"ரஷ்யப் போர்க்களத்தில் இருந்து சிலர் விடுவிப்பு..!" எஞ்சியவர்களின் நிலை என்ன? ; வட மாகாண இளைஞர்களை உலுக்கிய மகா சதியின் பின்னணி!

Published By: Digital Desk 3

09 Jun, 2026 | 01:14 PM
image

எம்.டி. லூசியஸ்

தொழினுட்பம் எந்தளவுக்கு அதிவேகமாக வளர்கின்றதோ அந்தளவுக்கு இணைய ஊடான குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பாகத் தொழினுட்ப வளர்ச்சியை வைத்துச் சாதாரண மக்கள் அதிகமாக ஏமாற்றப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சூழ்ச்சிகளால் தத்தளிக்கும் நாடுகளில் ஏற்படும் சிறியளவிலான அதிர்வு கூட மக்களின் வாழ்க்கை ஓட்டத்தையே சீரழித்து விடுகின்றது. இவ்வாறான சூழலில் கடந்த சில வருடங்களாக மற்றுமொரு புதிய பேரிடியாக வெளிநாட்டுத் தகவல் கையாளுதல் மற்றும் தலையீடு எனப்படும் பிமி (FIMI) செயற்பாடுகள் மூலம் சாதாரண மக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகின்றனர்.

வல்லரசு நாடுகளின் அதிகாரப் போட்டி மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்த பிமி செயற்பாடுகள் ஒரு இணைய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தீய நோக்கத்துக்காகத் தவறான தகவல்களை உண்மை போன்ற பிரசார வடிவில் பரப்பி பெரும் தீங்குகளை விளைவிப்பதே இதன் பின்னணியாகும்.

இதன் ஒரு கொடூரமான அங்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட சம்பவத்தை யாரும் இலகுவாக மறந்துவிட முடியாது.

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போரில் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணையவழி தவறான வழிகாட்டல்கள் மூலம் ஏமாற்றப்பட்டு இணைக்கப்படுவது பூதாகரமான பிரச்சினையாகக் காணப்பட்டது.

இவ்வாறு திட்டமிட்டு ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த சிலர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற புதிய தகவல் வௌியாகியுள்ளதுடன், பலர் இன்னும் அங்கு தவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இருபத்தைந்து வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விசா ஊடாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2024 ஆண்டு செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி இந்த இளைஞர் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்காக ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். இவருடன் முல்லைத்தீவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருபது வயதுடைய இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாகப் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி முகவர் ஏமாற்றியுள்ளார். அதனையடுத்து ரஷ்யாவில் உள்ள இராணுவ முகாம் போன்ற ஒரு இடத்தில் இவர்களைத் தங்க வைத்து, ரஷ்ய மொழியிலான ஆவணங்களில் வலுக்கட்டாயமாகக் கையொப்பம் பெறப்பட்டு, பதினைந்து நாட்கள் பயிற்சியின் பின்னர் உக்ரைன் நாட்டின் எல்லைக்கு அனுப்பியுள்ளனர். அங்கிருந்து அந்த இளைஞர் தனது தாயாருக்கு அனுப்பிய குரல் பதிவில், தாங்கள் கொடூரமாக மாட்டிக்கொண்டதாகக் தாய் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று நெல்லியடி மற்றும் முள்ளியவளைப் பகுதிகளைச் சேர்ந்த குடும்பத்தினரும் தங்களது உறவினர்கள் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்குச் செல்ல முற்பட்ட போது, ரஷ்யாவில் போர்ப் பயிற்சி பெற்றால் விசா மற்றும் அடையாள அட்டைகளை இலகுவாகப் பெறலாம் என்ற போலியான பிமி (FIMI) பிரசாரங்களை நம்பி ஏமாந்து, அங்கு போர்க்களத்தில் படுகாயமடைந்து தவித்ததாக கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இலங்கை மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த போலி முகவர்களே சூத்திரதாரிகளாக இருந்துள்ளதோடு, இவர்கள் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிப் பாதிக்கப்பட்ட நபர்களை இலக்கு வைத்துள்ளனர்.

தங்களது உறவுகளை இழந்துள்ள ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்தும் இந்தச் சமூக விரோதிகள் சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

சுமார் 280ற்கும் மேற்பட்ட இலங்கைaர்கள் ரஷ்யப் படைகளோடு இணைந்து உக்ரைனுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கையில் உள்ள சில மாபியாக்கள் மூலமாகவே இவ்வாறான ஆள் கடத்தல் மற்றும் ஏமாற்று வேலைகள் சமூக ஊடகங்களின் போலியான பிரசாரங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது இதேபோன்ற போலியான தகவல் கையாளுதல் உத்திகள் மூலம் ருமேனியா போன்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டி இலங்கை இளைஞர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வரும் இவ்வாறான போலி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரசாரங்கள் மற்றும் தவறான வழிகாட்டல் தகவல்களைத் தீர ஆராய்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதும், இவ்வாறான பிமி (FIMI) அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசாங்கமும் அதிகாரிகளும் தொடர்ந்து தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என்பதும் அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்