சர்வதேச அரங்கில் 2024, 2025களில் பதக்கங்கள் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு 61.38 மில்லியன் ரூபா பணப்பரிசு

03 Jun, 2026 | 04:34 PM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 2024, 2025ஆம் ஆண்டுகளில் பதக்கங்கள் வென்று இலங்கைக்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்த 31 வீர, வீராங்கனைகளுக்கும் அவர்களது பயிற்றுநர்களுக்கும் மொத்தம் 6 கோடியே 13 இலட்சம் ரூபா பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் இந்த வைபவம் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது.

ஜப்பானில் 2024இல் நடைபெற்ற உலக பரா தடகள சம்பியன்ஷிப், பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா, இந்தியாவில் நடைபெற்ற உலக பரா தடகள சம்பியன்ஷிப், பாஹ்ரெய்னில் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழா ஆகியவற்றில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கும்  அவர்களது பயிற்றுநர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜப்பான் 2024 உலக பரா தடகள போட்டியில் பதக்கங்கள் வென்ற மூன்று வீரர்களுக்கு 85 இலட்சம் ரூபாவும், அவர்களது பயிற்றுநர்களுக்கு 17 இலட்சம் ரூபாவும்

பாரிஸ் 2024 பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்ற மூன்று வீரர்களுக்கு 2 கோடி ரூபாவும், அவர்களது பயிற்றுநர்களுக்கு 40 இலட்சம் ரூபாவும்

2025 உலக பரா தடகள சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற இரண்டு வீரர்களுக்கு 50 இலட்சம் ரூபாவும், அவர்களின் பயிற்றுநர்களுக்கு 10 இலட்சம் ரூபாவும்

பாஹ்ரெய்னில் கடந்த வருடம் நடைபெற்ற 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்ற 11 இளம் வீர, வீராங்கனைகளுக்கு ஒரு கோடியே 81 இலட்சத்து 8,000 ரூபாவும், அவர்களின் பயிற்றுநர்களுக்கு 30 இலட்சம் ரூபாவும் பணப்பரிசுகளாக வழங்கப்பட்டது.

பணப் பரிசுகளில் அதிகபட்ச பணத்தொகையை  பெற்றவர்  பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற கே.ஏ. சமித்த துலான் ஆவார்.

அவருக்கு ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

அத்துடன் பாஹ்ரெய்னில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இளம் வீரர் ஜி.எல். லஹிரு அச்சின்தவுக்கு 50 இலட்சம் ரூபா  பணப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த வைபவத்தில் பேசிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, 

'ஒரு வீரர் நாட்டுக்கு ஈட்டித்தரும் பெருமையை ஒருபோதும் பணத்தால் மதிப்பிட முடியாது. அவர்களின் அர்ப்பணிப்பை ஊக்குவிப்பதற்காகவே இந்த பணப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த கொடுப்பனவுகளை வழங்குவதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது முறையான தகுதி வரம்புகளின் கீழ் வெளிப்படையான புதிய முறைமை உருவாக்கப்பட்டு இப் பரிசுகள் வழங்கப்படுகின்றன' என்றார்.

தேசிய மக்கள் சக்தியின் 'செல்வந்த நாடு, அழகான வாழ்க்கை' என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய சர்வதேச மட்ட வீர, வீராங்கனைகளுக்கும் அவர்களது பயிற்றுநர்களுக்கும் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெற்றிகளுக்குப் பின்னர் பரிசுகளை வழங்குவது போல, வெற்றிகளைப் பெறுவதற்கு முன்னரே வீரர்களை உருவாக்குவதற்கான முறையான திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் 2026ஆம் ஆண்டில் இந்த நிதியுதவிகளை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அதற்காகவே தொழில்முறை வீரர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட 'ஒலிம்பிக் இலட்சியம் 2028' (Olympic Mission 2028') திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பரிசுகளைப் பெற்ற பல வீரர்கள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். ‎

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அருண பண்டார, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் ஐ. பி. விஜேரத்ன, அமைச்சு அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்