மட்டக்களப்பில் சுவாமி விபுலாநந்தர் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

சுவாமி விபுலாநந்தரது 125ஆவது ஆண்டு ஜனன தின நிறைவை முன்னிட்டு இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.

இம் மாநாடு சுவாமி விபுலானந்தரின் அறிவு ஆற்றல்களையும், அவரது பணிகளையும், அவற்றால் தமிழ்கூறு நல்லுலகம் எய்திய பயன்களையும் எடுத்துரைப்பனவாக அமையும்.

இந்த நிகழ்வில் அறிஞர்கள், சமூகப்பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். அத்துடன் கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடு, நூல் கண்காட்சி, அறிஞர்கௌரவிப்பு, சுவாமி விபுலாநந்தர் வரலாற்று அறிவுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு, கலாசார ஊர்வலம் என பல்வேறு சிறப்பம்சங்கள் நடைபெறவுள்ளது.

விழாவின் முதல்நாளான ஒக்டோபர் 05 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லடியில் உள்ள சுவாமி விபுலாநந்தரது சமாதியிலிருந்து சுவாமி விபுலானந்தரின் திரு உருவப்படம் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் வரை எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் இராஜதுரை அரங்கில் ஆரம்பமாகவுள்ளன.

ஆரம்ப நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன்,  கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சர் செல்லையா இராஜதுரை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் குணராசா காசிநாதர் ஆகிய அரசியல் பிரமுகர்கள் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவினை சிறப்பிக்கும் முகமாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ், மட்டக்களப்பு காயத்திரி பீடம் சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார், தென் கைலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோர் வருகை தந்து அருளுரை வழங்கவுள்ளனர்.

விசேடமாக சுவாமி விபுலாநந்தரின் எழுத்தாக்கப்பணிகளும் சேவைகளும் அளப்பரிய பணியினை தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளது. இம்மாநாட்டில் அவரது எழுத்தாக்கப்பணியினைப் போற்றும் வகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சுவாமி விபுலாநந்தரது 'யாழ் நூல்' , 'மதங்க சூளாமணி' சுவாமி விபுலாநந்தரது தமிழ் ஆக்கங்களின் தொகுப்பு, சுவாமி விபுலாநந்தரது ஆங்கில ஆக்கங்களின் தொகுப்பு, என்பவற்றுடன் உடுவை.எஸ்.தில்லைநடரசா அவர்கள் தொகுத்த தமிழிசைக்கு புத்துயிர் அளித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆகிய ஐந்து நூல்களின் வெளியீடும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.