(க.சிவலிங்கமூர்த்தி)
கரப்பான் பூச்சியையோ அல்லது ஒரு எலியையோ கண்டால் நடுங்கிப் போய், தமக்குத் துன்புறுத்தல் இழைக்கப்படுவதாகக் கதறும் ஒரு கோழை எப்படிப் போர்க்கள வீரன் ஆக முடியும்? உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ போன்ற ராஜபக்ஷாக்களின் ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கூச்சலிடுவது, அவர்கள் எத்தகைய பெரும் பீதியில் இருக்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டுகிறது என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
ராஜபக்ஷாக்களின் குற்றப் பின்னணி கொண்ட ஆட்சிக்கட்டமைப்பின் வலைக்குள் சிக்கிய எவரும் தப்பித்துச் செல்ல வழி கிடையாது. அவர்கள் இறுதியில் அந்தத் தலைவர்களின் நரபலியாகவே தங்களின் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள் என்பது நாம் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்த கசப்பான உண்மையாகும்.
இன்று சுரேஷ் சலேவை மையப்படுத்தி நடக்கும் இந்த ஆர்ப்பாட்டங்கள், அவருக்கான உண்மையான ஆதரவல்ல். அந்தக் கறுப்புப் பக்கத்தில் தொடர்புடைய கும்பலின் அதிகாரத் தாகத்துக்கும், சட்டத்திலிருந்தான தப்பித்தலுக்கும், தங்களின் இருப்பு முடிவுக்கு வரும் என்ற அச்சத்துக்கும் செய்யப்படும் ஒரு கடைசி முயற்சியாகும்.
சுரேஷ் சலே என்பவர் யார்? அவர் ஒரு நேர்மையான இராணுவ அதிகாரியா அல்லது ராஜபக்ஷ குடும்பத்தின் வன்முறை சார்ந்த அரசியல் தேவைகளுக்காகச் செயல்பட்ட ஒரு கூலிப்படையின் சூத்திரதாரியா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். போர்க்களத்தில் தேசத்துக்காக இரத்தம் சிந்தி, அங்கங்களை இழந்து போராடிய உண்மையான இராணுவ வீரர்களுக்கும், இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஒரு கரப்பான் பூச்சியையோ அல்லது ஒரு எலியையோ கண்டால் நடுங்கிப் போய், தமக்குத் துன்புறுத்தல் இழைக்கப்படுவதாகக் கதறும் ஒரு கோழை எப்படிப் போர்க்கள வீரன் ஆக முடியும்? போர்க்களத்தில் மாதக்கணக்கில் மழைக்கும் வெயிலுக்கும் மத்தியில், உணவு உறக்கம் இன்றி சண்டையிட்ட உண்மையான வீரர்களின் தியாகத்தை, இத்தகைய கோழைகளுடன் ஒப்பிடுவது அந்த வீரர்களுக்குச் செய்யும் பெரும் அவமானமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ போன்ற ராஜபக்ஷாக்களின் ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கூச்சலிடுவது, அவர்கள் எத்தகைய பெரும் பீதியில் இருக்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டுகிறது. கத்தோலிக்க மக்கள் தேவாலயங்களில் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, அந்தப் புனிதமான இடத்தில் படுகொலைகளை அரங்கேற்றிய மிலேச்சத்தனமான திட்டமிடல், இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.
அன்று ரணில் விக்ரமசிங்க, மைத்ரிபால சிறிசேன மற்றும் ராஜபக்ஷாக்களின் கூட்டு ஆட்சியில் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டவர்கள், இன்று ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார போன்றோரின் உதவியுடன் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முற்படுகின்றனர்.
ஹரின் பெர்னாண்டோவும் மனுஷ நாணயக்காரவும் அன்று பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதாகக் கூறிக்கொண்டு, இன்று ஆட்சியின் பங்காளிகளாகச் செயற்பட்டு இந்தச் சதியை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். அவர்களது அரசியல் இருப்பிற்காக, இந்த படுகொலைகளை அரசியலாக்குவதை எமது மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். அன்று அவர்கள் எதை எதை வெளியிடுவோம் என்று வீரவசனம் பேசினார்களோ, அதற்கே இன்று அவர்கள் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நான் சுரேஷ் சலேவின் மகனிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்: உன் தந்தை தப்பிப்பதற்கு ஒரே வழி, விசாரணைக்கு ஒத்துழைத்து உண்மையைச் சொல்வது மட்டுமே. அவரைப் பாதுகாப்பதாகச் சொல்லித் திரியும் இந்தத் தகுதியற்ற அரசியல்வாதிகளின் வலையில் சிக்கி, உனது தந்தையை வீதிக்கு இழுத்து வந்து நாடகம் ஆடாதே.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்று கூறிக்கொண்டு, 'திரிப்போலி பிளட்டூன்' போன்ற கொலைக் குழுக்களைப் பராமரித்து, மாற்றுக்கருத்து கொண்டவர்களையும், ஊடகவியலாளர்களையும் திட்டமிட்டு வேட்டையாடிய சுரேஷ் சலே, ஒரு தேசப்பற்றாளனோ அல்லது இராணுவ அதிகாரியோ அல்ல. அவர் ஒரு அரசியல் வாடகைக்கொலைகாரன்.
ஹன்சீர் அசாத் மௌலானா, கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்றோருடன் கைகோர்த்து, அடிப்படைவாதக் குழுக்களுடன் தென்னந்தோப்பு ஒன்றில் சந்திப்புகளை நடத்தி, அதன் மூலம் இந்தச் சதியை முன்னெடுத்தமைக்கான சான்றுகள் இன்று வெளிவரத் தொடங்கியுள்ளன. சொனிக், கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் மற்றும் அவர்களுடனான தொடர்புகள் குறித்த தகவல்களைத் தொடக்கத்திலிருந்தே அரசாங்கத் தரப்பினரே வெளிப்படுத்தினர்.
எனவே, இந்த விசாரணையைத் திசைதிருப்பவோ அல்லது முடக்கவோ எவருக்கும் இடமளிக்கக்கூடாது. இந்த மிலேச்சத்தனமான சதிகாரர்களைப் பாதுகாப்பதற்காக யாராவது இனியும் வீதிக்கு வந்து நாடகம் ஆடினால், அந்த நாடகத்தை இந்த நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இது அரசாங்கத்தின் தனிப்பட்ட விவகாரமல்ல இது நாட்டின் நீதித்துறைக்கும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கும் கிடைக்க வேண்டிய நீதி. சுரேஷ் சலேவின் உண்மையான முகம் என்னவென்று ஒட்டுமொத்த தேசமும் அறிந்திருக்கிறது. இந்த விசாரணையை இறுதிவரை கொண்டு சென்று, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM