மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு காரணமாக, மக்கள் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, இந்த பிராந்திய மோதலின் நேரடிப் பாதிப்பால் உலகளவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மூன்று நாடுகளில் உணவுப் பாதுகாப்பு மோசமடைந்துள்ளது.
அதன்படி, சோமாலியாவில் மேலதிகமாக 2.5 மில்லியன் மக்களும், ஆப்கானிஸ்தானில் 2.3 மில்லியன் மக்களும், இலங்கையில் 1.3 மில்லியன் மக்களும் தற்போது கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்து கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டொலரைத் தாண்டியதால் , ஜூன் மாத இறுதிக்குள் உலகளவில் மேலும் 45 மில்லியன் மக்கள் புதிதாக உணவுப் பாதுகாப்பின்மைக்கு உள்வாங்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் கணித்திருந்தது.
ஏற்கனவே உலகம் முழுவதும் 318 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியால் வாடி வரும் நிலையில், இந்த புதிய எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உலக உணவுத் திட்டத்தின் தற்காலிக நிறைவேற்றுப் பணிப்பாளர் கார்ல் ஸ்காவ் ஐக்கிய நாடுகள் சபை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
"எங்களின் முந்தைய கணிப்பிலேயே நாங்கள் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருள் விலைகளுக்கும், உணவுப் பொருட்களின் விலைகளுக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதியை உணவிற்காகவே செலவிடுகின்றனர்.
எனவே, எரிபொருள் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது, அவர்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்கிறார்கள்." என்றார்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்து, உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் "பாரதூரமான எதிர்மறைத் தாக்கங்களை" ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தணிந்தாலும் கூட, இறக்குமதிகளில் அதிகம் தங்கியிருக்கும் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் இந்த உணவுப் பற்றாக்குறைப் பாதிப்பு எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை, சோமாலியா, ஆப்கானிஸ்தான் தவிர சூடான், காசா, தெற்கு லெபனான், ஏமன் மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகளும் தற்போதைய உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மையின் மிக மோசமான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச நன்கொடையாளர்கள் உடனடியாக நிதியுதவிகளை வழங்க முன்வராவிட்டால், இதன் மனிதப் பேரழிவு மிகக் கொடூரமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM