திருமண பந்தத்தில் இணைபவர்கள் தாமும் இந்த சமூகத்தில் குடும்பமாக வாழ தமது சந்ததியை நிலை நாட்ட குழந்தை செல்வம் வேண்டும் என்று நினைப்பது வழக்கம். இவர்களில் சிலருக்கு திருமணமாகி சில மாதங்களில் குழந்தைப் பாக்கியம் கைகூடிவிடுகின்றது. இன்றும் சிலருக்கு அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விடுகின்றன. சிலர் குழந்தைகள் போதும் என்று நினைத்தாலும் எதிர்பாராத விதத்தில் கருத்தங்கி விட்டதே என கதிகலங்கி விடுகின்றனர். ஆனால் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் ஏங்கித் தவிக்கும் நிலையில் குழந்தைச் செல்வம் எட்ட முடியாத கனியாக இருந்து வருகின்றது.
குழந்தைப் பாக்கியம் இல்லாவிட்டாலும் அதனை பொருட்படுத்தாது தமது வாழ்க்கை காலத்தை உல்லாசத்திலும் விடுமுறைகளிலும் களித்து சந்தோஷமாக முடிப்பார்கள் மேலை நாட்டவர்கள். ஆனால் நம்மவர்களோ நமது சமூகத்தில் சிறப்பாக வாழ குழந்தை வரம் அவசியம் என்பதனை பல சந்தர்ப்பங்களிலும் உணர்ந்து விடுகின்றனர்.
குழந்தைப் பாக்கியத்துக்காக ஏங்கி ஏங்கி பல வருடங்களை ஏற்கனவே கடந்துவிட்ட மக்கள் பல ஆரம்ப சிகிச்சைகளிலும் தோல்வி கண்டு மேலும் பல வருடங்களை கடந்து விடுகின்றனர். இதனால் பெண்களின் வயது கூடி 40 அல்லது 50 வயதை கூட எட்டிவிடுகின்றது. வயது 40 வருடங்களை கடந்து செல்லும் போது எந்த மனிதனுக்கும் நோய்கள் ஆரம்பிக்கத்தான் செய்கின்றது. குறிப்பாக நீரிழிவுநோய், உயர் குருதி அமுக்கம், உயர் கொலஸ்ட்ரோல் மற்றும் குருதி அமுக்கம், கர்ப்பப்பை சூலகக் கட்டிகள் என நோய்களும் ஆரம்பித்து துன்பத்தை கூட்டுகின்றன.
இவ்வாறு தம் நோய்களுக்கு பராமரிப்புகளும் சிகிச்சைகளும் எடுத்து தம்மை கவனித்து ஓய்வாக இருக்கும் காலத்தில் தமது குழந்தைப் பாக்கியத்துக்காக மேலதிகமாக சிகிச்சைகளும் சத்திரசிகிச்சைகளும் செய்து குழந்தை வரம் வேண்டி நிற்பது என்பது அவர்களது தியாகத்தின் எல்லைகளைக் காட்டுகின்றது. மனிதர்களாகிய நாம் சிறிய நோய் வந்தாலே ஊசியால் குற்றும் போது எவ்வளவு கூச்சலிட்டு விரண்டு ஓடுகின்றோம். ஆனால் குழந்தைப் பாக்கியம் என்ற ஒரு இலட்சியத்துக்காக பெண்கள் எத்தனை ஊசிகள், எத்தனை ஸ்கேன் பரிசோதனைகள், எத்தனை சத்திரசிகிச்சைகள், எத்தனை கட்டுப்பாடுகள் என தம்மை அர்ப்பணிக்கின்றனர். நமது நாட்டில் மட்டும் இல்லை, அயல் நாட்டிலும் சென்று பல மாதங்கள் பல வருடங்கள் ஒரு சிறிய அறையில் தங்கி இருந்து சிகிச்சைக்காக தவம் இருக்கின்றனர். மாறி மாறியான சத்திர சிகிச்சைகளுடனும், மருந்துகளினதும் பக்க விளைவுகளுடனும் செய்து வரும் தவம் மேலானது. இந்த தவத்தில் வெற்றி காண்பது சிலரே. தோல்வி காண்பது பலர் எனினும் முயற்சியை யாரும் கைவிட்டதில்லை.
இவ்வாறு வயது கடந்து பலநோய்களின் மத்தியில் கர்ப்பம் தரிக்கும் போது வருகின்ற தாக்கங்களும் விளைவுகளும் கூடவாகத்தான் இருக்கின்றது. இதனை ஒழுங்காக கவனித்து வெற்றிகண்டு குழந்தையையும் தாயையும் ஆரோக்கியமாக வீட்டிற்கு வழி அனுப்பி வைப்பது என்பது மிக்க மகிழ்ச்சியான விடயம். இதற்கு அவர்களது மனவலிமையும் எதனையும் தாங்கும் திடமான நிலைப்பாடுமே காரணம். இவ்வாறு குழந்தை வரத்துக்காக தம்மை அர்ப்பணித்து பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து செயற்கைமுறை கருக்கட்டல் மூலம் கர்ப்பம் தரித்தவர்களுக்கு அவர்களது இந்த பயணம் உரிய இலக்கை அடைய இடையில் நிற்கும் நாம் உரிய உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டியது மனித நேயமாகும்.
பெண்மணி ஒருவர் நமது நாட்டில் பல ஆரம்ப சிகிச்சைகள் மூலம் குழந்தைப் பாக்கியத்துக்காக முயற்சி எடுத்தது பல வருடங்கள் தோல்வியில் தான் முடிந்தது. ஏற்கனவே வயிற்றில் பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருகின்றன. அவருக்கோ உயர்குருதி அமுக்கம், நீரிழிவு நோய் என நோய்களும் ஆரம்பித்து விட்டன. ஆனால் குழந்தைப்பாக்கியம் கைகூடவில்லை. வயதும் 52 வயதாகிவிட்டது. இறுதியில் இலட்சியம் உறுதியாக இருந்ததால் சிறப்பு செயற்கை முறை கருக்கட்டல் (IVF) சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அங்கும் பல ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் சத்திர சிகிச்சைகள் என பல செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டது. இறுதியில் செயற்கைமுறை கருக்கட்டல் (IVF) செய்தார்கள். பலவிதமான ஆசைகளுடன் நம்பியிருந்தார்கள். ஆனால் தோல்வியில் தான் முடிந்தது. இவ்வளவும் செய்து பலன் இல்லையே நாடு திரும்புவோமா என நினைத்தார். மனம் கேட்கவில்லை. குழந்தை மழலை குரல் கேட்க வேண்டும் என்ற உறுதிதான் இருந்தது. இருந்தவற்றையெல்லாம் விற்று மீண்டும் அங்கிருந்தே செயற்கைமுறை (IVF) கருக்கட்டல் செய்தார்கள். நம்பிக்கையுடன் இருந்தார். இறைவன் கண் திறந்ததுபோல் கர்ப்பம் தரித்தார். ஆரம்ப பரிசோதனைகள் இரட்டை குழந்தை தங்கி விட்டதாகவும் அறிய வந்தது. 52 வயதில் இரட்டை குழந்தைகளை கர்ப்பத்தில் சுமக்கும்போதே துன்பங்களும் நோய்களும் பன்மடங்காகின. ஏற்கனவே இருந்த நீரிழிவு நோயும், உயர்குருதி அமுக்கமும், கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருந்தது. பல பல மருந்துகள் ஊசிகள் மூலம் இவற்றை ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பயத்திலேயே 5 மாத கர்ப்ப காலம் வரை இந்தியாவில் தங்கினார். 5 மாத கர்ப்பம் முடிந்ததும் இலங்கை வந்தார். 5 மாதத்திலேயே மூச்சு திணறலும் இளைப்புகளுடனும் தான் காணப்பட்டார். எந்த மருந்துகள் எந்த அளவு கொடுத்தாலும் குறையாத உயர் குருதி அமுக்கம் இருந்த வண்ணமே இருந்தது. என்ன செய்வது, இவர் இலட்சியத்துக்காக நாமும் போராடினோம். தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் போல் மாதங்கள் மெதுவாக கடந்தன. குழந்தைகளின் வளர்ச்சிகளையும் ஸ்கேன் மூலம் கணிப்பிட்டோம். இன்சுலின் மூலம் நீரிழிவு நோய் முடிந்தவரை கட்டுப்படுத்தப்பட்டது.
இவ்வாறு 8 மாதங்கள் கர்ப்ப காலம் முடிந்ததும் 52 வயது தாயின் நிலைமைகள் இதற்கு மேல் போக முடியாதவாறு மாறிவிட்டது. எனவே 8 மாதத்தில் இரட்டை குழந்தைகளையும் சிசேரியன் மூலம் எடுப்போம் என திட்டமிட்டு சகல ஆயத்தங்களும் செய்தோம். குழந்தைகள் இரண்டும் ஆரோக்கியமாக வெளியில் எடுக்கப்பட்டன. குழந்தைகள் எடுத்தவுடன் சிசேரியன் முடிவடைகின்றது என நினைத்தோம். ஆனால் கர்ப்பப்பையில் இருந்து இரத்தம் பாய்ந்து கொண்டே இருந்தது. இரத்தம் ஏற்றினோம். கட்டுகள் பல போட்டோம். அணைகளை அடித்துக் கொண்டு வெள்ளம் வருவது போல் இரத்தம் பாய்ந்தது. பெண்ணின் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் உடனடியாக சில நிமிடங்களிலேயே கர்ப்பப்பையை எடுத்தோம். சத்திர சிகிச்சையில் கர்ப்பப்பை சிசேரியன் நேரத்திலேயே எடுக்கப்பட்டதால் குருதிப் பெருக்கு கட்டுப்படுத்தப்பட்டு பெண் காப்பாற்றப்பட்டார்.
தாயும் குழந்தைகள் இருவரும் ஒருவார காலமாக சிகிச்சைகள் மூலம் கவனிக்கப்பட்டு மகிழ்ச்சியாக வீடு அனுப்பி வைத்தோம்.
இதன் மூலம் என்ன புரிகின்றது என்றால், நமது பெண்கள் தம் உயிரை கூட துச்சமாக மதித்து தன் குழந்தைக்காக வாழ்ந்து வருகின்றனர். இந்த தாய்குலத்தின் புனிதமான எண்ணத்தையும் தியாக குணத்தையும் மதித்து அவர்களை சமூகத்தில் கௌரவிக்க வேண்டும். தாய்குலத்தின் இலட்சியம் நிறைவேற எம்மால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM