நிரந்தர நியமனம் வழங்குமாறுகோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் ரீ.கிஷான் தெரிவிக்கையில், 'கடந்த காலத்தில் கிழக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து, கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற 1,400 பட்டதாரிகள் உள்ளனர்.

35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கும் மாற்றுத்திறனாளிகளான பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.

உடனடியாக மகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கமும் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு எமது பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் மீண்டும் முன்வைக்கவுள்ளோம்' என்றார்.

- ஜவ்பர்கான்