“நுவரெலியா மாவட்ட இரவு நேர போக்குவரத்து சேவைகள் திருப்திகரமானதாக இல்லை”

By Sindu

26 Sep, 2017 | 08:15 AM
image

“நுவரெலியா மாவட்டத்தில்  இரவு நேரங்களில் பயணிகள் போக்குவரத்து சேவைகளை முறையாக அமுல்படுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த தரப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நுவரெலியா மாவட்டத்தில் குறுந்தூர பயணிகள் பேருந்து சேவைகள் இரவு 7 மணியோடு மட்டுப்படுத்தப்படுவதால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

நுவரெலியா - ஹட்டன், டயகம – தலவாக்கலை போன்ற பாதையூடான இரவு நேர போக்குவரத்து சேவைகள் முற்றாக இடம்பெறுவதில்லை, இந் நிலைமையை தவிர்ப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மத்திய மாகாண தனியார் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஹட்டன் - நுவரெலியாவிற்கிடையிலான இன்டர்சிட்டி சேவைகள் முறையாக இடம்பெறாத காரணத்தினால் பபயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எதிர்காலத்தில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளையும் இனைத்துக் கொள்வதின் மூலம் தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் குறித்த பல விடயங்களை ஆராய முடியும். 

இதே வேளை மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பாதையை துரிதமாக செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கல்வி இராஜங்க அமைச்சர் பெ.ராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right