரணமாக உபாதையீடு நேரத்தில் எகிப்தின் நான்கு வீரரக்ளுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டதுடன் அணி உதவியாளர் ஒருவர் அநாவசியமாக வம்பில் சிக்கிக்கொண்டதால் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.

ஆர்ஜன்டீன வீரர்கள் துவண்டு விடாமல் விளையாடியதாலேயே வெற்றிபெற்றனர். 

ஆனால், எகிப்து வீரர்கள் தேவையில்லாமல் தடுத்தாட விளைந்து தங்களுக்கு தாங்களே அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டதால் தோல்வி அடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56