(எம்.வரதராஜன், நியூஸிலாந்து)
ஓய்வு பெற்ற பாராளுமன்ற பிரதம சமகால உரைபெயர்ப்பாளரும் (Chief Parliamentary Symoultenious Interpreter) ஓய்வு பெற்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான (Director of Legislative Service) எம்.கே ராகுலன் பிரிந்த செய்தி பாராளுமன்ற சேவைகள், பாராளுமன்ற அரசியலாளர்களுக்கு மட்டுமன்றி ஊடகர்கள் ஒலி ஒளிபரப்பாளர்களுக்கும் மூத்த கலைஞர்களுக்கும் மிகுந்த கவலை தருவதாகும்.
மூன்று தசாப்தங்களாக, பாராளுமன்ற அரசியல்வாதிகளுடனும் சிறப்பு மிக்க பாராளுமன்ற செயலாளர் நாயகங்களுடனும் மூத்த அலுவலர்களுடனும் பணியாற்றிய ஒருவர். நாட்டின் பிரதமர், ஜனாதிபதிகளுக்கெல்லாம் உரைபெயர்ப்பாளராக இருந்தவர்.
கலை, இலக்கியம் போன்றவற்றுடன் கேரள சமாஜத்தின் அபிவிருத்திப் பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டியவர்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மிகுந்த தேர்ச்சி மிக்கவர்.
எமது பாடசாலை நாட்களில் வானொலி நாடகங்களின் முடிவில் அறிவிக்கப்படும், நடித்தவர்கள் பட்டியலில் உச்சரிக்கப்படும் எம்.கே. ராகுலனே இவர்.
இலங்கை வானொலியில் ஒலிபரப்பான புகழ் பெற்ற 'தணியாத தாகம்' நாடகத்திலும் அவர் நடித்திருந்தார்.
சிந்தாமணி ஆசிரியர் க.தா சிவகுருநாதன் வாராவாரம் எழுதி வானொலியில் ஒலிபரப்பான கதம்பம் நாடகத்திலும் நடித்தார்.
நான் ரூபவாஹினியில் பணியாற்றிய காலத்தில் இலங்கை வானொலிக்கு அவர் வந்த காலத்தில் தொடங்கிய தொடர்பும் நட்பும் நியூசிலாந்துக்கு வந்த பின்னரும் நீண்டது.
சில்லையூர் செல்வராசனின் இறுதிச்சடங்கில் அவரும் வந்திருந்தபோது ஓசோவிலிருந்து கண்ணதாசன் பாடல் வரிகள் உள்பட அங்கிருந்த சிலருக்குச் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
இன்று அவரது மரணம் பற்றிப் பேசும்போது நாமும் மரணம் பற்றி ஏதேதோ கதைகளைச் சொல்கிறோம். நமது பிரிவுகளின்போதும் தத்துவங்கள் மற்றவர்களால் பேசப்படும். இதுவே மனித வாழ்வின் நியதி. என்னுடன் கடைசியாகப் பேசும்போதும் வாழ்வியல் பற்றியே பேசினார்.
ராகுலன் அண்ணரை நான் கடைசியாகத் தொடர்பு கொண்டது- தலைவர் சிவசிதம்பரத்தின் நினைவு நூல் தொடர்பான அவரது கட்டுரை ஒன்றைக் கேட்பதற்காகும்.- அதன் குழுவினருக்காக நான் அவரிடம் கேட்க அவரை அழைத்தபோது, "நீங்கள் எப்போ இங்கே வருகிறீர்கள் வரதராஜன்" என்றார்.
"வருவேன் அப்போது சந்திப்போம் அண்ணர்” என்றேன்.
“எதுவும் நடக்கலாம் நடக்காமலும் விடலாம்.. ஆனால் மரணம் நடக்கும். அது எப்போ என்று தெரியாது வரதராஜன். அதற்கு முன் வந்தால் சந்திக்கலாம். மரணம் எம்மை விட்டால் நாம் இருவரும் சந்திப்போம்” என்றார்.
அவரது அழகு தமிழில், அவரது தமிழைப் பலரும் விதந்து பேசக் கேட்டுள்ளேன்.
ஒருமுறை -'படலை', 'சங்கடம்', 'பறைதல்' என எங்கள் ஊரில் (வடமராட்சிப் பகுதியில்) பேசப்படும் சொற்கள், சமையல் கறி, உணவு முறை பற்றி இருவரும் பகிர எங்கள் உரையாடல் நீண்டு சுவையானதாக இருந்தது.
பாராளுமன்ற உரைபெயர்ப்புகள், தலைவர்களுடனான உரைபெயர்ப்புகள் பற்றிய சுவை மிக்க விவரணம் (ஆவணம்) அவர்.
தலைவர் சிவாவின் நூற்றாண்டு நூலுக்கு நினைவுப் பதிவை நான் கேட்டபோது- தமது, தமக்கே உரிய- முக்கியமான சில கடமைகள் பற்றிச் சொன்னார்.
தலைவர் சிவசிதம்பரத்தின் குரல், ஒலி, ஒலிவாங்கி ஊடாக வரும் ஒலி அவரது நீண்ட விரல்கள், அவரது தோற்றம், உயரம் என்பவை இன்றும் மனதில் பதிந்து நிற்பதாகக் கூறிய ராகுலன், சிவாவினது உரையைக் கேட்கவும் தலைவர் அமிர்தலிங்கத்தின் உரையைக் கேட்கவும் ரணில் விக்கிரமசிங்க, காமினி திசாநாயக்க போன்றவர்கள் எங்கிருந்தாலும் ஓடிவந்து சபையில் அமர்வதை நினைவுபடுத்தி அவர் செல்ல…
“அண்ணை, நீங்கள் அவற்றைச் சொல்லுங்களேன்… நான் குறித்துக்கொள்கின்றேன்” என்று நான் கேட்க..... தாம் நேரத்துடன் போராடுவதாகவும் அளவான மொழிபெயர்ப்புப் பணிகளை மட்டும் பொறுப்பேற்றுச் செய்வதாயும் சொன்னார். அதனால் அவரை நான் சிரமப்படுத்த விரும்பவில்லை.
சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், சம்பந்தன் என ஏனைய உறுப்பினர்களிடமும் என்ன விடயத்தை முக்கியமாகப் பேசப் போகிறார்கள் என்பதைத் தாம் சாடையாகக் கேட்பது பற்றிச் சொன்ன அவர், “நான் மொழிபெயர்ப்பாளர் அல்ல. சமகால உரைபெயர்ப்பாளர் (Simultaneous Interpreter). ஆகவே செய்யும் தொழில் தான் தெய்வம். அதனை சீராகவும் அழகாகவும் செய்யவேண்டும். நீங்கள் நேரடி ஒளிபரப்புக்கு முன்னர் என்ன நடக்கப்போகிறது என்று ஒத்திகை பார்ப்பது போலத்தான் இதுவும்”- என்றார்.
சிவசிதம்பரம் அண்ணர் சிலவேளைகளில் முக்கியமான உரை என்றால் 'தம்பி ராகுலன், இன்ன விடயத்தைப் பற்றித்தான் பேசப் போகிறேன்” என்று சொல்லிச் செல்வாராம். அன்றைய உரைபெயர்ப்பு சரியாகவும் சீராகவும் போகவேண்டும் எனும் அவரது விருப்பமே அதற்கு காரணம்” என்றார்.
அண்மைக்காலமாக வடக்கிற்கும் கிழக்கிற்கும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் வரும்போது இடம்பெறும் உரைபெயர்ப்புகளைப் பார்க்கும்போது, ராகுலன் போன்றவர்களின் அருமையை உணரக்கூடியதாக இருந்தது. நான் இவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு பின்னூட்டமும் இட்டிருந்தேன். குறிப்பாக அண்மையில் செம்மணிக்கு வந்த நீதி அமைச்சரின் விஜயம் அதை இன்னும் உணர்த்திற்று.
ரூபவாஹினியில் அமரர் க.தா. சிவகுருநாதன் (சிந்தாமணி ஆசிரியர்) எழுதிய கதையை நான் தொலைக்காட்சி நாடகமாகத் தயாரித்தபோது சிவகுருநாதன் ஒரு பாத்திரத்துக்கு (தந்தையார் பாத்திரம்) ராகுலனைப் போடலாம்; அவருக்கு நடிக்க விருப்பம்” எனத் தமது எண்ணத்தைப் பகிர்ந்தார். ஐந்து நாள் ஒளிப்பதிவு என்பதால் அந்நேரத்தில் ராகுலனால் வரமுடியவில்லை.
95இல் ஐ.ரி.என். இல் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டபோது எனக்கு வாழ்த்துத் தெரிவித்தவர் ஏதும் உதவிகள் தேவை என்றால் சொல்லும்படி வாழ்த்தினார்.
அந்த நிகழ்ச்சிப் பிரிவு தொடங்கிய பின்னர் ஐ.ரி.என்இல் தொடங்கப்பெற்ற காலை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான "நாதவிநோதம்" நிகழ்ச்சியில் அதிதியாக ராகுலன் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்ச்சி தொடங்கி சில நிமிடங்களில் கலையகத்துக்கு விரைந்து வந்த நிலையக் கடமை அதிகாரி (Duty Officer) “இந்தச் செய்தியை உடனடியாக சொல்லவேண்டும் என்று நிலையத் தலைவர் சொல்கிறார்” என்று சிங்கள மொழிப்பிரதியை என்னிடம் தந்தார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.
மணித்தியாலச் செய்திகள் ஊடகங்களில் இல்லாத காலம் என்பதால் மொழிபெயர்ப்பாளர்களோ செய்தி ஆசிரியரோ காலைநேரங்களில் இருப்பதில்லை.
அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராயிருந்த எனக்கு, ராகுலன் இருந்ததால் அதனைத் தமிழில் அறிவிக்கும் விடயம் சிக்கலற்றதாய் முடிந்தது.
