சட்டவிரோதமான முறையில் வவுணதீவிலிருந்து காத்தான்குடிக்கு அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கடத்திய இருவரை மட்டக்களப்பு மாவட்ட ஊழல் மற்றும் சோசடி ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக ஊழல் மோசடி பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமன் யட்டவரவின் பணிப்பின் பேரில் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ரணதுங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொக்கட்டிச்சோலை சந்தியில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட டிமோ பட்டா லொறியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கடத்திவரப்பட்ட 5 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் லொறி என்பன கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் விரைவில் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.