தனது இளம் மனைவி குளிப்பதைப் பார்த்த ஆறு வயதுச் சிறுவனைக் கொலை செய்த பத்தொன்பது வயது இளைஞரை டெல்லி பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த சிறுவன் கடந்த 27ஆம் திகதி காணாமல் போனான். இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின் (29) சிறுவனின் வீட்டுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாக்குப் பையில் இருந்து அவனது சடலம் மீட்கப்பட்டது. அந்த சாக்குப் பையில் ‘ருக்மணி’ என்று எழுதப்பட்டிருந்தது.

குறித்த சாக்குப் பையை ரோஹித் (19) என்ற இளைஞன் வாங்கிச் சென்றதாக அப்பகுதி வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து, தலைமறைவாயிருந்த ரோஹித்தை பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணையில், தன் மனைவி குளிக்கும்போது பலமுறை எட்டிப் பார்த்த அந்தச் சிறுவன், கீழ்த்தரமாகத் தன் மனைவியை விமர்சித்ததாகவும், அதனால் எழுந்த கோபத்தினாலேயே சிறுவனைக் கொன்றதாகவும் தெரிவித்தார்.

அவர் மீது வழக்குப் பதிவுசெய்த பொலிஸார் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவுள்ளனர்.