மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின் ஒலியும்: 'லயத்துவாசி' கடந்து வந்த ஓராண்டு!

11 Jun, 2026 | 09:05 AM
image

அபிலாஷனி லெட்சுமன் 

ஒரு வருடத்திற்கு முன்பு இணையத்தில் வெளியான ஒரு சொல்லிசை பாடல், வெறும் பொழுதுபோக்குக்கானதாக இல்லாமல், ஒரு சமூகத்தின் 200 ஆண்டுகால கண்ணீரின் சாட்சியமாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. யோகி ஸ்ரீ என்ற இளம் கலைஞர் தனது சொந்த தயாரிப்பான "மலையக ராப் - MALAYAGARAP" ஊடாக வெளிக்கொணர்ந்த முதல் சுயாதீன முயற்சி வெளியாகி ஜுன் மாதம் 06 ஆம் திகதியோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

எவ்வித பெரிய வணிகத் தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவோ, பிரம்மாண்டமான பட்ஜெட்டோ இல்லாமல், உண்மை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உருவான இப்பாடல், இன்று மலையக மக்களின் சமகாலப் போராட்டத்தின் குறியீடாக நிமிர்ந்து நிற்கிறது.

யார் இந்த யோகி ஸ்ரீ?

இத்தனை அழுத்தமான வரிகளோடு, மலையகத்தின் வலியை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்த யோகி ஸ்ரீ யார் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

கேகாலை புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தைச்  சேர்ந்த யோகேந்திரன் விஜயகுமார் எனப்படும் யோகி ஸ்ரீ.  

லயன் அறைகளில் யதார்த்த வாழ்க்கையையும், அங்குள்ள மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களையும் நேரில் கண்டு, அதைத் தன் சொந்த வாழ்வியலாக உணர்ந்தவர். இசையின் மீதும், குறிப்பாக சொல்லிசை  மீதும் கொண்ட காதலால், தன் சமூகத்தின் குரலாக மாற முடிவு செய்தவர். தனக்குத் தெரிந்த கலையை வெறும் பொழுதுபோக்காகப் பயன்படுத்தாமல், ஒடுக்கப்பட்டதன் மக்களின் வரலாற்றைப் பேசும் ஆயுதமாக மாற்றிய ஒரு சுயாதீனக் கலைஞர் தான் இந்த யோகி ஸ்ரீ. 

“வெள்ளையனின் கண்களில் பட்டது என் மூத்த குடிகள் செய்த தவறா..?” இந்த வரிகளின் ஆழத்தைப் புரிந்து கொள்ள, நாம் 19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்ல வேண்டும். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவிலிருந்து இலங்கையின் மலையகப் பகுதிக்கு தேயிலை, இறப்பர் மற்றும்  கோப்பித் தோட்டப் பணிகளுக்காகக் கூலிகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள் நம் பாட்டனும் பூட்டியும்.

காடுகளாகக் கிடந்த நிலங்களை இரத்தமும் சதையும் கொடுத்து, இன்று நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றியவர்கள் அவர்கள். ஆனால், தலைமுறைகள் பல கடந்தும், இன்றும் அடிப்படை உரிமைகளுக்காகவும், வாழத் தகுதியற்ற லயன் வீடுகளிலிருந்து விடுதலை பெறவும் அவர்கள் போராடிக் கொண்டிருப்பதுதான் ஆகப்பெரும் முரண்நகை. இந்த வலியையே "லயத்துவாசி" தன் வரிகளால் சாடுகிறது.

இன்றைய வணிகமயமாக்கப்பட்ட இசை உலகில், ஒரு கலை மக்களிடம் சென்றடைய கோடிக்கணக்கில் விளம்பரம் தேவைப்படும் சூழல் நிலவுகிறது. இந்த பிம்பத்தை உடைக்க வேண்டியதன் அவசியத்தை இப்பாடலின் உருவாக்கமும், அதன் பின்னால் இருக்கும் "MALAYAGARAP" என்ற தனித்துவமான அடையாளமும் உணர்த்துகின்றன.

இது குறித்து யோகி ஸ்ரீ நம்மிடம் பகிர்ந்து கொண்ட போது, "எந்தவொரு ரெக்கார்ட் லேபிளோ, தயாரிப்பு நிறுவனமோ என் சமூகத்தின் வலியை அப்படியே பேச முன்வரவில்லை. அதனால்தான், நமக்கான ஒரு தளமாக 'மலையக ராப்' (MALAYAGARAP) என்பதை உருவாக்கினேன். பணம் இல்லை என்றாலும், என் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய உண்மை என்னிடம் இருந்தது" என்கிறார் அழுத்தமாக.

மேலும், 'லயத்துவாசி' என்ற பெயர் உருவாவதற்கான யதார்த்தமான, அதேநேரம் எரியூட்டும் பின்னணி குறித்து அவர் எம்மிடம் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்:

"என்னை நோக்கி ஒருவர் 'லயத்துக்காட்டான்' என்று வீசிய அந்த வார்த்தை என் சுயமரியாதையை  மிகக் கொடூரமாக உலுக்கியது. அந்தச் சீண்டல் தான் எனக்குள் ஒரு பெரும் தீயை மூட்டியது; நமக்கான அடையாளத்தை நாமே உரக்கச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால்தான், இப்பாடலின் வரிகள், மெட்டு, இசை அமைப்பு என அனைத்தையுமே நானே தனி ஆளாக நின்று உருவாக்கினேன். இப்பாடல் வெறும் பொழுதுபோக்கல்ல, என் மலையக மக்களுக்கான ஒரு பொதுவான தளமாகவும், ஒட்டுமொத்த மலையகச் சமுதாயத்தின் நீதிக்கான உரிமைக்குரலாகவும் கடந்த 2025 ஜுன் மாதம் 06 ஆம் திகதி  இந்த 'லயத்துவாசி' படைக்கப்பட்டது" .

இன்று பலர் தங்களின் 'லயத்து வாழ்க்கை' பற்றி வெளியில் கூறுவதற்கு வெட்கப்படுகிறார்கள். மலையகம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கும், அதைத் தழுவி நிற்பதற்கும் யாரும் விரும்புவதில்லை என்பதே கசப்பான உண்மை. கலை மூலமாக ஒரு சமூகத்தில் உடனடி மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியுமா என்று கேட்டால், ஒரு தனிப் பாடல் மூலமாக மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தையும் முழுமையாக மாற்றிவிட முடியாது என்பதை நான் அறிவேன். ஆனால், ஒரு பாடல் மூலமாக அந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் ஒரு பெரிய விவாதப் பொருளாக , பேசுபொருளாக மாற்றியமைக்க முடியும். இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மை நிலவரம் உலகெங்கும் வாழும் பொதுமக்களை  போய்ச் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது தீராத அவா " என்று தனது கலையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.

"லயத்துவாசி" வெறும் ஆதங்கத்தை மட்டும் வெளிப்படுத்தும் பாடலல்ல; மாறாக அது சமூக மாற்றத்திற்கான கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு புரட்சிகர பிரகடனம்.

மாற்றங்கள் நிகழ்ந்திட, மாற்றத்தை நிகழ்த்திட—

உன்னுள்ளே மாற்றங்கள் பிறக்கணும்..!

கனவுகள் ஜொலித்திட, கவலைகள் விலகிட—  

உன்னுள்ளே முயற்சி இருக்கணும்..!

தடைகளைத் தவிர்த்திட, தவறுகள் திருத்திட—  

உன்னுளே ஊக்கம் இருக்கணும்..!

வரலாற்றைத் திருத்திட, வரும் வாழ்வு செழித்திட—  

கற்றதோர் சமூகம் பிறக்கணும்..!

என்று அவர் பாடும் வரிகள் மலையகத்தின் அடுத்த தலைமுறைக்கான திசையைக் காட்டுகின்றன. அரசியல் மற்றும் சமூக விடிவு என்பது அடுத்த தலைமுறையின் கல்வியிலும், தங்களுக்குள் பிறக்கும் விழிப்புணர்விலும் தான் தங்கியுள்ளது என்பதை இப்பாடல் மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது.

கடந்த ஓராண்டில் உலகெங்கிலும் வாழும் தமிழ் நெஞ்சங்கள், குறிப்பாக இளைஞர்கள் இப்பாடலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள். இப்பாடலை ஸ்ட்ரீம் செய்ததும், பிளேலிஸ்ட்டில் சேர்த்ததும் வெறும் இசைக்கான ஆதரவு அல்ல; அது ஒரு சமூகத்தின் நீதிக்கான குரலை உலகளவில் எதிரொலிக்கச் செய்த விதம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17