பல்வேறு நோய்களைப் பரப்பிவரும் கொசுக்களை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீயுயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை, ‘இதை கடவுளிடம் தான் கேட்கவேண்டும்’ என்று கூறி நீதிபதிகள் இரத்துச் செய்தனர்.

ஆண்டுதோறும் உலகளவில் சுமார் ஏழேகால் இலட்சம் பேர் கொசுக்களால் உண்டாகும் நோய்களால் மரணத்தைத் தழுவுகின்றனர். கொசுக்களை ஒழிப்பதற்கு சுகாதாரத் துறையினரும் விஞ்ஞானிகளும் கூட கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனேஷ் லேஷ்தான் என்பவர் நீதிமன்றம் மூலம் கொசுவை அழித்துவிடலாம் என்று சற்று ‘வித்தியாசமாக’ யோசித்து டெல்லி மீயுயர் நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ‘இந்த மனுவை கடவுளிடம் தான் கையளிக்கவேண்டும்’ என்று கூறி மனுவை இரத்துச் செய்தனர்.

“கடவுளால் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றை நீதிமன்றம் செய்யவேண்டும் என்று கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல. இதை எந்தவொரு நீதிமன்றாலும் செய்ய முடியாது. வீடு வீடாகச் சென்று அவர்கள் வீட்டிலுள்ள கொசுக்களை விரட்டும்படி எங்களால் ஆலோசனை கூற முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

என்றபோதும், கொசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து அரசு மென்மேலும் அக்கறை காட்டவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.