இலங்கை தாய்நாட்டின் சுபீட்சத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மோதலுக்கு பின் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை உரியமுறையில் நிறைவேற்றாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, 2015 ஜனவரி 8 ஆம் திகதி தம்மை ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்து நாட்டு மக்கள் தன்மீது வைத்த எதிர்பார்ப்புகளை படிப்படியாக நிறைவேற்றி, இன்று அரசாங்கம் முன்னோக்கி பயணிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இன்று சில சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களின் ஊடாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் நாட்டின் உண்மையான நிலவரங்களுக்கு மாறாக போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது ஒரே எதிர்பார்ப்பு இலங்கை தாய்நாட்டை உலகின் உன்னத தேசமாக கட்டியெழுப்புவதாகும் என்று குறிப்பிட்டார்.

அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் போக்கி, ஜனாநாயகம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அனைத்து இலங்கையர்களும் மகிழ்ச்சியாக வாழும் ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

வறுமையில் இருந்து நாட்டை மீட்டெடுத்தல், கடந்த யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேசத்தினால் ஏற்பட்ட சவால்மிக்க நிலைமைகளை எதிர்கொள்ளல், அதிக கடன் சுமையில் இருந்து நாட்டை விடுவித்தல், தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களுக்காக கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரத்தில் குயின்ஸ் பௌத்த விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், இம் மக்களுடனான சந்திப்பில் இணைந்துகொண்டார். 

குயின்ஸ் பௌத்த விகாரையின் விகாராதிபதி குருனேகொட பியதிஸ்ஸ நாயக்க தேரரினால் மேற்கொள்ளப்படும் புத்த சாசனத்திற்கும் சமூக பணிகளுக்கும் பாராட்டை தெரிவிக்குமுகமாக இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு பாராட்டு பத்திரமும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

குருனேகொட பியதிஸ்ஸ நாயக்க தேரரினால் மேற்கொள்ளப்படும் பௌத்த சமய போதனை பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, பௌத்த சம்மேளனத்திற்கு மட்டுமன்றி ஏனைய சமூகத்தினரதும் நன்மதிப்பை பெற்றவராக தேரர் திகழ்கின்றார் என்றும் தெரிவித்தார். 

மகா சங்கத்தினர் மற்றும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் சமய மதகுருமார்களும் ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களும் இதில் கலந்துகொண்டனர்.