அதிவேகமாக வந்த சிறியரக பிக்கப் வாகனமொன்று காருடன் மோதியதில் அதில் பயணித்த வைத்தியர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த வைத்தியர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் பாண்டிருப்பிலுள்ள அவரது வீட்டில் இருந்து வைத்தியசாலைக்குச் செல்வதற்காக பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய சந்தியில் பிரதான வீதியால் செல்வதற்காக வீதியோரமாக நின்றபோது கல்முனை நோக்கி மிகவும் வேகமாக வந்துகொண்டிருந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பல விளம்பரப் பதாதைகளில் மோதிக்கொண்டு வைத்தியரின் காரில் மோதியதுடன் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளிலும் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த நபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் வைத்தியரின் கார்  கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

பிக்கப் வாகனம் செலுத்திவந்த சாரதி கல்முனைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.