ஊழல் மோசடிக்காரர்கள் இனவாதத்தையும் பௌத்த வாதத்தையும் தமது பாதுகாப்பு அரண்களாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். அரசாங்கம் அமைதியாக இருக்கின்றதாகவோ அல்லது இயலாமை என்றோ எண்ண வேண்டாம் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற நிதி அமைச்சின் சுங்க கட்டளைச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிதியமைச்சர் இங்கு மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலமான 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்கென மதிப்பீடுகள் இல்லாது செலுத்தப்படாத கடனாக 258 பில்லியன் ரூபா கணிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய கடனை இன்று எமது அரசாங்கமே செலுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நாம் இது வரையில் 128 பில்லியன் ரூபாவை செலுத்தியிருக்கின்றோம். முன்னைய அரசாங்கம் கட்டிக்கொண்ட பாவத்தை இப்போது நாம் சுமந்து கொண்டிருக்கின்றோம்.
எமது ஆட்சியின் கீழ் இன்று மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அதனால் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
சுவிட்ஸர்லாந்தின் டவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின் போது சுமார் 63 கூட்டங்களில் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிட்டியிருந்தது.
இங்கு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள பேர்வழிகள் இனவாதத்தையும் பௌத்தவாதத்தையும் பரப்பி அதனைத் தமது பாதுகாப்பு அரணாக பயன்படுத்த முனைகின்றனர். இதனைப் பார்த்துக் கொண்டு அரசாங்கம் அமைதியாக இருப்பதாக எவ ரும் எண்ணிவிடக் கூடாது என்பதைக் கூறிவைக் கின்றேன்.
எமது அரசாங்கத்திடம் இனவாதம் இல்லை, மதவாதம் இல்லை. அனைத்து தரப்பினரையும் அரவணைத்தே செயற்படு கிறது என்றார்.