(நா.தனுஜா)
மிகமோசமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனக்கூறிக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைசட்டம், இன்றளவிலே அரசாங்கம் விரும்புவோருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுவதாகத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு பயங்கரவாதத்டைச்சட்டத்தை உடனடியாக முழுமையாக நீக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகரான சங்கீர்த்தன் (24) யாழ் சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றத்தவறிய வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாதத்டைச்சட்ட நீக்கம் மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என வாக்குறுதி அளித்த அரசாங்கம் இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், இச்சட்டத்தின் 2.1.எச் பிரிவு தொடர்பில் தமிழ்மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து நாம் மிகுந்த விசனமடைகிறோம். பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டுமென அரசாங்கத்தின்மீது நாம் தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகித்துவருகிறோம்.
இருப்பினும் அரசாங்கம் அச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக இச்சட்டத்துக்கு மாற்றீடாக அரசாங்கம் புதியதொரு சட்ட வரைவை முன்மொழியும். அது தற்போதைய சட்டத்தை விட பன்மடங்கு மோசமானதாக இருக்கும். நாம் அதனை எதிர்த்தவுடன், அவ்வரைவு கைவிடப்படும். அதன்மூலம் ஏற்கனவே
நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும். இவ்வாறு 3 தடவைகள் புதிய சட்ட வரைவுகள் கொண்டுவரப்பட்டு, கைவிடப்பட்டிருக்கின்றன. இந்த அணுகுமுறை ஒவ்வொரு அரசாங்கத்தினதும் திட்டமாகவே இருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்.
அச்சட்டம் நீக்கப்படும் வரை அதனைப் பிரயோகிக்கவும் கூடாது என வலியுறுத்துகிறோம். அரசாங்கத்தின் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கின்ற போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதுமாத்திரமன்றி இச்சட்டம் பிரயோகிக்கப்படும் போதெல்லாம், அதற்கு எதிராக நாமனைவரும் வலுவாகக் குரலெழுப்பவேண்டும்' என்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமையைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இவ்வாறான சம்பவங்களைக் கருத்திற்கொண்டே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு தாம் வலியுறுத்தி வருவதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளடங்கலாக தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை வகிக்கும் பலர், கடந்த காலங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி எம்முடன் இணைந்து வீதி வீதியாகக் கையெழுத்துப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களாவர்.
அவ்வாறிருக்கையில் தற்போது அவர்கள் ஒரு பாடலுக்கு அஞ்சுவதென்பது வேடிக்கையான விடயமாகும். புலிகளின் கொடி, புலிகளின் சீருடை போன்றவற்றைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பாடலில் புலிகளுடன் தொடர்புடைய விடயங்கள் எதுவுமில்லை. பயங்கரவாதச்சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் பெருமளவானோர் பங்கேற்பதில்லை.
ஆனால் நாளை இந்தச் சட்டம் உங்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கப்படக்கூடும். இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால், தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் தமது பிரசாரக்கூட்டங்களில் எழுச்சிப்பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.
எனவே தமக்கு வாக்குகள் தேவைப்படும்போது தமிழ் மக்களுக்கு சாதகமாகவும், ஏனைய சந்தர்ப்பங்களில் எதிராகவுமே இந்த அரசாங்கம் செயற்படுகிறது என்றும் அவர் விசனம் வெளியிட்டார். அதேபோன்று மிகமோசமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனக்கூறிக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைசட்டம், இன்றளவிலே அரசாங்கம் விரும்புவோருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்தது.
இருப்பினும் ஆட்சிபீடமேறி ஒன்றரை வருடங்கள் கடந்தும், இன்னமும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யாமல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்' என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தினார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM