யாழ். குடா நாட்டில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, குடா நாட்டில் பெய்யும் மழையில் 20 சதவீதத்தை வடமாட்சியில் உள்ள 78 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணம் கொண்ட நீர்ப்பரப்பில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு வட மாகாண சபை முதலமைச்சரும், அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளனர். 

ஓய்வுபெற்ற விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரும் விவசாயத் திணைக்கள முன்னாள் இயக்குனருமான ‘வைத்யஜோதி’ பொறியியலாளர் ஏ.டி.எஸ்.குணவர்தன இத்திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண அபிவிருத்திச் சபை மற்றும் பிரதமரால் அமைக்கப்பட்ட கொள்கை அபிவிருத்தி அலுவலகமும் இத்திட்டத்தை மேற்பார்வை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.