கோட்டாவுக்கு பயணத்தடை: கேர்னல் அன்சார், உதலாகமவும் பட்டியலில் சலே தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையில் வெளிப்பட்டுள்ள தகவல்கள்

Published By: Vishnu

04 Jun, 2026 | 04:32 AM
image

 (எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, நெறிப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவ உளவுத்துறை அதிகாரிகளான கேர்னல் அன்சார் மற்றும் உதலாகம ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் புதன்கிழமை (3) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்து நீதிவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு குடியகழ்வுச் சட்டத்தின் 51 (ஈ) பிரிவின் கீழ், நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ, பிரேமானந்த உதலாகம, ரிஷான் டிரோஷன் அன்சார் ஆகியோருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைகளில் மூன்று சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். யாசீன் ஜெகில் பாஸ், சரத் சமந்த மற்றும் சுரேஷ் சலே ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் முதலிரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது குறித்து குறித்த வழக்கு விசாரணை  புதன்கிழமை (3) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள், விசேட கோரிக்கை ஒன்றினை முன்வைத்து, சத்தியக்கடதாசியைச் சமர்ப்பித்து கோட்டாபய ராஜபக்ஷ, பிரேமானந்த உதலாகம மற்றும் ரிஷான் டிரோஷன் அன்சார் ஆகியோருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த விசாரணை அதிகாரி, கடந்த 2026 ஏப்ரல் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மேலதிக விசாரணை அறிக்கையில் 124 ஆவது சாட்சியமாக முன்வைக்கப்பட்டுள்ள பூபாலபிள்ளை பிரசாந்தனின் வாக்குமூலம், 128 ஆவது சாட்சியாக முன்வைக்கப்பட்டுள்ள குமாரசாமி புஷ்பகுமாரின் சாட்சியம், அதேபோன்று கடந்த 2026 மார்ச் 11 ஆம் திகதி நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மேலதிக விசாரணை அறிக்கையில் 98 ஆவது சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிசாந்த சொய்சாவின் வாக்குமூலம், 102 ஆவது சாட்சியாக முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் வாக்குமூலம், அதேபோன்று 2026 மே 20 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட மேலதிக விசாரணை அறிக்கையில் 133 ஆவது சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ள முஹம்மது மிக்லார் முஹம்மது அன்ஸீர் எனும் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு எதிராகவும் வெளிநாட்டுப் பயணத்தடையைக் கோருவதாக நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

குறிப்பாக குறித்த வாக்குமூலங்களை ஆராய்கின்ற பொழுது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான விடயங்களோடு குறித்த மூவருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாக நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையைக் கோருவதாகவும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்துக்கு அறிவித்தார். குறித்த விடயத்தைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு, குறித்த மூவருக்கும் எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து, குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அது தொடர்பில் அறிவித்தது.

இதேவேளை, நேற்றைய தினம் சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் நகர்த்தல் பத்திரம் ஒன்றை கோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர். குறித்த நகர்த்தல் பத்திரம் தொடர்பாக விடயங்களை விசாரணை செய்யுமாறு அவர்கள் கோட்டை நீதிவான் பசன் அமரசேனவிடம் கோரியபோதும், முறைப்பாட்டாளர் தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆகியோர் நேற்றைய தினம் நீதிமன்றில் அந்த நகர்த்தல் பத்திரத்தை மையப்படுத்திய விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் நேற்றைய தினம் அது விசாரிக்கப்படவில்லை. குறிப்பாக, சுரேஷ்  சலேயைப் பரிசோதனை செய்த கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்வைத்துள்ள அறிக்கையை மையப்படுத்தி, சுரேஷ் சலேவுக்கு கைதின் போது சித்திரவதை இடம்பெற்றுள்ளதாக நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறி குறித்த நகர்த்தல் பத்திரம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலே மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு மன  ரீதியிலான பிரச்சினைகளால் அவஸ்தைப்படுவதாகவும், அதனூடாக அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஊக்கப்படுத்தப்படுவதாகவும், இவ்வாறான நிலைமையானது சித்திரவதை மற்றும் கொடூரமான முறையில் ஒருவரைக் கையாளும் பொழுது ஏற்படலாம் எனவும் குறித்த சட்ட வைத்திய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகவும், அவருக்குத் தேவையான சிகிச்சைகள் சிகிச்சை அளிக்கப் பொருத்தமான சூழலில் மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் சலே சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அவரது கோரிக்கை தொடர்பாகத் தெளிவான விண்ணப்பங்கள் புதன்கிழமை (3) முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் ஏனைய தரப்பினருக்கும் இது தொடர்பில் விடயங்களை முன்வைக்கச் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என நீதிவான் குறிப்பிட்ட நிலையில், குறித்த வழக்கை குறித்த நகர்த்தல் பத்திரத்தில் உள்ள விடயங்களை அவசர நிலையாகக் கருதி விசாரணைக்கு எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ கூறினார். அதனை ஆராய்ந்த நீதிவான், இது தொடர்பிலான நகர்த்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03
news-image

மூன்று நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு...

2026-06-08 18:31:32
news-image

உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு கம்மன்பில, விமல்,...

2026-06-08 18:16:45
news-image

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3...

2026-06-08 17:41:30
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராகவும் பாடகர்...

2026-06-08 17:26:31
news-image

அரசாங்கம் கோப்புகளை மூடி மறைக்கிறது: புலனாய்வு...

2026-06-08 17:25:46
news-image

கலால் வரி ஆணையாளருக்கு எதிராக ராஜகிரியவில்...

2026-06-08 16:58:43
news-image

இலங்கையில் தடையை மீறி மின்-சிகரெட்டுகள் விற்கப்படுகிறது...

2026-06-08 17:03:05