உள்ளே கலையகத்தில் அறிவிப்பாளருடன் நேரடி ஒளிபரப்பில் அவர் கதைத்துக்கொண்டிருந்ததால் ஒரு தீர்மானத்தை உடனடியாக எடுக்க என்னால் முடிந்தது.
அறிவிப்பாளர் அதனைப் பார்த்துப் படித்துக் கிரகித்து மொழிபெயர்ப்பதை விட ராகுலன் நேரடியாகவே காத்திரமாக வாசிப்பார் என்ற நம்பிக்கையிலும் அத்துடன் அவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரைபெயர்ப்பாளர் என்ற துணிவிலும் அறிவிப்பாளரை உள்ளக தொடர்பிணைப்பின் மூலம் தொடர்புகொண்டு "ஒரு முக்கிய செய்தி வந்திருக்கிறது” என்று சுருக்கமாகச் சொல்லி, அதனை அவரையே மொழிபெயர்க்கும்படி கேட்பதுபோல் அறிவித்துக் கொடுங்கள்” என்று பணித்துவிட்டு 'நேரடியில்' ராகுலன் கமராவில் கதைத்துக்கொண்டிருக்கும்போது அறிவிப்பாளரிடம் கொண்டு சென்று கொடுத்தேன்.
என்ன செய்தியைத் தாம் வாசிக்கப்போகிறார் என்பதை ஓரளவாவது ராகுலன் புரிந்துகொள்ளும் வகையில் “பாதுகாப்பு அமைச்சு அனுப்பியுள்ள ஒரு சம்பவம் தொடர்பான செய்தி என்று சொல்லி நீங்கள் உங்கள் உரைபெயர்ப்பில் இந்தச் செய்தியை நேயர்களுக்குச் சொல்லுங்கள்” என்று சொல்லியிருந்தேன்.
ராகுலன் காகிதத்தை வாங்கினார், பார்த்தார். அடுத்த வினாடியே தமிழில் வாசித்தார். எவ்வித ஆயத்தமும் இல்லை. கண்கள் பார்க்க நாவிலிருந்து சொற்கள் தமிழில் வந்தன. அப்படியே சிங்களத்திலும் அதிலுள்ளதை வாசித்தார்.
செய்தி பாதுகாப்பு அமைச்சு அறிவித்த தலதா மாளிகை தாக்குதல் பற்றிய செய்தியே அது.
என்னுடனிருந்த தொழினுட்பவியலாளர்களுக்கே ஆச்சரியம். இந்த ஆள் அவ்வளவு விரைவாகப் பார்த்துக் கொண்டே சொல்லிவிட்டாரே என்று
சமகால உரைபெயர்ப்பாளர் அல்லவே?
வாக்கியங்களைப் படங்களாகக் கேட்பவர்கள் அவர்கள். அதனால் வாசிப்பது இன்னும் இலகுவல்லவா?
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் ராகுலன் தயாரிப்பில் பணியாற்றிய எனக்கும், குழுவினருக்கும் சொன்னார் -பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும்போது உடனுக்குடன் உரைபெயர்ப்பதுதான் வழக்கம் அவர்கள் என்ன பேசுவார்கள் என்று ஓரளவாவது தெரியும். ஒருவர் மற்றவரைப் பார்த்துப் பேசும்போது மற்றவர் என்ன பேசுவார். என்ன சொல்லலாம் என்று ஓரளவு தெரியும். அதற்கு அரசியல் அறிவும், செய்திகள் படிக்கும் ஆர்வமும் எமக்கு வேண்டும். ஆனால் இன்று நீங்கள் தந்த அனுபவம் வித்தியாசமானது. செய்தி ஒன்றை நான் அறியுமுன்னர் தந்தீர்கள். உங்கள் நிகழ்ச்சியின் பெயரைப்போல விநோதமானது என்றார். அதனாலேயே அவர் என்னைக் காணும்போதெல்லாம் "தலதா மளிகை மறக்கமுடியாது" என்பார்.
சக்தித் தொலைக்காட்சி ஆரம்பமான வேளையில் அதன் முதலாவது காலை நேர நேரடி நிகழ்ச்சியான "காலைக்கதிர்" நிகழ்ச்சியில் அதிதியாக அவரை அழைத்தபோது மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டதுடன் எம்மை வாழ்த்தினார். நண்பர் எழில்வேந்தன் அவரைச் செவ்வி கண்டார்.
இருவரும் வானொலி, நேரடி வர்ணனை, மொழி பெயர்ப்பு, உரைபெயர்ப்பு என்ற தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்த நிகழ்ச்சியாக அமைந்தது.
ஒலிபரப்பாளர்கள், ஒளிபரப்பாளர்களுடனும் ஊடகர்களுடனும் மிகவும் அன்பாகப் பழகும் விக்கினமில்லா நட்புக்குரியவர் அமரர் ராகுலன் என்றும் சந்தோசம் மலர்ந்த அவரது முகம் இன்றும் என்றும் எம் நினைவுகளில் நிற்கும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM