மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தெரிவித்தார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இங்கிலாந்து பிராந்திய கழகமான சரே பிராந்திய கழகத்துடனான ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளார். சரே பிராந்திய அணிக்காக சங்கக்காரா கடந்த மூன்று வருடங்களாக விளையாடிய நிலையில், முதற்தரப் போட்டிகளில் இருந்து குமார் சங்ககார முழுமையாக ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையிலேயே குமார் சங்கக்கார ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சங்கா மேலும் தெரிவிக்கையில்,

“இதையிட்டு நான் நிச்சயம் வருந்துகிறேன், சந்தேகமேயில்லாமல்! ஆனால் எனது முடிவு நல்ல முடிவு என்றே நம்புகிறேன்! மிகச் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பல வீரர்கள் பல்வேறு கசப்புணர்வுகளுடன்தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவார்கள். ஆனால், நான் மிகச் சில கசப்புணர்வுகளுடன் விலகுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், எனது ஆட்டமும் அதன் மூலம் நான் சாதித்தவையும் எனக்கு மிகத் திருப்தி தருவனவாக இருக்கின்றன.

“சில வேளைகளில், ‘இன்னும் சிலகாலம் விளையாடலாமோ’ என்று சில வீரர்கள் எண்ணுவார்கள். ஆனால், அவர்களது எண்ணத்தைச் செயற்படுத்திய பிறகுதான், ‘முன்னதாகவே விலகியிருக்கலாம்’ என்று எண்ணத் தோன்றும். அவ்வாறான உணர்வுக்கு இடம் கொடுக்க நான் விரும்பவில்லை.”

” சரே அணியின் தலைவர், மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். சரே அணி கடந்த மூன்று வருடத்தில் எனக்கு உதவியாக இருந்துள்ளது. எனது சொந்த நாட்டில் நான் எப்படி இருந்தேனோ அதே போன்ற நிலையினை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இங்கு உருவாக்கி தந்திருந்தார்கள் “. 

” நான் அதிக முதற்தரப்போட்டிகளில் விளையாடியதில்லை. சரே அணிக்காக விளையாடியது சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது.”  

“ இளம் வீரர்கள், சிரேஷ்ட வீரர்கள் கலந்து விளையாடுவது நல்ல அனுபவமாகவும், இங்கிலாந்தில் வீரர்கள், ரசிகர்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்கள் என்பதனையும் இங்கே வந்து அறிந்துகொண்டேன்.”

“ கிரிக்கெட்டின் தொடர் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இங்கே நான் பெற்ற சதங்களை விட, விளையாடிய அனுபவம் சிறந்தது” என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக 2015ஆம் ஆண்டு அறிவித்த சங்கக்கார, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 

தற்போது முதற்தரப் போட்டியில் இருந்து விலகியிருக்கும் சங்கா, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச இ-20 போட்டிகளில் விளையாடுவார் என்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதலான செய்தி!

சரே மற்றும் சமர்செட் அணிகளுக்கிடையில் கடந்த 22ஆம் திகதி நிறைவடைந்த போட்டியுடன் குமார் சங்கக்கார இங்கிலாந்தில் இருந்து விடைபெறுகின்றார். 

குமார் சங்ககாரா இறுதியாக விளையாடிய போட்டியிலும் சதமடித்து நிறைவு செய்துள்ளார்.

சமர்செட் அணியுடன் 157 ஓட்டங்களையும், 35 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொண்டார். 2017 ஆண்டு தொடரில் குமார் சங்கக்கார 1,442 ஓட்டங்களை 110 என்ற சராசரியில் பெற்றுள்ளார். இந்த பருவகாலத்தில் மட்டும் 8 சதங்களை அவர் பெற்றுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் 545 ஓட்டங்களை 77 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 20-20 போட்டிகளில் 120 ஓட்டங்களை 30 என்ற சராசரியில் பெற்றுள்ளார். குமார் சங்ககாராவின் சேவையை பாராட்டி சரே அணி குமார் சங்ககாராவுக்கு வாழ்நாள் கழக அங்கத்துவம் வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.