இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் (Supply Chains) வலிமையையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்க அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் கடந்த வாரம் நடைபெற்ற “Indian Ocean Ports and Supply Chains Forum” எனப்படும் இந்த மாநாட்டை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. Department of State) ஏற்பாடு செய்து நிதி உதவி வழங்கியது. இந்த நிகழ்வில் இந்தோ--பசிபிக் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள், துறைமுக நிர்வாகிகள் மற்றும் அமெரிக்க தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், துறைமுக உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த அமெரிக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், மேலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் என்பதாகும்.
பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று துறைமுக அபிவிருத்தி, இணையப் பாதுகாப்புடன் கூடிய டிஜிட்டல் மாற்றம், வர்த்தக நிதி உதவி மற்றும் விநியோகச் சங்கிலி திறன் மேம்பாடு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன் மூலம் சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ--பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டோ மற்றும் துணை உதவி இராஜாங்கச் செயலாளர் பெத்தனி மோரிசன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
பாதுகாப்பான மற்றும் நவீன துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும், பிராந்திய பாதுகாப்புக்கும் இன்றியமையாதவை என அவர்கள் வலியுறுத்தியதுடன், இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளில் ஒன்றாகவும் இருப்பதாக குறிப்பிட்டனர்.
அமெரிக்க விஜயத்தின்போது, இலங்கை பிரதிநிதிகள் குழு அமெரிக்காவின் முக்கிய கடல்சார் நுழைவாயில்களில் ஒன்றாகக் கருதப்படும் பால்டிமோர் துறைமுகத்துக்கும் விஜயம் செய்தது.
அங்கு துறைமுக அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளைச் சந்தித்த இலங்கை குழுவினர், துறைமுக செயற்பாடுகள், சரக்கு கையாளும் தொழில்நுட்பங்கள், நவீன உபகரணங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவ நடைமுறைகள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஹனீப் யூசுப், இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் டாக்டர் பராக்கிரம திஸாநாயக்க, ஷிப்பர்ஸ் அகடமி கொழும்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹன் மசகோரல, இலங்கை லொஜிஸ்டிக்ஸ் மற்றும் சரக்கு முகவர் சங்கத்தின் தலைவர் அன்ட்ரே பெர்னாண்டோ, கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் வர்த்தகப் பிரிவு பிரதம அதிகாரி டஷ்மா கருணாரத்ன, ஏபிசி ஷிப்பிங் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் ஷிரான் திஸாநாயக்க, வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவரின் அலுவலகத்தின் பிரதம அதிகாரி அரித விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாடு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. பிராந்திய அரசாங்கங்களை அமெரிக்க தனியார் துறை முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இணைப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல்சார் உட்கட்டமைப்புகள் வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட பொருளாதார வளம் ஆகிய அடிப்படைகளில் கட்டியெழுப்பப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM