பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில்    நாங்கள் முன்வைத்த அர்ப்பணிப்புக்கு  அமைவாக  செயற்படுவோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள்  உறுதியாக இருக்கின்றோம்.  எதிர்வரும் மே மாதம் விசாரணை பொறிமுறை குறித்த எமது திட்டங்களை நாங்கள்  வெளிப்படுத்துவோம்  என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

காணாமல் போனோரில் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம். ஆனால் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதனை கண்டுபிடிக்கவேண்டும்.   மக்களுக்கு இது தொடர்பில் பதில் கூறவேண்டும்.  இதனை நாங்கள்  செய்வதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்றும்  பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

அதிகாரங்களை துஷ்பிரயோகம்   செய்திருந்தால் எமது நாட்டில் யாராக இருந்தாலும், அவர்கள்  சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள்.   இவை பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே விசாரிக்கப்படலாம்.  அல்லது ஆணைக்குழுவினால் விசாரிக்கப்படலாம்.  இலங்கையின் சட்டத்தையாராக  மீறியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

செனல் 4  நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். 

செவ்வியின் முழு விபரம் வருமாறு,

கேள்வி : பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன?  

பதில் : பொறுப்புக்கூறல் தொடர்பான  வேலைத்திட்டங்களை  நாங்கள்  ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றோம்.  நல்லிணக்க செயற்பாடுகளையும்  அந்தவகையிலேயே முன்னெடுக்கின்றோம்.  ஜூன்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்பாக   எமது பொறுப்புக்கூறல் தொடர்பான   யோசனைகளை  நாங்கள்   முன்வைப்போம். 

கேள்வி : எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விசாரணை பொறிமுறையில்  வெளிநாட்டு தலையீட்டுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளாரே?

பதில் : நாங்கள் இந்த விடயத்தை முழுமையாக நிராகரித்துவிடவில்லை.    ஜனாதிபதியும் இந்த விடயத்தை முழுமையாக நிராகரித்துவிடவில்லை.  இது நீண்டகால செயற்பாடாகும்.  ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை விடயத்தில் நாங்கள் வழங்கிய  அர்ப்பணிப்புக்கு  அமைவாக  செயற்படுவோம். அந்த நிலைப்பாட்டில் நாங்கள்  உறுதியாக இருக்கின்றோம்.  

கேள்வி:  நம்பிக்கை  என்பது இங்கு முக்கியமான விடயமல்லவா?

பதில்: நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இது குறித்து யாரும் அச்சப்படவேண்டியதில்லை.   எல்லோரையும் விடவும் இந்த விடயத்தில் கழுத்தை நீட்டியவன் நான்தான். 

சனல் 4 :  நாங்கள் அதனை அங்கீகரிக்கின்றோம். 

பிரதமர் ரணில்: எதிர்வரும் மே மாதம்  இங்கு முன்வைக்கப்படுகின்ற அனைத்து சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்படும். 

கேள்வி:-  ஐக்கியநாடுகளின் மதிப்பீட்டின் படி 40 ஆயிரம்  இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதே? 

பதில்:- உண்மையில் அந்த நேரத்தில்  அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.  40 ஆயிரம் என்ற விடயத்தில்  எம்மிடம் கேள்விக்குறியொன்று உள்ளது. ஆனால் உண்மையான  எண்ணிக்கையை  கண்டுபிடிப்பதற்கு நாங்கள்  முயற்சி செய்கின்றோம். 

கேள்வி:- நாம் இந்த விடயத்தை  வெளிப்படுத்திய போது அதனை பொய்யென்று கூறினார்களே? . 

பதில்:-  எனக்கு உங்களின் முயற்சி தெரியும்.  அது முன்னாள் அரசாங்கம்.  யுத்தத்தின் போது  இழப்புக்கள்  ஏற்பட்டிருந்தமை எமக்குத் தெரியும். நிச்சயமாக நடந்திருக்கும்.  ஆனால் எமக்கு எண்ணிக்கை தெரியாது.  ஆனால்  என்ன எண்ணிக்கை என்பதை கண்டுபிடித்து நாங்கள் சர்வதேசத்துடன் இணைகிறோம்.  

கேள்வி:- காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நீங்கள் கூறினீர்கள்.  தடுப்பு முகாம்கள் தொடர்பில் ?

பதில்:- தடுப்பு முகாம்கள் எங்கும் இல்லை. வடக்கிலும் இல்லைஇ தெற்கிலும் இல்லை. 

கேள்வி:- நீங்கள் உறுதியாக கூறுகிறீர்களா?

பதில்:- உறுதியாகவே கூறுகிறேன். 292 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை எமக்கு தெரியும். அதுமட்டும் தான். 

கேள்வி:- சரணடைந்தவர்களை இப்போது காணமுடியவில்லை.  காணாமல் போனோவர்கள் இறந்திருக்கலாம் என நீங்கள் கூறுகிறீர்கள். என்ன நடக்கிறது? 

பதில்:- அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம். உயிரிழந்திருப்பதற்கான சாத்தியமே காணப்படுகின்றது. 

கேள்வி:- தடுப்பிலிருந்தபோது உயிரிழந்திருக்கிறார்களா? ஏன்  இப்படி ? 

பதில்:- அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டு பிடிக்கவேண்டும்.  மக்களுக்கு பதில் தேவைப்படுகிறது. 

கேள்வி:- இதில் நீங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளீர்களா?

பதில்:- அர்ப்பணிப்புடன் உள்ளேன்.

கேள்வி:-  நிறைய குற்றச்சாட்டுக்கள் ராஜபக்ஷ மீது  சுமத்தப்படுகின்றன.  அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:-  அதிகாரத்தை துஷ்பிரயோகம்   செய்திருந்தால் எமது நாட்டில் யாராக இருந்தாலும்இ அவர்கள்  சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள்.  ஆனால் அதிகளவு துஷ்பிரயோகங்கள்  குற்றச்சாட்டுக்களாக இல்லை.  இவை பாராளுமன்றத் தெரிவுக்குழு ஊடாகவே விசாரிக்கப்படலாம்.  அல்லது ஆணைக்குழுவினால் விசாரிக்கப்படலாம்.  இலங்கையின் சட்டத்தையாராக  மீறியிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.