1998இல் பங்குபற்றும் அணிகளின்  எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு

11 Jun, 2026 | 09:57 PM
image

(நெவில் அன்தனி)

கால்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் இரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்ததாலும் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கையை 32ஆக அதிகரிக்க  பீபா   இணங்கியது. இதற்கு அமைய 1998 உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 32ஆக அதிகரிக்கப்பட்டு 8 குழுக்களில் முதல் சுற்று நடத்தப்பட்டது.

மேலும் 1998 உலகக் கிண்ணத்துகான தகுதிகாண் சுற்றில் 174 அணிகள் பங்குபற்றின.

1998 பிரான்ஸ் - பிரான்ஸ் சம்பியன்

பதினாறாவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயம் பிரான்ஸில் 1998 ஜூன் 10ஆம் திகதியிலிருந்து ஜூலை 12ஆம் திகதிவரை நடைபெற்றது.

இன ஒடுக்கல் காரணமாக நீண்டகால சர்வதேச தடைக்குட்பட்டிருந்த தென் ஆபிரிக்கா முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பிரவேசம் செய்தது. அத்துடன் போல்கன்   யுத்தம் காரணமாக பல விளையாட்டுப் போட்டிகளில் தடையை எதிர்கொண்டிருந்த யூகோஸ்லாவியாவுக்கும் மீண்டும் விளையாட அனுமதி வழங்கப்பட்டது.

சுதந்திர நாடான குரோஷியா முதல் தடவையாக உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெற்றது. அதே போன்று ஜெமெய்க்காவும் இறுதிச் சுற்றில் விளையாட முதல் தடவையாக தகுதிபெற்றது.

பங்குபற்றிய அணிகள்

பிரேஸில், மொரோக்கோ, நோர்வே, ஸ்கொட்லாந்து (ஏ குழு), ஒஸ்திரியா, கெமரூன், சிலி, இத்தாலி (பி குழு), டென்மார்க், பிரான்ஸ், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா (சி குழு), பல்கேரியா, நைஜீரியா, பரகுவே, ஸ்பெய்ன் (டி குழு), பெல்ஜியம், மெக்சிகோ, நெதர்லாந்து, தென் கொரியா (ஈ குழு), ஜேர்மனி, ஈரான், ஐக்கிய அமெரிக்கா, யூகோஸ்லாவியா (எவ் குழு), கொலம்பியா, இங்கிலாந்து, ருமேனியா, டியூனிசியா (ஜீ குழு), ஆர்ஜன்டீனா, குரோஷியா, ஜெமெய்க்கா, ஜப்பான் (எச் குழு)

இந்த 8 குழுக்களிலும் லீக் சுற்று நடத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 16 அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதி பெற்றன.

இறுதிப் போட்டியில் பிரேஸிலை எதிர்த்தாடிய பிரான்ஸ் 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது.

அந்த இறுதிப் போட்டியில் 27ஆவது மற்றும் 45+1ஆவது நிமிடங்களில் கோர்ணர் கிக்குகளைப் பயன்படுத்தி ஸினேடின் ஸிடேன் உயரே தாவி தலையால் முட்டி போட்ட கோல்கள் சிறந்த கோல்களாக கருதப்படுகிறது.

உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), மேற்கு ஜேர்மனி (1974), ஆர்ஜன்டீனா (1978) ஆகிய நாடுகளின் வரிசையில் சொந்த மண்ணில் சம்பியனான ஆறாவது நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுக்கொண்டது.

அறிமுக அணியான குரோஷியா கடைசிவரை போராடி 3ஆம் இடத்தைப் பெற்று வரலாறு படைத்தது.

நெதர்லாந்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட குரோஷியா மூன்றாம் இடத்தைப் பெற்றது.

2002 தென் கொரியா, ஜப்பான் - பிரேஸில் சம்பியன்

பதினேழாவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி தென் கொரியாவிலும் ஜப்பானிலும் 2002ஆம் ஆண்டு மே 31ஆம் திகதியிலிருந்து ஜூன் 30ஆம் திகதிவரை நடைபெற்றது.

இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டி முதல் தடவையாக ஆசிய கண்டத்தில் அரங்கேற்றப்பட்டது. அத்துடன் இரண்டு நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ணப் போட்டியாகவும் அது அமைந்தது.

இதன் காரணமாக 3 நாடுகள் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் இயல்பாகவே விளையாட தகுதிபெற்றன.

நடப்பு சம்பியன் பிரான்ஸ், வரவேற்பு நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியனவே இயல்பாக தகுதியைப் பெற்றுக்கொண்டிருந்தன.

இதனைவிட 199 அணிகள் பங்கேற்ற தகுதிகாண் சுற்றில் இருந்து 29  அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

சீனா, ஈக்வடோர், செனகல், ஸ்லோவேனியா ஆகியன முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன.

மேலும் 2002 உலகக் கிண்ணத்தில்தான் முதல்தடவையாக ஒவ்வொரு குழாத்திலும் 23 வீரர்களைப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டது. அதற்கு முதல் 22 வீரர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஒவ்வொரு குழாத்திலும் 3 கோல்காப்பாளர்கள் இருக்க வேண்டும் என்ற விதியும் அறிமுகமானது.

பங்குபற்றிய அணிகள்

டென்மார்க், பிரான்ஸ், செனகல், உருகுவே (ஏ குழு), பரகுவே, ஸ்லோவேனியா, தென் ஆபிரிக்கா, ஸ்பெய்ன் (பி குழு), பிரேஸில், சீனா, கொஸ்டா ரிக்கா, துருக்கி (சி குழு), போலந்து, போர்த்துக்கல், தென் கொரியா, ஐக்கிய அமெரிக்கா (டி குழு), கெமரூன், ஜேர்மனி, அயர்லாந்து குடியரசு, சவூதி அரேபியா (ஈ குழு), ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, நைஜீரியா, சுவீடன் (எவ் குழு), குரோஷியா, ஈக்வடோர், இத்தாலி, மெக்சிகோ (ஜீ குழு), பெல்ஜியம், ஜப்பான், ரஷ்யா, டியூனிசியா (எச் குழு)

இவற்றில் ஏ, பி, சி, டி ஆகிய குழுக்களுக்கான  போட்டிகள்   தென் கொரியாவிலும் ஈ, எவ், ஜீ, எச் ஆகிய குழுக்களுக்கான போட்டிகள் ஜப்பானிலும் நடத்தப்பட்டன.

அரை இறுதிகளில் தென் கொரியாவை 1 - 0 என ஜெர்மனியும் துருக்கியை 1 -  0 என பிறேஸிலும் வெற்றிகொண்டன.

இறுதிப் போட்டியில் ஜேர்மனியை 2 - 0 என வெற்றிகொண்ட பிரேஸில் ஐந்தாவது தடவையாக உலக சம்பியனானது.

அத்துடன் மூன்று கண்டங்களில் சம்பியனான முதலாவது அணி என்ற வரலாற்றுச் சாதனையை பிரேஸில் நிலைநாட்டியது. ஐரோப்பா (1958),  அமெரிக்கா (1962, 1970, 1994), ஆசியா (2002) ஆகிய மூன்று கண்டங்களிலும் பிறேஸில் மாத்திரமே சம்பியனாகி உள்ளது.

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் தென் கொரியாவை 3 - 2 என துருக்கி வெற்றிகொண்டது.

2006 ஜேர்மனி - இத்தாலி சம்பியன்

பதினெட்டாவது பீபா உலகக் கிண்ண அத்தியாயம் ஜேர்மனியில் 2006ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதியிலிருந்து ஜூலை 9ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியை கிழக்கு மற்றும் மேற்காக பிரித்த பேர்லின் சுவர் 1989இல் தகர்க்கப்பட்டு 1990இல் இரண்டு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைப்பட்ட பின்னர் ஜேர்மனியில் நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இதுவாகும்.

198 நாடுகள் பங்குபற்றிய தகுதிகாண் சுற்றிலிருந்து 31 அணிகள் இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன. வரவேற்பு நாடு என்ற வகையில் ஜேர்மனி நேரடி தகுதியைப் பெற்றுக் கொண்டது. 1938இல் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து முதல் தடவையாக நடப்பு சம்பியன்  நேரடியாகத் தகுதிபெறும் நிலை நீக்கப்பட்டது.

அங்கோலா, கானா, ஐவரி கோஸ்ட், டோகோ, ட்ரினிடாட் & டுபாகோ, யூக்ரெய்ன், செக் குடியரசு, சேர்பியா & மொன்டேநீக்ரோ ஆகிய அணிகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்கேற்றன.

பங்குபற்றிய அணிகள்

கொஸ்டா ரிக்கா, ஈக்வடோர், ஜேர்மனி, போலந்து (ஏ குழு), இங்கிலாந்து, பரகுவே, சுவீடன், ட்ரினிடாட் & டுபாகோ (பி குழு), ஆர்ஜன்டீனா, ஐவரி கோஸ்ட், நெதர்லாந்து, சேர்பியா & மொன்டேநீக்ரோ (சி குழு), அங்கோலா, ஈரான், மெக்சிகோ, போர்த்துக்கல் (டி குழு), செக் குடியரசு, கானா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா (ஈ குழு), அவுஸ்திரேலியா, பிரேஸில், குரோஷியா, ஜப்பான் (எவ் குழு), பிரான்ஸ், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, டோகோ (ஜீ குழு), சவூதி அரேபியா, ஸ்பெய்ன், டியூனிசியா, யூக்ரெய்ன் (எச் குழு)

வழமையான போட்டி முறைமையின் கீழ் நடத்தப்பட்ட உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் ஜேர்மனி, இத்தாலி, போர்த்துக்கல், பிரான்ஸ் ஆகிய நான்கு ஐரோப்பிய அணிகள் அரை இறுதிகளுக்கு முன்னேறின.

முதலாவது அரை இறுதியில் ஜேர்மனியை மேலதிக நேரத்தில் 2 - 0 என இத்தாலியும் இரண்டாவது அரை இறுதியில் போர்த்துக்கலை 1 - 0 என பிரான்ஸும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இத்தாலிக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இறுதிப் போட்டி மேலதிக நேரத்தில் 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பெனல்டி முறையில் 5 - 3 என பிரான்ஸ் வெற்றிபெற்று சம்பயினானது.

உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டி பெனல்டிகளில் தீர்மானிக்கப்பட்டது இது இரண்டாவது தடவையாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இத்தாலி சம்பந்தப்பட்டிருந்தது.

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் போர்த்துக்கலை 3 - 1 என ஜேர்மனி வெற்றிகொண்டது.

ஸிடேனுக்கு சிவப்பு அட்டை

இத்தாலிக்கும் பிரான்ஸுக்கும்  இடையிலான உலகக் கிண்ண  இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் 10 நிமிடங்கள்  எஞ்சி இருந்தபோது இத்தாலி பின்கள வீரர் மார்க்கோ மெட்டேராஸிஸின் மார்பில் பிரான்ஸ் வீரர் ஸினேடின் ஸிடேன் தலையால் முட்டியதால் மத்தியஸ்தரின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்கானார். அந்த சந்தர்ப்பத்தில் பந்து விளையாட்டில் இருக்கவில்லை.

மெட்டேராஸிஸ் தனது தாயாரை தகாத வார்த்தைகளால் அவமதித்ததாலேயே  ஆத்திரம் அடைந்து தலையால் முட்டியதாக ஸிடேன் பின்னர் கூறினார். விசாரணைகளின் பின்னர் மெட்டேராஸிஸ் குற்றவாளியாகக் காணப்பட்டு பீபாவினால் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அந்தப் போட்டிதான் ஸிடேனின் பிரியாவிடை போட்டியாகவும் அமைந்தது.

