தும்மலசூரிய, வெலிபென்ன உடவெல பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து கொள்ளையிட்டுவிட்டு தப்பிச்சென்ற நபரை பொதுமக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்றுவிட்டு திரும்பிவரும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

இதைனையடுத்து அயலர்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து அயலவர்கள் சம்பவ இடத்தை சூழ்ந்துகொண்ட நிலையில், குறித்த கொள்ளையர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பொதுமக்களால் பிடிக்கப்பட்ட கொள்ளையர் அருகிலுள்ள மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டதையடுத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் , தும்மலசூரிய பிரதேசத்திலுள்ள தென்னை ஆலையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் இருந்து  3 கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனி போன்றவற்றை கொள்ளையிட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.