50 பேரின் உயிரை பலியெடுத்து 200 இற்கும் அதிகமானோரை படுகாயமடையச் செய்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தோடு தொடர்புடைய துப்பாக்கிதாரியின் பெண் தோழி மரிலியோ டேன்லி அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் லாஸ் வெகாஸில்  இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  50 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சில் குறித்த துப்பாக்கிதாரி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஆயுததாரி கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த இசை நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ஆயுததாரியின் பெண் தோழி கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த பெண் 62 வயதுடைய ஆசிய நாட்டைச் சேர்ந்தவராவார்.

இவர் 4 அடி 11 அங்குலமுடையவர் என்றும் 111 பவுண் எடை உடையவர் எனவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரியும் குறித்த பெண்ணும் அறைத் தோழர்கள் எனவும் இவர்களுக்கிடையிலான நெருக்கமான  உறவு குறித்து எதுவித தகவல்களும் அந் நாட்டு பொலிஸார் வெளியிடவில்லை.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரி அந் நாட்டு குடியுரிமை பெற்ற ஸ்டீபன் பாட்டோக் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார் மரிலியோவிடம் விசாரணை மேற்கொண்ட போது ஸ்டீபன் இறந்து விட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.