அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஈரான் தனது புதிய ஏவுகணையொன்றை இன்று வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.

இந்தப் பரிசோதனை மூலம், அணுவாயுத ஒப்பந்தம் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை ஈரான் உணர்த்தியிருக்கிறது.

‘கொரம்ஷாஹ்ர்’ என்ற அந்த ஏவுகணை நேற்று (22) வெள்ளிக்கிழமையே ஈரானின் உயர் மட்ட இராணுவ அணிவகுப்பில் முதன்முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அதன்போது, அதை விரைவில் பரிசோதிப்போம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. எனினும், மறுநாளான இன்றே அது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.

ஈரான் இதற்கு முன் நடத்திய ஏவுகணைப் பரிசோதனைகளால் அதிருப்தி கொண்ட அமெரிக்கா, 2015ஆம் ஆண்டு உலகின் ஏனைய வல்லரசுகளுடன் ஈரானும் கையெழுத்திட்ட அணுவாயுத ஒப்பந்தத்தை அது மீறியிருப்பதாகக் குற்றம் சாட்டியதுடன், ஈரான் மீது பொருளாதாரத் தடையையும் விதித்தது.

இந்நிலையில், எதிர்வரும் பதினைந்தாம் திகதி ட்ரம்ப் அமெரிக்க பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவிருக்கிறார். அதன்போது, அணுவாயுத ஒப்பந்தத்தை ஈரான் மதிக்கும் என்ற நம்பிக்கையில்லை என்று அவர் தெரிவிப்பாரானால், ஒப்பந்தம் இரத்தாக வாய்ப்புள்ளதுடன், ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவும் இடமுண்டு.