2010 தென் ஆபிரிக்கா - ஸ்பெய்ன் சம்பியன்

இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்க கண்டத்தில் முதல் தடவையாக பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று 2010ஆம் ஆண்டு நடைபெற்றது.

பீபா உலகக் கிண்ணத்தில் 19ஆவது அத்தியாயமாக அமைந்த இறுதிச் சுற்றை தென் ஆபிரிக்கா 2010 ஜூன் 10ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதிவரை நடத்தியது.

இந்த உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றில் 204 தேசிய அணிகள் பங்குபற்றின. உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 200க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியது அதுவே முதல் தடவையாகும்.

தகுதிகாண் சுற்று நிறைவில் 31 அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. வரவேற்பு நாடு என்ற வகையில் தென் ஆபிரிக்கா நேரடியாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஸ்லோவாக்கியா, சேர்பியா ஆகிய அணிகள் முதல் தடவையாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன. சேர்பியா அதற்கு முன்னர் சேர்பியா & மோன்டேநீக்ரோ அணியாக பங்குபற்றியது. தனி நாடாக 2010இல்தான் சேர்பியா பங்குபற்றியது.

பங்குபற்றிய அணிகள்

பிரான்ஸ், மெக்சிகோ, தென் ஆபிரிக்கா, உருகுவே (ஏ குழு), ஆர்ஜன்டீனா, கிரேக்கம், நைஜீரியா, தென் கொரியா  (பி குழு), அல்ஜீரியா, இங்கிலாந்து, ஸ்லோவேனியா, ஐக்கிய அமெரிக்கா (சி குழு), அவுஸ்திரேலியா, ஜேர்மனி, கானா, சேர்பியா (டி குழு), கெமரூன், டென்மார்க், ஜப்பான், நெதர்லாந்து (ஈ குழு), இத்தாலி, நியூஸிலாந்து, பரகுவே, ஸ்லோவேக்கியா (எவ் குழு), பிரேஸில், ஐவரி கோஸ்ட், வட கொரியா, போர்த்துக்கல் (ஜீ குழு), சிலி, ஹொண்டுராஸ், ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து (எச் குழு)

உலகக் கிண்ண இறுதிச் சுற்று ஆரம்பமாவதற்கு முன்னரே பிரேஸில், ஜேர்மனி, ஸ்பெய்ன், ஆர்ஜன்டீன ஆகிய நான்கு  அணிகள்   சம்பியனாவதற்கு அனுகூலமான அணிகள் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால், டியகோ மரடோனாவின் பயிற்றுவிப்பிலும் லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலுமான ஆர்ஜன்டீனா கால் இறுதியில் ஜேர்மனியிடம் வீழ்ந்தது. பிரேஸிலும் கால் இறுதியில் நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தது.

அரை இறுதிகளில் உருகுவேயை 3 - 2 என நெதர்லாந்தும் ஜேர்மனியை 1 - 0 என ஸ்பெய்னும் வெற்றிகொண்டன.

தொடர்ந்து மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பிரான்ஸுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது கோல் எதுவும் போடப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் 116ஆவ நிமிடத்தில் அண்ட்ரெஸ் இனியெஸ்டா அலாதியான கோல் ஒன்றைப் போட ஸ்பெய்ன் முதல் தடவையாக சம்பியனானது.

உருகுவேயை 3 - 2 என வெற்றிகொண்ட ஜேர்மனி 3ஆம் இடத்தைப் பெற்றது.

2014 பிரேஸில் - ஜேர்மனி சம்பியன்

இருபதாவது பீபா உலகக் கிண்ண அத்தியாயம் பிரேஸிலில் 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதியிலிருந்து ஜூலை 13ஆம் திகதிவரை நடைபெற்றது. உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி பிரேஸிலில் அரங்கேற்றப்பட்டது இரண்டாவது தடவையாகும்.

தகுதிகாண் சுற்றில் 207 தேசிய அணிகள் பங்குபற்றியதுடன் அவற்றில் 31 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன. வரவேற்பு நாடாக பிரேஸில் ஏற்கனவே நேரடி தகுதியைப் பெற்றிருந்தது.

பொஸ்னியா & ஹேர்ஸிகோவினா முதல் தடவையாக இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

வழமையான போட்டி முறைமைப்படியே முதல் சுற்றும் நொக் அவுட் சுற்றும் 2014இல் பின்பற்றப்பட்டது.

பங்குபற்றிய அணிகள்

பிரேஸில், கெமரூன், குரோஷியா, மெக்சிகோ (ஏ குழு), அவுஸ்திரேலியா, சிலி, நெதர்லாந்து, ஸ்பெய்ன் (பி குழு), கொலம்பியா, கிரேக்கம், ஐவரி கோஸ்ட், ஜப்பான் (சி குழு), கொஸ்டா ரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, உருகுவே (டி குழு), ஈக்வடோர், பிரான்ஸ், ஹொண்டுராஸ், சுவிட்சர்லாந்து (ஈ குழு), ஆர்ஜன்டீனா, பொஸ்னியா & ஹேர்ஸிகோவினா, ஈரான், நைஜீரியா (எவ் குழு), ஜேர்மனி, கானா, போர்த்துக்கல், ஐக்கிய அமெரிக்கா (ஜீ குழு), அல்ஜீரியா, பெல்ஜியம், ரஷ்யா, தென் கொரியா (எச் குழு)

முதலாவது அரை இறுதியில் பிரேஸிலை 7 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஜேர்மனி வெற்றிகொண்டது. உலகக் கிண்ண வரலாற்றில் பிரேஸில் அடைந்த மிகப் பெரிய தோல்வி அதுவாகும்.

இரண்டாவது அரை இறுதியில் நெதர்லாந்தை பெனல்டி முறையில் 0 (4) - 0 (2) என ஆர்ஜன்டீனா வெற்றிகொண்டது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை 1 - 0 என வெற்றிகொண்டு ஜேர்மனி உலக சம்பியனானது.

மேலதிக நேரத்தில் மரியோ கோட்ஸே (113 நி.) வெற்றிகோலை போட்டார்.

கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்த பின்னர் ஜேர்மனி வென்றெடுத்த முதலாவது உலகக் கிண்ணம் அதுவாகும்.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிரேஸிலை 3 - 0 என நெதர்லாந்து வீழ்த்தியது.

2018 ரஷ்யா - பிரான்ஸ் சம்பியன்

பீபா உலகக் கிண்ண இறுதிச் சுற்றின் 21ஆவது அத்தியாயத்தை 2018ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதியிலிருந்து ஜூலை 15ஆம் திகதிவரை ரஷ்யா அரங்கேற்றியது. உலகக் கிண்ண இறுதிச் சுற்று ரஷ்யாவில் நடத்தப்பட்டது அதுவே முதுல் தடவையாகும்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின்போதே வீடியோ உதவி மத்தியஸ்தர் முறைமை அறிமுகமானது. மத்தியஸ்தர்கள் தங்களது தீர்ப்பை உறுதி செய்வதாற்காக இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது பீபாவில் அங்கம் வகித்த 211 நாடுகளில் 210 நாடுகள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் பங்குப்றறின. உலகக் கிண்ண வரலாற்றில் அப்போதைய புதிய சாதனையாக இருந்தது.

முந்தைய உலகக் கிண்ணப் போட்டிகளில் போன்றே 31 அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றதுடன் வரவேற்பு நாடாக ரஷ்யா நேரடி தகுதியை பெற்றது.

ஐஸ்லாந்து, பணாமா ஆகிய அணிகள் முதல் தடவையாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

முந்தைய போட்டி முறைமையே மீண்டும் பின்பற்றப்பட்டது.

