டைப்  2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால், அதனை ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் தற்போதுள்ள மருத்துவ சிகிச்சையாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் டைப்  2 நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் சர்க்கரை அளவு குறைபாட்டின் காரணமாக, கால் எலும்புகளின் பாதுகாப்பிற்காக இயற்கையாக அமைந்துள்ள பாதுகாப்பு வளையத்தை பாதித்து, அதன் உறுதித்தன்மையை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோய் பாதித்த முதியவர்களின் கால் எலும்புகள் இயல்பான வலுவினை இழக்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாகவே இவர்கள் எலும்பு முறிவுக்கு ஆளாகிறார்கள்.

டைப் 2 நீரிழிவு நோயாளிகள், தங்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்திய சத்தான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க தவறுவதே இதற்கு முக்கிய காரணமாகும். அத்துடன் அவர்கள் தங்களின் உடல் எடை சீராக பராமரிக்காமல் இருப்பதும். போதிய அளவிற்கும் குறைவாகவே உடற் பயிற்சி செய்வதும் இதற்கு காரணமாகின்றன. இதனால் தான் மருத்துவர்கள் டைப் 2 சர்க்கரைநோயின் அறிகுறியை கண்டறிந்ததும் வாழ்க்கை நடைமுறை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் நோயாளிகள் யாரும் அதனை அக்கறையுடன் பின்பற்றுவதில்லை. இதனால் இவர்கள் முதுமையின் போது எலும்பு முறிவிற்கு ஆளாகிறார்கள்.

அதிக பசி, பலவீனம், சோர்வு, உடல் எடையிழத்தல், அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், நா வறட்சி, தோல் அரிப்பு, கால் பகுதிகளில் எரிச்சல், பார்வை குறைபாடு இவையெல்லாம் டைப் 2 சர்க்கரை நோயின் அறிகுறிகளாக எடுத்துக் கொண்டு உடனடியான பரிசோதனை மற்றும் தொடர்ச்சியான பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான நிவாரணத்தையும் , இதனை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சையையும் மருத்துவ நிபுணர்கள் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் பாதங்களில் வலி, கால்களில் உணர்வின்மை, சிறிய வெட்டுகள், தோல்களில் கருப்பாகுதல் போன்றவைகள் எல்லாம் டைப்  2 சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவர்களின் சென்று முறையான ஆலோசனைப் பெறவேண்டும்.

இவர்கள் பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், மீன் போன்றவற்றை சாப்பிட்டு இந்த டைப் 2 பாதிப்பினை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை கண்காணித்துக் கொண்டு, அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். சீரான இடைவெளியில் சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். இதயம் ஆரோக்கியமாக இயங்க உடல் எடையை உறுதியாக பராமரிக்கவேண்டும். தினமும் அல்லது வாரத்திற்கு 5 நாள் என முறை வைத்துக் கொண்டு, 30 நிமிட அளவிற்கு உடற்பயிற்சி செய்யவேண்டும். இவைகளை செய்தால் டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். முதுமையின் காரணமாகவும், டைப்  2 பாதிப்பின் காரணமாகவும் ஏற்படும் எலும்பு முறிவிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்