(நா.தனுஜா)
நீதித்துறை அதிகாரிகள் உள்ளடங்கலாக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தங்கள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நளின் டி சில்வா ஆகியோரின் கையெழுத்துக்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.
1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் பிரகாரம் முறையே 63 மற்றும் 65 வயதாகக் காணப்படும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை தன்னிச்சையாக மாற்றப்படலாகாது என்பதுடன், தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய மாற்றம் தேவையானதாகவோ அல்லது விரும்பத்தக்கதாகவோ இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். மாறாக, அதனை மாற்றியமைப்பது சட்ட முறைமையின் ஒருங்கிணைவு, சட்டவாட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்தைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு என்பவற்றின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச்செய்யும். குறிப்பாக இந்நோக்கத்துக்காக மாத்திரம் அரசியலமைப்புத் திருத்தமொன்றைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் தேவைப்பாட்டினைப் பொதுமக்கள் கேள்விக்கு உட்படுத்தக்கூடும்.
2020 ஒக்டோபர் 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தின் விளைவாக மேன்முறையீட்டு நீதிமன்ற ஆளணி 12 இலிருந்து 20ஆகவும், உயர்நீதிமன்ற ஆளணி 11இலிருந்து 17ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. பணி அடிப்படையில் இத்தகைய மேம்பாடு இருப்பதனால், இந்த நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான உண்மையான தேவைப்பாடு எதுவுமில்லை.
அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாகவே மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றியமைக்கமுடியும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இலங்கையின் அரசியலமைப்பானது பல வருடங்களாகவே தற்காலிகமாகவும், சில சந்தர்ப்பங்களில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் அரசியல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்குமாகத் திருத்தங்களுக்கு உட்பட்டு வந்திருக்கிறது. அத்துடன் அவை பெரும்பாலும் சட்டவாட்சி, நீதித்துறை சுதந்திரம் மற்றும் நீதித்துறை நலன்கள் என்பவற்றுக்கு முரணானதாகவே இருந்திருக்கின்றன.
அவ்வாறிருக்கையில் மீயுயர் நீதிமன்றங்களின் அமர்வு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதானது நீதித்துறையில் தலையீடுகளை மேற்கொள்வதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாகப் பொதுமக்களால் பார்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய தற்காலிக நகர்வொன்றை முன்னெடுப்பதானது அந்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் அவமரியாதையை ஏற்படுத்தும் என நாம் கருதுகிறோம்.
அதுமாத்திரமன்றி தற்போது அரசாங்கம் இத்தகைய நகர்வினை மேற்கொள்ளுமாயின், அது நீதித்துறையின் செயற்பாடுகள் தொடர்பில் அரசியலமைப்பில் தற்காலிக திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை எதிர்கால அரசாங்கங்களுக்கு வழங்கக்கூடும்.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை என்பன எமது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் சட்டவாட்சியின் பிரிக்கமுடியாத தூண்களாகக் காணப்படுகின்றன. எனவே நீதித்துறையானது உண்மையில் சுயாதீனமாக இயங்குவதுடன், பொதுமக்களால் சுயாதீனமானதாகவும், பாரபட்சமற்றதாகவும், முறைகேடுகள் அற்றதாகவும் நோக்கப்படவேண்டியது மிக அவசியமாகும்.
அந்த வகையில் நாம் நீதித்துறைக்கோ அல்லது மக்களுக்கோ நன்மை அளிக்காத, மேற்குறிப்பிட்டவாறான ஏதேனும் திருத்த முன்மொழிவுகள் இருப்பின், அதுகுறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்துகிறோம்.
அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் நீதித்துறை அதிகாரிகள் உள்ளடங்கலாக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM