ராஜஸ்தானின் ‘ஃபலஹரி பாபா’ (70) என்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கௌஷ்லேந்த்ர ப்ரபன்னாச்சார்யா மஹராஜ் என்ற இவர், பழங்களை மட்டுமே உண்டு வருவதாலேயே அவரை ஃபலஹரி பாபா என்று அழைக்கின்றனர்.

இவர், தனது ஆச்சிரமத்தில் வைத்து, தனது பக்தர் ஒருவரின் மகளான 21 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரிய கிரகணமான கடந்த ஏழாம் திகதி, யாரையும் சந்திக்க மறுத்த இந்தச் சாமியார், குறித்த பெண்ணை மட்டும் தன்னுடைய பிரமாண்ட ஆச்சிரமத்தில் தங்க வைத்துக்கொண்டார்.

அன்றிரவு அந்தப் பெண்ணை தன் அறைக்கு அழைத்த அவர், அங்குவைத்து அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதுபற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார். அந்த எச்சரிக்கைக்குப் பயந்த அந்தப் பெண் அது பற்றி வாயே திறக்கவில்லை.

இந்நிலையில், மற்றொரு சாமியாரான குர்மீத் ராம் ரஹீம் கைதாகி குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து மௌனம் கலைத்த அந்தப் பெண், நடந்த அத்தனையையும் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

பல வருடங்களாக ஃபலஹரியின் பக்தர்களாக இருந்தபோதும் அந்தப் பெற்றோர்கள், சற்றும் தயங்காமல் உடனடியாக பொலிஸில் புகாரளித்தனர்.

அதன் பேரில், மூன்று நாட்களாக சாமியாரை விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

அவரை பதினைந்து நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.