எம்மில் பல பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சுழற்சி நின்ற பின் எலும்பு தேய்மானத்திற்கு ஆட்பட்டு, மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, கல்சிய சத்து கொண்ட ஊசியை போட்டுக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இத்தகைய ஊசியை தொடர்ச்சியாக எலும்பு தேய்மானத்திற்கு ஆட்பட்ட அனைவரும் பயன்படுத்தலாமா? என்று கேட்கிறார்கள்.

உலகில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறும் வரை அவர்களுக்கு இத்தகைய குறைபாடு ஏற்படுவதில்லை. ஏனெனில் இது தொடர்பான கல்சிய சத்து ஹோர்மோன்களின் சுரப்பினால் இயல்பாகவே எலும்பில் சேகரிக்கப்பட்டு, அதன் வலிமை உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்ற பின் அவர்களில் எலும்புகளில் அதன் வலிமைக்காக சேகரிக்கப்படும் கல்சிய சத்துகளின் அளவு இயல்பை விட குறைந்துவிடுகிறது. அதே தருணத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற வேறு சில உடலியல் ஆரோக்கிய சிக்கல்களால் உணவு கட்டுப்பாடு மற்றும் உணவு பழக்க வழக்கத்தை மாற்றியமைத்துக் கொண்டிருப்பர். அத்துடன் போதிய அளவிற்கு உடற்பயிற்சியையோ அல்லது உடலுக்கு தேவையான விற்றமின் - டி சத்திற்கான பயிற்சியையோ மேற்கொள்வதில்லை. இதனால் அவர்கள் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகி, ஓஸ்டியோபோரோஸிஸ் என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். 

இவர்கள் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைப் பெறும்போது அவர்களுக்கு உணவின் மூலமாக கல்சிய சத்தினை உட்கிரகித்துக் கொள்ளும் சக்தி இருந்தால் அவர்களுக்கு கல்சிய சத்துள்ள உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதுடன் போதிய கால அளவில் எடுத்துக் கொள்ளுமாறு கல்சிய சத்து மாத்திரைகளையும் பரிந்துரைப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு கல்சிய சத்துள்ள உணவுப் பொருளை சாப்பிட்டாலும் அவற்றிலுள்ள கல்சிய சத்தை உட்கிரகிக்கும் தன்மையை உடல் பெறவில்லை என்றால் மட்டுமே அவர்களுக்கு குறிப்பிட்ட கால அளவுகளில் நேரடியாக கல்சிய சத்தினை அளிக்கும் கல்சிய ஊசியினை போட்டுக் கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். இதில் மருத்துவர்களின் சோதனைக்கு பிறகே தீர்மானிக்கப்படும். அதனால் எலும்பு தேய்மான பிரச்சினை வந்துவிட்டால் கல்சிய ஊசிப் போட்டுக் கொள்ளவேண்டும் என்ற பொதுமையான முடிவிற்கு நோயாளிகள் வரக்கூடாது.

ஒரு சிலர் மருத்துவர்களின் இந்த அறிவுரைகளை அலட்சியப்படுத்திவிட்டு கல்சிய சத்து ஊசியைப் போட்டுக்கொண்டால் அவர்களின் சிறுநீரகம் பாதிப்படையும். அதே சமயத்தில் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்கள், மாதவிடாய் சுழற்சியில் கோளாறுகளை சந்தித்தவர்கள், உடலுழைப்பு குறைந்தவர்கள் ஆகியவற்றிற்கு ஆளாகும் பெண்கள் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகுவது அதிகம். அதனால் இவர்கள் முறையாக மருத்துவர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைக்கு பிறகே கல்சிய சத்து ஊசியினை போட்டுக் கொள்ளவேண்டும். 

டொக்டர். நிவேதனா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்