(ஆர்.ராம்)
மத்தியகிழக்கில் நிலவும் போர் நெருக்கடிகளால் தங்களது அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும் அபாயத்தில் 13 இலட்சம் இலங்கை மக்கள் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் நெருக்கடிகள் தணிந்தாலும்கூட, அதன் தாக்கங்கள் எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய மூன்று நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் ‘குறிப்பிடத்தக்கப் பாதிப்புகளை’ ஏற்படுத்தி வருவதோடு, வர்த்தகத்தையும் சீர்குலைத்து வருகிறது. ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள நாடுகளில், இந்த காரணிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மிக விரைவாகப் பாதிக்கின்றன.
இலங்கையில் நீடித்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில், பல குடும்பங்கள் தொடர்ந்து கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. இதனால், தங்களது அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும் அபாயத்தில் 13 இலட்சம் (1.3மில்லியன்) மக்கள் உள்ளனர்.
இது, 2026ஆம் ஆண்டிற்கான அடிப்படைத் தரவான 4.7 மில்லியன் (47 இலட்சம்) மக்களுக்கு மேலதிகமான தொகையாகும். இலங்கை தனது எரிசக்தித்தேவையில் 63 சதவீதத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளது.
அதேநேரம், வெளிநாட்டுப் பணவனுப்பல்களில் 44 சதவீதமானது வளைகுடா நாடுகளிலிருந்தே கிடைகின்றது. மேலும் தேயிலை ஏற்றுமதியில் 45சதவீதமானது வளைகுடா நாடுகளுக்கே செல்கிறது. இந்தத் தரவுகள், எரிசக்தி விலையேற்றம், வர்த்தகம் மற்றும் வருமான வழிகளில் ஏற்படும் அதிர்ச்சிகளால் உள்நாட்டு தொழிலாளர்களும் குடும்பங்களும் எவ்வளவு தூரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
அத்துடன், உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்து வருவதன் காரணமாக,உழைக்கும் மக்களின் ஊதியம் மேலும் மேலும் சுருங்கிச் செல்கிறது. இதன் விளைவாக, குடும்பங்களுக்குத் தேவையான தரமான மற்றும் போதுமான அளவு உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை அவர்களுக்குப் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இதேநேரம், சோமாலியாவில் கூடுதலாக 25இலட்சம் மக்களும், ஆப்கானிஸ்தானில் 23 இலட்சம் மக்களும், தங்களது அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றது. ஏற்கனவே உலகளவில் 31.8 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் மேலதிகமாக 4.5 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது என்றும் அறிக்கையில் குறிப்பிடத்தக்கது.
குறித்த அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் உலக உணவுத் திட்டத்தின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு மோதல்களால் பல இடங்களில் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளுக்கு இடையே மிக நெருக்கமான தொடர்பு உள்ளது. மேலும், ஏழை நாடுகளில் உள்ள மக்கள் ஏற்கனவே தங்களின் முழு வருமானத்தையும் உணவுக்காகவே செலவிடுகிறார்கள். இதனால் உணவுப் பொருட்களின் விலை உயரும்போது, அவர்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான், சோமாலியா, இலங்கை போன்று சூடான், காஸா, தெற்கு லெபனான், ஏமன் மற்றும் ஹெயிட்டி உள்ளிட்ட பகுதிகளும் உணவுப் பாதுகாப்பின்மை நிலவும் முக்கிய பிரதேசங்களாகும். நிதிப்பற்றாக்குறை காரணமாக இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கும் உதவிகளை நாங்கள் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நன்கொடையாளர்கள் தாராளமாக உதவ முன்வர வேண்டும். ஏனெனில் நாம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அதனால் ஏற்படும் மனிதப் பேரழிவுகள் மிக மோசமானதாக இருக்கும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM