பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற தரப்பினரே இன்று சலேவின் தடுப்புக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் ; இச்சட்டத்தை உடனடியாக ரத்து செய்க - தினன தகுன கூட்டிணைவு வலியுறுத்து

08 Jun, 2026 | 02:01 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற தரப்பினரே இன்று சலேவின் தடுப்புக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை நீண்டகாலம் தடுத்து வைத்து, அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவமதிப்பான மற்றும் அநாகரிகமான நடத்தைகளை வன்மையாக கண்டிப்பதாக தினன தகுன கூட்டிணைவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தினன தகுன கூட்டிணைவு இன்று (8) திங்கட்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை தடுப்புக் காவலில் வைத்து அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவமதிப்பான நடத்தைகளை கண்டிப்பது மாத்திரமின்றி, இலங்கை அரசியலில் நிலவும் இரட்டை நிலைப்பாடு குறித்தும் சமூகத்துக்கு எச்சரிக்கை விடுக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம். 

சுரேஷ் சலேவுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, அவருக்கு இத்தகைய அவமதிப்பை ஏற்படுத்துவதன் மூலம், அவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரியும் ஒரே தரப்பினர் தான் என குற்றப்புலனாய்வு திணைக்களம் பலவந்தமாக வாக்குமூலத்தைப் பெற முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்குப் பின்னால் உள்ள, இலங்கை அரசியலின் மிகமோசமான முரண்பாடு மற்றும் போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இரட்டை வேடத்தை சுட்டிக்காட்ட வேண்டியது மிக முக்கியமானதாகும். இந்தச் சம்பவத்தை கண்டிப்பதோடு, அரசியல் ரீதியாக இக்கருத்தை வெளிப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாக நாம் கருதுகிறோம்.

இலங்கையில் உள்ள தாராளவாத மற்றும் முற்போக்கு மக்கள், 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்துக்கு எதிராக நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளன.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயம் காரணமாக, இந்தச் சட்டத்தை ரத்து செய்வது நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது.இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிராக வலுவான அரசொன்று தேவை என்று நம்பிய இந்நாட்டு சிங்கள பௌத்த அரசியல் சக்திகள், இந்த பின்தங்கிய சட்டத்தை நாட்டில் இருந்து ஒழிக்க எவ்வித விருப்பமும் காட்டவில்லை என்பதை நாம் இங்கு நினைவூட்டுகிறோம்.

அன்று இச்சட்டத்தைப் பாதுகாக்க ஆதரவு தெரிவித்த அரசியல் சக்திகளே இன்று அதே சட்டத்தின் இரையாக்கப்பட்டுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் இருக்கும் மேஜர் ஜெனரல் சலேவுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற தரப்பினரே இன்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதில் மிகவும் வேடிக்கையான மற்றும் கவலையளிக்கும் விடயம் யாதெனில், அன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்வதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பின்னர், அதே அடக்குமுறை சட்டத்தைப் பயன்படுத்தி மேஜர் ஜெனரல் சலேயை வேட்டையாட முனைவதுதான்.பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்பது சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும், மனிதத்தன்மையற்ற மற்றும் கொடூரமான அடக்குமுறை சட்டமாகும்.

ஒரு சந்தேக நபரை நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைத்திருப்பது, சித்திரவதைகளுக்கும் அவமதிப்பான நடத்தைகளுக்கும் உள்ளாவதற்கான பின்னணியை உருவாக்குவதே எமது கருத்தாகும். இவ்வாறான நீண்டகால தடுப்புக் காவல் மூலம் மேற்கொள்ளப்படும் உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளின் இறுதி முடிவு, கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி, சந்தேக நபரிடமிருந்து பலவந்தமான வாக்குமூலங்களை பொலிஸார் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகும்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் கையாள்வது இந்த தந்திரோபாயத்தையே என்பது தெளிவாகிறது.இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாடு பாதுகாக்கப்படுகிறது என்று நினைப்பது ஒரு மாயையாகும். இத்தகைய அநீதியான சட்டங்கள் மூலம் குடிமக்களின் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்கான உரிமையைப் பறித்து, குடிமகனுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள நம்பிக்கையைச் சிதைக்கின்றன. இதன் மூலம் ஒட்டுமொத்த அரசின் நியாயத்தன்மையை சீரழிக்கின்றன.

தர்க்க ரீதியான பொதுக் கொள்கை வகுப்பதில் நமது நாட்டின் அரசியலில் உள்ள வெற்றிடமும், கௌரவமற்ற தன்மையும் இதிலிருந்து நன்கு தெளிவாகிறது.எனவே, தினன தகுன கூட்டிணைவாகிய நாம், தற்போதைய அரசாங்கத்திடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு கோருகிறோம்.

தற்போதைய அரசாங்கம் இந்தச் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் அதேபோன்ற அடக்குமுறை சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பது தெரிகிறது. அது ஒருபோதும் தீர்வாகாது.இலங்கை இத்தகைய அடக்குமுறை சட்ட ஆட்சி முறைகளின் உதவியின்றி, நாட்டை நிர்வகிக்கவும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கவும் பழகிக்கொள்ள வேண்டும்.

பழைய அடக்குமுறை யதார்த்தத்துக்குப் பதிலாக, புதிய தர்க்க ரீதியான சிந்தனையை முன்னிலைப்படுத்திய 21ஆம் நூற்றாண்டின் நற்பரிபாலனக் கலையே இருக்கவேண்டும் என்று எமது கூட்டிணைவு நம்புகிறது. நாட்டின் அனைத்து அரசியல் சக்திகளும் இந்த யதார்த்தத்தை ஏற்றுச் செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34
news-image

“முழு நாடுமே ஒன்றாக” நடவடிக்கை :...

2026-07-17 14:10:57