3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த நிலையில் தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

Published By: Digital Desk 3

12 Jun, 2026 | 10:41 AM
image

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நாய்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரது இதயத்தில் ஏற்பட்ட ‘மைகோபிளாஸ்மா’ தொற்றினால்  கடும்  இதயத் துடிப்பு சீர்குலைவு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என வைத்தியர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

சுமார் மூன்றரை ஆண்டுகள் பாங்கொக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வியாழக்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 07:48 மணிக்கு காலமானதாக இன்று (12) வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரச குடும்பத்திலேயே மிகவும் படித்த, திறமையான ஒருவராக இளவரசி பஜ்ரகிதியாபா மதிக்கப்பட்டார்.

சட்டத்துறையில் பயிற்சி பெற்ற அவர், அமெரிக்காவின் புகழ்பெற்ற கோர்னெல் பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலை பட்டங்களைப் பெற்றவர்.

நியூயோர்க்கில் உள்ள ஐநாவுக்கான தாய்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய அவர், பின்னர் தாய்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.

2012 முதல் 2014 வரை ஆஸ்திரியாவுக்கான தாய்லாந்து தூதுவராகப் பணியாற்றினார். அத்துடன், தென்கிழக்கு ஆசியாவிற்கான ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் (UNODC) சட்டத்தின் ஆட்சிக்கான நல்லெண்ண தூதுவராகவும் செயல்பட்டார்.

தாய்லாந்து சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகள் மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு, அவரது தந்தை மன்னர் வஜிராலோங்கோர்ன், இளவரசிக்கு 'ஜெனரல்' அந்தஸ்து வழங்கி, தனது தனிப்பட்ட பாதுகாப்புப் படையின் பணியாளர் தலைவராகவும்  நியமித்திருந்தார்.

இளவரசி பஜ்ரகிதியாபாவின் மறைவு, தாய்லாந்து அரச வாரிசுரிமையில் பெரும் கேள்விக்குறியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மன்னர் வஜிராலோங்கோர்னுக்கு 73 வயதாகியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடுத்த வாரிசை அவர் அறிவிக்கவில்லை.

தாய்லாந்து பாரம்பரியப்படி ஆண் வாரிசுகளுக்கே முன்னுரிமை என்றாலும், 1974ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தத்தின்படி பெண் வாரிசுகளும் அரியணை ஏற முடியும்.

மன்னருக்கு 5 மகன்கள் இருந்தாலும், அவரது இரண்டாவது மனைவியின் 4 மகன்கள் 1996 இல் அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டு அமெரிக்காவில் வாழ்கின்றனர். மூன்றாவது மனைவியின் மகனான இளவரசர் தீபாங்கோர்ன் அடுத்த வாரிசாகக் கருதப்பட்டாலும், மன்னராகச் செயல்படுவதற்கான அவரது ஆளுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால், பல தாய்லாந்து மக்கள் இளவரசி பஜ்ரகிதியாபாவே அடுத்த மகாராணியாகவோ அல்லது இளவரசருக்கு உதவியாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பையோ ஏற்பார் என நம்பியிருந்தனர். அவரது திடீர் மறைவு வாரிசுரிமை விவாதங்களை முடக்கியுள்ளது. அத்துடன், தாய்லாந்தின் கடுமையான 'அரச நிந்தனைச் சட்டம்' காரணமாக இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி

2026-07-20 15:38:45
news-image

கயானாவில் 133 பயணிகளுடன் பயணித்த படகு...

2026-07-20 13:44:27
news-image

ரஷ்யாவுக்கு சென்றார் வடகொரிய வெளிவிவகார அமைச்சர்...

2026-07-20 12:49:18
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் உட்பட...

2026-07-20 11:53:27
news-image

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2026-07-20 11:44:52
news-image

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ;...

2026-07-20 10:19:23
news-image

மேற்காசியாவில் போர் நெருக்கடி தீவிரம்; மசகு...

2026-07-20 10:18:50
news-image

எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோவில் இருந்து...

2026-07-20 09:42:03
news-image

பெரு நாட்டில் இரட்டை பூமியதிர்ச்சியில் சிக்கி...

2026-07-20 08:56:55
news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07