பங்குபற்றிய அணிகள்

எகிப்து, ரஷ்யா, சவூதி அரேபியா, உருகுவே (ஏ குழு), ஈரான், மொரோக்கோ, போர்த்துக்கல், ஸ்பெய்ன் (பி குழு), அவுஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், பெரு (சி குழு), ஆர்ஜன்டீனா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா (டி குழு), பிரேஸில், கொஸ்டா ரிக்கா, சேர்பியா, சுவிட்சர்லாந்து (ஈ குழு), ஜேர்மனி, மெக்சிகோ, தென் கொரியா, சுவீடன் (எவ் குழு), பெல்ஜியம், இங்கிலாந்து, பணாமா, டியூனிசயா (ஜீ குழு), கொலம்பியா, ஜப்பான், போலந்து, செனகல் (எச் குழு)

முதலாவது அரை இறுதியில் பெல்ஜியத்தை 1 - 0 என பிரான்ஸும் இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்தை மேலதிக நேரத்தில் 2 - 1 என குரோஷியாவும் வெற்றிகொண்டன.

இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பிரான்ஸ் வெற்றிகொண்டு 2ஆவது தடவையாக உலக சம்பியனானது.

2022 கத்தார் - ஆர்ஜன்டீனா சம்பியன்

22ஆவது பீபா உலகக் கிண்ண அத்தியாயம் கத்தாரில் 2022ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 18ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றை கத்தார் நடத்தியது அதுவே முதல் தடவையாகும். மேலும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று வழமையாக வருடத்தின் நடுப்பகுதியில் நடத்தப்பட்டுவந்தபோதிலும் கடும் உஷ்ணம் காரணமாக வருட கடைசியில் நடத்த கத்தாரும் பீபாவும் தீர்மானித்தன.

2018இல் போன்றே தகுதிகாண் சுற்றில் 210 தேசிய அணிகள் பங்குபற்றின. அவற்றில் 31 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றதுடன் வரவேற்பு நாடு என்ற வகையில் கத்தார் நேரடி தகுதியை ஏற்கனவே உறுதிசெய்துகொண்டிருந்தது.

முந்தைய போட்டி முறைமையே மீண்டும் பின்பற்றப்பட்டது.

பங்குபற்றிய அணிகள்

ஈக்வடோர், நெதர்லாந்து, கத்தார், செனகல் (ஏ குழு), இங்கிலாந்து, ஈரான், ஐக்கிய அமெரிக்கா, வேல்ஸ் (பி குழு), ஆர்ஜன்டீனா, மெக்சிகோ, போலந்து, சவூதி அரேபியா (சி குழு), அவுஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், டியூனிசியா (டி குழு), கொஸ்டா ரிக்கா, ஜேர்மனி, ஜப்பான், ஸ்பெய்ன் (ஈ குழு), பெல்ஜியம், கனடா, குரோஷியா, மொரோக்கோ (எவ் குழு), பிரேஸில், கெமரூன், சேர்பியா, சுவிட்சர்லாந்து (ஜீ குழு), கானா, போர்த்துக்கல், தென் கொரியா, உருகுவே (எச் குழு)

அரை இறுதிகளில் குரோஷியாவை 3 - 0 என ஆர்ஜன்டீனாவும் மொரோக்கோவை 2 - 0 என பிரான்ஸும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியில் பிரான்ஸை பெனல்டி முறையில் 3 (4) - 3 (2) வெற்றிகொண்ட ஆர்ஜன்டீனா மூன்றாவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

மொரோக்கோவை 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட குரோஷியா 3ஆம் இடத்தைப் பெற்றது.

உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 32 அணிகள் பங்குபற்றியது அதுவே கடைசி தடவையாகும்.

கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் கூட்டாக இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகின்ற 23ஆவது உலகக் கிண்ண அத்தியாத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய...

2026-07-20 11:08:12
news-image

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக்...

2026-07-20 05:03:51
news-image

பிபா உலகக் கிணத்தை வெலலப் போவது...

2026-07-19 14:37:01
news-image

கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால்...

2026-07-19 13:38:29
news-image

கோல் மழை பொழியப்பட்ட போட்டியில் பிரான்ஸை...

2026-07-19 10:04:41
news-image

சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்...

2026-07-19 09:14:36
news-image

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்;...

2026-07-18 21:25:07
news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54