“வடகொரியாவின் ஏவுகணைகளை அமெரிக்கா விருப்பத்துடன் வரவேற்க முயற்சிக்கிறது. இது அமெரிக்காவின் தற்கொலை முயற்சிக்குச் சமம்” என வடகொரிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரி யோங் ஹோ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது அமர்வில் கலந்துகொண்டு நேற்று (23) பேசிய ஹோ, தமது ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை ட்ரம்ப் ‘சின்ன ரொக்கெட் மனிதர்’ என்று குறிப்பிட்டதைக் கண்டிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், வடகொரியாவின் கிழக்கில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள் தாக்குதல் ஜெட்களின் பாதுகாப்புடன் வடகொரியாவுக்கு மேலாகப் பறந்தன.

இதையும் கண்டித்துப் பேசிய ஹோ, “அமெரிக்காவின் தற்கொலை முயற்சி இது” என்று தெரிவித்தார்.

இதுவரை வீசப்பட்ட ஏவுகணைகள் கடலிலேயே விழுந்து வெடித்துள்ளன. ஆனால் அமெரிக்காவின் செயற்பாடு தொடருமானால், அந்நாட்டின் முக்கிய நகரங்களிலேயே இனி வடகொரியா ஏவுகணைகள் வெடிக்கும் என்றும் அவர் கடுமையாக அமெரிக்காவை எச்சரித்தார்.