இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரம் என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலத்திலும் கானல்நீராக மாறி விடுமோ என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வது குறித்தோ அல்லது அது குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பிலோ எத்தகைய எண்ணப்பாடுகளையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்பது தற்போது புலனாகின்றது.
இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பாராளுமன்றத் தேர்தலின் போதும் இதற்கான உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று உறுதி வழங்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்க முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பதன் மூலம் துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரையில் தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபை முறைமை அமுலில் இருக்கும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று தற்போது இரண்டு வருடங்களாகின்ற போதிலும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்றிட்டம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்குக் கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இல்லாத நிலைமை நீடித்து வருகின்றது.
நாட்டில் சகல இன மக்களும் சமத்துவத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன் அதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
நாட்டில் சகல இன மக்களும் சமத்துவத்துடன் வாழ வேண்டியது அவசியமாகும். அதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால், சிறுபான்மையினமான தமிழ், முஸ்லிம் மக்களின் தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கேற்ற வகையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது அவசியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையில் சகல இன மக்களையும் சமத்துவமாக வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்குவதாகக் கூறும் அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் தனித்துவத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இல்லை.
அதிகாரப் பரவலாக்கலில் ஆரம்பக்கட்டமாக அமைந்த மாகாண சபை முறைமையைக் கூட அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் பின்னடிப்பதாகவே தெரிகின்றது. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிப்பு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. கடந்த 8 வருட காலத்துக்கு மேலாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளின்றி ஜனாதிபதி நேரடி பிரதிநிதிகளான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழேயே செயற்பட்டு வருகின்றன.
உண்மையிலேயே மாகாண சபைகளின் அதிகாரங்கள் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், முன்னைய அரசாங்கங்களைப் போன்றே சாக்குபோக்குகளைக் கூறி தேர்தலை நடத்தாது பிற்போடும் செயற்பாட்டிலேயே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஈடுபட்டு வருகின்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கடந்த கால அரசாங்கங்களும் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றிருந்தது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பதவி வகித்திருந்தார். அன்று தெற்கின் எதிர் எதிர் சக்திகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது.
இரு துருவங்களான பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்திருந்த நிலைமையானது அரசியல் தீர்வுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பதவி வகித்தமை அரசியல் தீர்வுக்கு மேலும் உந்து சக்தியாக அமையும் என்றும் கருதப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழி நடத்தல் குழு அமைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் கலந்துரையாடப்பட்டு, மாகாணங்களுக்கு மீளவும் பெற முடியாத அதிகாரங்களை வழங்குவது தொடர்பிலும் ஒருமித்த நாட்டுக்குள் இத்தகைய தீர்வை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான இரா. சம்பந்தன் நம்பிக்கைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக விட்டுக் கொடுப்புகளுடன் அவர் செயற்பட்டிருந்தார். இந்த வழிநடத்தல் குழுவில் அன்று மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவராக இருந்த அநுரகுமார திசாநாயக்க அங்கம் வகித்தார். அரசியல் தீர்வு தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு குறித்தும் அவரது கருத்துகளும் பெறப்பட்டிருந்தன. இவ்வாறு அன்று வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்து அரசியல் தீர்வு குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்கிய ஜே.வி.பி.யின் அன்றைய தலைவர்தான் இன்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியிலிருக்கின்றார்.
அவர் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தலின் போதுதான் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற உறுதி மொழி தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டிருந்தது. இன்று அவர் பதவியேற்று இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையிலும் அரசியல் தீர்வு என்பது வெறும் கானல்நீராகவே மாறியிருக்கின்றது.
அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் அக்கறைகொள்ளாத நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பிலாவது அரசியல் தீர்வு குறித்த திட்டவரைபு தயாரிக்கப்பட்ட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடி திட்டவரைபொன்றை தயாரித்து அதனை அரசாங்கத்துக்கு முன் வைக்க வேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்த அரசியல் தீர்வு தொடர்பான திட்ட வரைபை ஒன்றிணைந்து தயாரிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே முரண்பாடான நிலைமை நீடித்து வருகின்றது. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தது.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையானது மூன்று தடவைகள் இதற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்த போதிலும் தமிழ் தேசியக் கட்சிகளின் சகல தலைமைகளையும் ஒன்றுபடுத்த முடிந்திருக்கவில்லை. இதற்கு முன்னர் சுவிட்ஸர்லாந்து தூதரகமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளை ஒன்றிணைத்து அரசியல் தீர்வு திட்டவரைபை தயாரிப்பதற்கு முனைந்திருந்தது. அந்த முயற்சியும் கைகூடியிருக்கவில்லை.
இந்தப் பின்னணியில் தமிழ்த் தேசிய பேரவை, சிவில் சமூக அமைப்பினருடன் இணைந்து புதிய அரசியல் தீர்வு வரைபினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டு அண்மையில் மூன்று குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு தமிழ் தேசியப் பேரவை சார்பில் ஒரு குழுவும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் சார்பில் மற்றொரு குழுவும் ஏனைய அமைப்புகளின் சார்பில் வேறொரு குழுவும் என பல்வேறு குழுக்கள் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் ஆராய்வது எந்த வகையிலும் நன்மையளிக்கக் கூடிய விடயமல்ல. எனவே, சகல தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து திட்டவரைபொன்றை தயாரித்து அதனை அரசாங்கத்திடம் முன்வைத்து அழுத்தம் கொடுப்பதே இன்றைய நிலையில் சிறந்ததென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM