சகலவிதமான தடைகளையும் தகர்த்தெறிந்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை எல்லா வகையிலும் பெற்றுத் தருவதைத் தமது அரசாங்கம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“அழகு, தூய்மை, குற்றமற்ற தன்மை என்பவற்றின் அடையாளமாகவே குழந்தைகள் விளங்குகின்றனர். நாடு, சமயம், இனம், மொழி போன்ற எல்லைகளைத் தாண்டி, இவ்வுலகின் குழந்தைகள் அனைவருமே எதிர்காலத்தைக் கட்டியெழுப்பப் போகிறவர்கள். அவர்களுக்கு உரித்தான உரிமைகளைச் சிறந்த முறையில் பெற்றுத் தருவதை எனது தலைமையிலான அரசாங்கம் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது” என்று அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் செய்தியில், “முதியவர்கள் ஒரு நாட்டின் அனுபவத் திறம் வாய்ந்த சமூகத்தினராக விளங்குகின்றனர். இலங்கையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தபோதும், அது ஒருபோதும் ஒரு சுமையாகக் கருதப்பட மாட்டாது. இலங்கையில் குடும்பக் கட்டமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதன் முக்கிய பகுதியாக, ஒவ்வொரு குடும்பத்தினரதும் முதியவர்கள் விசேட கவனத்துடன் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.