ஈரானில் கடந்த ஜுன் மாதம் ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி கொன்ற நபருக்கு பொதுமக்கள் முன் பகீரங்கமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஏழு வயது அடெனா அஸ்லானி என்ற சிறுமி கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி காணாமல் போனதைத் தொடர்ந்து பொலிஸாருக்கு அவரின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து பல கோணங்களிலும் விசாரணைகளை முடக்கி விட்டு தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் குறித்த சிறுமியின் சடலம் ஜபர்சதெஹ் எனும் நபரின் வீட்டு வாகன தரிப்பிடத்திலிருந்து மீட்கப்பட்டது.

சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஜபர்சதெஹ் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

பொலிஸாரின் குறுக்கு விசாரணைகளில் சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி  கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்டதால் குறித்த வழக்கு விசாரணையானது ஒரு வார காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி ஜபர்சதெஹ்ற்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என அர்தெபில் மாகாண உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்தே 42 வயதான ஜபர்சதெஹ் சிறிய வடமேல் நகரான பர்சபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது சதுக்கம் ஒன்றில் தூக்கில் போடப்பட்டார்.

குறித்த மரண தண்டனை தொடர்பாக அர்தெபில் மாகாண அரச வழக்கறிஞர் நாஸார் அடபாடி குறிப்பிடுகையில், 

"எதிர்காலத்தில் இவ்வாறானதொரு குற்றத்தை எவரும் செய்யக் கூடாது என்பதற்காகவும், செய்பவர்களுக்கு இது தான் கதி என்று உணர்த்து வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் மன நிம்மதிக்காகவுமே பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.